வெள்ளி, 17 ஜனவரி, 2014

சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும் காலம்... வரும் மக்களவைத் தேர்தல் களம். எப்படி?


ஊடகங்களும் அரசியல் நோக்கர்களும் வாக்கு வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டு கூட்டல் கழித்தல் கணக்குகள் போட்டு கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் வாக்கு வங்கிக் கணக்குகள் தொகுதிப் பங்கீட்டை மட்டுமே தீர்மானிக்கின்றன. வெற்றி தோல்வியைக் கட்சிசாராத மக்களே தீர்மானிக்கிறார்கள்.

தமிழகத்தைப் பொறுத்தவரையில் சுமார் 60% அளவுக்கு ஒவ்வொரு தனிப்பட்ட கட்சிகளின் வாக்கு சதவீதத்தையும் தாண்டி கட்சி சாராத மக்களின் வாக்கு சதவீதமாக உள்ளது.

இந்த 60% வாக்குகள்தான் ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. அணிக்கும், தி.மு.க. அணிக்கும் பிரிந்து போய் அல்லது ஒரு தரப்பாகக் குவிந்து வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற ஆற்றலாக இருக்கின்றன.

எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் வாக்கு சதவீதமும் 10% க்கு அதிகமாக இல்லை என்பதே யதார்த்தமான நிலையாகும்.

தேர்தலில் இரண்டே வலுவான அணிகள் என மக்களால் கருதப்படும் கூட்டணிகள் போட்டியிடும் போது கட்சிசாராத மக்களின் வாக்குகளான 60% வாக்குகள் இவ்விரு அணிகளுக்குள்ளேயே பங்கிடப்பட்டு விடுகின்றன. மூன்றாவதாக அல்லது அதற்குப் பின் வரும் கட்சிகளுக்கு இவ்வாக்குகள் விழுவதில்லை.

இம்முறை பா,ஜ,க., மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளடங்கிய மாற்று அணி வலுவாகக் களமிறங்குவதாலும் மத்தியிலே காங்கிரசுக்கு மாற்றாக வரும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதாலும் பெருவாரியான கட்சிசாராத மக்களின் வாக்குகளை இவ்வணி பெறும் வாய்ப்பிருக்கிறது.

வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என கணிப்புகள் கூறி வந்தாலும், பா.ஜ.க.அணி அதிக அளவிலான கட்சிசாராத மக்களின் வாக்குகளைப் பெறுவதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் என்பது திண்ணம்.

கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, ம.தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டுகள், சிறுபான்மை அமைப்புகள், அடங்கிய வானவில் கூட்டணி, தமிழீழ இனப்படுகொலைச் செய்திகளால் நாடே கொந்தளித்துப் போய்க் கிடந்த நிலைமை இவற்றையெல்லாம் தாண்டி தி.மு.க. காங். அணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அச்சமயத்தில் வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் அ.தி.மு.க. அணியே அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப் பட்டிருந்தது.

ஆனால், தி.மு.க. அணி 27 இடங்களிலும், அ.தி.மு.க. அணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. என்ன காரணம்? 

தி.மு.க. காங். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கூட்டணி -  அரசு அதிகாரங்களைப் பயன்படுத்தினார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும் அ.தி.மு.க. அணியில் தேசியக் கட்சியொன்று காங்கிரசுக்கு மாற்றாக இல்லை என்பது மிக மிக முக்கியக் காரணமாக இருந்தது.

தி.மு.க. அணி பிரதமராக மன்மோகன் சிங் மீண்டும் வருவார் எனப் பிரச்சாரம் செய்தபோது, யார் பிரதமர் வேட்பாளர்? அ.தி.மு.க. அணி வெற்றிபெற்றால் டெல்லியிலே யாரைத் தேர்ந்தெடுப்பார்கள்? வெறும் 39 உறுப்பினர்களைக் கொண்டு இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்கிற குழப்ப மனநிலை அ.தி.மு.க., ம.தி.மு.க. அணியை வெகுமளவு பாதித்தது.

இம்முறை இதே குழப்ப மனநிலை தி.மு.க. அணிக்கும் (காங்கிரஸ் இவ்வணியில் இணைத்துக் கொள்ளப்படாத நிலையில்) அ.தி.மு.க. அணிக்கும் இருக்கப்போகிறது.

தமிழின விரோத காங்கிரஸ் மத்தியிலே தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சியிலே இருந்து வருகிறது. மீண்டும் வருவோம் என்கிற எண்ணம் அவர்களுக்கே இல்லை. மக்கள் மாறுதலை விரும்புகிறார்கள். காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைளால் நொந்து போயுள்ள மக்கள் மீண்டும் காங்கிரசோ அல்லது காங்கிரசின் ஆதரவு பெற்ற அணியோ ஆட்சியிலமர ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள்.

ஒருவேளை காங்கிரஸ் பெரும்பான்மை பெறாத சூழலில் தி.மு.க. அணியோ, இடதுசாரிகளை உள்ளடக்கிய மூன்றாவது அணியோ காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள் என்பதை அனைத்து மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.

தமிழக மக்களைப் பொறுத்தவரையில் மத்தியிலோ, மாநிலத்திலோ வெற்றிபெறும் என்று கருதுகிற அணிக்கு வாக்களித்து தாங்களே நேரடியாகப் பிரதமரையோ, முதல்வரையோ தேர்ந்தெடுத்தோம் என்கிற மனநிறைவு அடைவதே வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த உளவியல் காரணி பா.ஜ.க., ம.தி.மு.க. அடங்கிய அணிக்கு மிகவும் வலுச் சேர்க்கும். இவ்வணியில் வேறு சில கட்சிகள் சேரும் பட்சத்தில் இவ்வணியே தமிழகத்தில் முதல் அணியாகவும் வரும் வாய்ப்பிருக்கிறது.

எனவே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும்!

சனி, 21 டிசம்பர், 2013

தமிழகத்திற்கெதிராகத் தொடரும் காங்கிரசின் துரோகம்: கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரைகளுக்குத் தடை.

கேரள அரசியல்வாதிகளின் நெருக்கடிகளுக்கு இடம் கொடுத்து கஸ்தூரி இரங்கன் அறிக்கையின் பரிந்துரைகளுக்கு வழங்கிய ஒப்புதலை இரத்து செய்து சோனியா தலைமையிலான காங்கிரஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.
இதனையடுத்து கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கையின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் வழங்கிய தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜெயந்தி நடராசன் பதவி விலகி இருக்கிறார்.
தமிழகத்திற்கு இப்படியொரு அப்பட்டமான துரோகத்தைச் செய்ததன் மூலம் என்ன சொல்ல வருகிறது காங்கிரஸ்?
கேரளாவில் இருந்து கிடைக்கும் வாக்குகள் எங்களுக்குப் போதும். தமிழகத்தில் இருந்து எங்களுக்கு உறுப்பினர்கள் தேவையில்லை என்பதாகத்தானே இருக்க முடியும்?
தமிழகத்தைச் சேர்ந்த பிற காங்கிரஸ் அமைச்சர்களும், ஆளும் கட்சி, ஆண்ட கட்சி, ஆள நினைக்கும் கட்சிகளும் வேடிக்கை பார்த்ததால் நடந்த இத்துரோகத்திற்கு அவர்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.
மறுமலர்ச்சி தி.மு.க. கஸ்தூரி ரங்கன் குழு ஆய்வுகளையும் பரிந்துரைகளையும் உன்னிப்பாகக் கவனித்து வந்தது. பரிந்துரைகள் வெளியானதும் வரவேற்றது. பரிந்துரைகளை நிறவேற்றக் கோரி கம்பத்தில் மக்களைத் திரட்டி மிகப்பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
அவை அனைத்தையும் பாழாக்கி கேரள சதிக்கு உடந்தையாகி மத்திய காங்கிரசு அரசு தமிழகத்திற்குத் துரோகத்தைப் பரிசாக வழங்கியுள்ளது.
வைகோ வெல்வதும் டெல்லி செல்வதும் மிக மிக அவசியம் என்பதை உணர்த்தும் நிகழ்வு இது.

தொடர்புடைய சுட்டிகள்:




சனி, 14 டிசம்பர், 2013

விறுவிறுப்பு கட்டுக்கதையும் - காங்கிரஸ், கருணாநிதி சொந்த செலவில் வைத்துக் கொண்ட சூனியமும்.

நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக சென்னையில் ”ஈழத்தமிழர்கள் குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு” என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தினார்.

ஒட்டுமொத்தத் தமிழகமும் அசந்து போய் அடேங்கப்பா... என்று மூக்கில் விரலை வைக்குமளவுக்கு இலங்கையில் இராசபக்சே அரசு இனப்படுகொலை செய்தது, போர்க்குற்றம் செய்தது, மனித உரிமைகளை மீறியது, மனித குலத்திற்கெதிரான தீங்குகளைச் செய்தது என்றெல்லாம் புகார் வாசித்தார். குதிரை ஓடிவிட்டபிறகு லாயத்தை எதற்கப்பா மூடுகிறான் இந்தக் கோமாளி என்கிற அளவிலேதான் தமிழக மக்களாலும் உலகத் தமிழர்களாலும் பார்க்கப்பட்டது.

இந்திய அரசின் நிலைப்பாட்டை டெல்லியிலே பத்திரிக்கையாளர்களை அழைத்துத் தெரிவிக்காமல் சென்னையிலே ஒரு நட்சத்திர விடுதியிலே மூடிய அரங்கில் ஒரு சில தமிழகச் செய்தியாளர்களை மட்டும் அழைத்து இந்திய அரசின் நிலைப்பாடு என்று ஒரு பித்தலாட்ட அறிவிப்பை வெளியிட்டார் சிதம்பரம். 

தமிழக ஊடகங்கள் மட்டுமே அவர்களது இலக்கு. தி இந்து போன்ற தமிழக ஊடகங்களே கூட சிதம்பரம் பேசிய பேச்சைச் சுத்திகரிப்பு செய்து அதிலே இருந்த இனப்படுகொலை என்கிற சொற்களையெல்லாம் நீக்கிவிட்டு உப்புசப்பில்லாமல் வெளியிட்டு காங்கிரசையும், ப.சிதம்பரத்தையும் விட நாங்கள் இராசபக்சேவுக்கு விசுவாசமானவர்கள் என்று பறைசாற்றிக் கொண்டார்கள். வேறு மாநில ஊடகங்களோ, வட இந்திய ஊடகங்களோ இச்செய்தியை வெளியிட்டு இந்திய அளவில் விவாதங்களைக் கிளப்பிவிடாத அளவிற்கு மிகக் கவனமாக ஒழுங்கு செய்தார்கள்.

இது ஒருபுறமிருக்க அதே கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் அல்லக்கை மயிலாடுதுறை கே.எஸ்.அழகிரி வைகோ மற்றும் பழ.நெடுமாறன் குறித்து பல்வேறு அவதூறான செய்திகளைப் பேசினார். அதாவது வைகோ-வும், நெடுமாறனும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்குத் தவறான நம்பிக்கையூட்டி அதன் மூலம் ஈழத்திலே நடைபெற்ற இனப்படுகொலைகளைத் தடுக்கத் தவறினர் என்பது அவரது குற்றச்சாட்டின் சாரம்.

ஈழத்திலே நடைபெற்ற இனப்படுகொலையை வைகோ-வும், பழ.நெடுமாறனும் தடுக்க இயலவில்லை என்பது புதிய செய்தியா? அவர்கள் கைமீறித்தானே அவ்வளவும் நடந்தது. அவர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்தத்தமிழினமும் இலங்கையிலே நடைபெற்ற போர் நிறுத்தப்படவேண்டும் தமிழ் மக்கள் காக்கப்படவேண்டும் என்றுதானே முட்டிமோதி முயன்றது பிறகு அது முடியாமல் போனது. கருணாநிதி தி.மு.க., சோனியா காங்கிரஸ், இராசபக்சே கும்பல்,போரைத் நிறுத்த முயற்சித்த தமிழர்களின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து அப்படியொரு இனப்படுகொலையை நடத்தி முடித்தது.

ஒன்றரை இலட்சம் பேர் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முயன்றவன் முடியாமல் தோற்றதாலே குற்றவாளி.. ஆனால் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்றவன் நிரபராதியா? எந்த ஊரிலே இப்படியொரு நியாயத்தை மேடை போட்டுப் பேச இயலும். ஆம்... அறம் வளர்த்த, நீதி வளர்த்த தமிழகத்தில் மட்டுமே முடியும்.

அப்படியான அழகிரியின் பேச்சை சிறுபிள்ளைகள் கூட நம்பாத காரணத்தால் அது ஒட்டு மொத்தமாக தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ்காரன்  போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டதாகவும் பிரபாகரன் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் ஒரு புனை சுருட்டை அவிழ்த்து விட்டால் எவனாவது நம்புவானா? போரை நடத்தியதே காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதானே?

போரை நிறுத்துவதற்காக சில நிபந்தனைகளை விதித்ததாகவும் அந்த நிபந்தனைகளை (வைகோ, நெடுமாறன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்) பிரபாகரன் ஏற்கவில்லை என்றதால் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்றோம் என்று ஒரு மத்திய அமைச்சர் வெளிப்படையாகப் பேசியதிலிருந்தே இவர்கள்தான் போரை நடத்தினார்கள் என்பதும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதும் புலனாகிவிட்டதே..

”காங்கிரசிலே மத்திய அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரமே கட்சியை விட்டும் பதவியை விட்டும் விலகிவிடு இல்லையேல் உன்னைக் கொன்று விடுவோம்” என்று ஒருவன் கூறுவதும், பிறகு பதவி விலக மறுத்ததால் அதே ஒருவன் ப.சிதம்பரத்தைக் கொன்று விட்டானென்றால் அது குற்றமில்லையா?

அவ்வாறு ஒரு கொலையைச் செய்துவிட்டு நான் விதித்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளாததால் கொன்றேன் என்று தனது செயலை நியாயப் படுத்துவானென்றால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?

புலிகள் அமைப்பு உருவானதே தமிழீழ விடுதலை கோரித்தான். அந்தக் கோரிக்கையிலே என்ன தவறு. அந்தக் கோரிக்கையைக் கைவிடு இல்லையென்றால் புலிகள் அமைப்பையும் ஒட்டு மொத்தத் தமிழர்களையும் கொன்று குவிப்பேன் என்றெல்லாம் சொல்லி ஒரு இன அழிப்பை காங்கிரசும், இராசபக்சேவும் கூட்டணி சேர்ந்து நடத்தியதும் அதற்கு கருணாநிதி திமுகவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் துணை போனதற்கும் இந்தக் கருத்தரங்கில் பேசியவையே சாட்சிகளாகும்.

வங்கதேசத்தில் கடந்த 1971ம் ஆண்டில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக 2010ம் ஆண்டிலேதான் சர்வதேச குற்றவிசாரணை ஆணையமே அமைக்கப்பட்டது. அதன் விசாரணை முடிவில் போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டு வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் காதர் முல்லா 12-12-2013 அன்றுதான் தூக்கிலிடப்பட்டார். தூக்குத்தண்டனையையோ, மரண தண்டனையையோ ஆதரிக்காத போதும் போர்க்குற்றங்களுக்குத் தண்டனை உறுதி என்கிற செய்தியை மட்டும் அந்நிகழ்விலேயிருந்து எடுத்துக் கொண்டு நம்பிக்கையைப் பெறுவோம்.

ஆகவே காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. இலங்கை இனப்படுகொலையில் தொடர்புடைய ப.சிதம்பரம், கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் அனைவரும் விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப் படுவது உறுதி.

ப.சிதம்பரத்தின் புரட்டரங்கம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கிய நேர் முகம். 





விறுவிறுப்பு என்னும் இணையதளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத் துவங்கப்பட்டு ரிஷி என்கிற தனிமனிதரால் நடத்தப்பட்டுவரும் இணையதளம் ஆகும். அதற்கென்று தனியாக செய்தி ஆதாரங்களோ, எக்ஸ்குளூசிவான செய்தி மூலங்களோ கிடையாது. உலகமெங்குமிருந்து செய்தியோடைகளில் கிடைக்கும் செய்திகளுக்கு வார்த்தை ஜோடனை செய்து வெளியிட்டு வரும் ஊடகம் ஆகும். தமிழகச் செய்திகளைப் பொருத்தவரை தட்ஸ்தமிழ்தான் இந்த விறுவிறுப்பு தளத்திற்கு முக்கிய செய்தி மூலமாகும்.

ப.சிதம்பரம் நடத்திய புரட்டு அரங்கம் பற்றிய செய்திகள் தமிழக ஊடகங்களில் வெளியானதும் அந்த மொட்டைச் செய்திக்கு கை,கால், கண், காது மூக்கு என்று அங்கங்கள் வைத்து சோர்ஸ், சோர்ஸ் என்று சில நபர்களின் பெயரையும் பிறவற்றை பூடகமாகவும் வைத்து வழக்கம்போல ஒரு கற்பனைக் கதையை சுவராசியமாக அனைவரும் இரசிக்கும் வண்ணம் வெளியிட்டது விறுவிறுப்பு தளம். 

தமிழக மக்களுக்கு எப்போதுமே இருக்கும் இலங்கைப் பிரச்சினை தொடர்பான செய்திகளில் காட்டும் ஆர்வத்தை வைத்தே கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் தளம் இப்படியொரு வாய்ப்பைத் தவறவிடுமா?

அவர்களுக்கு இருக்கும் சோர்ஸ்கள் முழுமையும் இராசபக்சேவிடம் இடம் மாறிய குமரன் பத்மனாபன், கருணா மற்றும் ஜெயராஜ் போன்ற இலங்கை உளவுத்துறையைச் சேர்ந்த சில தமிழர்கள் மட்டுமே. புலிகள் தரப்பிலோ தமிழகத்திலோ அவர்களுக்கு சோர்ஸ் எதுவும் கிடையாது.

விறுவிறுப்பு தளத்திடம் செய்திக்கான சோர்ஸ் இருந்திருக்குமானால் இது போன்ற செய்திகள் முதலில் விறுவிறுப்பு தளத்திலே வெளியாகியிருக்கவேண்டும் பிறகு அதனை மேற்கோள் காட்டி கே.எஸ்.அழகிரி பேசியிருக்க வேண்டும். பிறகு அதனை ஆமோதித்து ப.சிதம்பரம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்பரசண்டிகள் கோட்டைவிட்டுவிட்டார்கள். :-)

வழக்கம்போல செய்தியோடையில் கிடைத்த தகவல்களுக்கு ஜோடனை செய்து விறுவிறுப்பு ஒரு கட்டுக் கதையை வெளியிட அதிலுள்ள உள்பொருள் என்ன? இல் பொருள் என்ன? என்பது பற்றி எதுவும் ஆராயாமல் என்னவோ அக்கட்டுரை வைகோ-வுக்கும் பழ. நெடுமாறனுக்கும் எதிராக இருப்பதாகக் கருதிக் கொண்டு பரபரவென்று அதைப் பகிர்ந்து வருகிறார்கள் கருணாநிதி தி.மு.கவினர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி இரசிகர்கள். 

ஆனால் அந்தக் கட்டுரை முழுவதுமே சொந்தச் செலவில் சூனியம். எப்படி?

1. விடுதலைப் புலிகளை அவர்களது அடிப்படை உரிமைக் கோரிக்கையைக் கைவிடுமாறு இந்திய அரசும், ப.சிதம்பரம், கருணாநிதி மகள் கனிமொழி ஆகியோர் மிரட்டல் விடுத்து ”பிளாக் மெயில் செய்தது உண்மையென்றாகிறது.

2. அவ்வாறான ஒரு மிரட்டல்/ “ப்ளாக் மெயிலுக்கு” விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒத்துக் கொள்ள, அடிபணிய மறுத்ததால் இராசபக்சேவுடன் சேர்ந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை இந்திய காங்கிரஸ் அரசும், ப.சிதம்பரம், கருணாநிதி திமுக ஆகியோர் துணையுடன் இனப்படுகொலை செய்து முடித்ததும் உண்மையென்றாகிறது.

3. தமிழீழக் கோரிக்கை நியாயமானது என்று இலங்கையில்  இப்போதுள்ள நிலைமையும் கூட நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டிவரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல வைகோ, பழ நெடுமாறன் ஆகியோரும் தமிழீழ விடுதலை ஒன்றே தீர்வு என்று நம்பியதோடு எந்த நிலையிலும் அதனை விட்டுத் தரத் தயாராக இருந்தது இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. வைகோ-வும் நெடுமாறனும் இன்றும் சொல்லிவரும் அதே கொள்கையைத்தான் அன்றும் சொல்லியிருக்கின்றனர். அதிலென்ன தவறு? கொள்கையைச் சொன்னால் கொன்று விடுவேன் எனச் சொல்லி மிரட்டியதும் மிரட்டலுக்கு அடிபணியாததால் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததும்தானே தவறு? 

4. இறுதிவரை வைகோ-வும் பழ.நெடுமாறன் அவர்களும்தான் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் ஆதரவு தருபவர்களாகவும் இருந்தனர் என்பதும் புதிதாய் முளைத்த காளான்கள் அண்ணன் சொன்னார், அண்ணன் சொன்னார் என்று சொல்வதெல்லாம் புருடா என்பதும் புலனாகிறது.

5. ப.சிதம்பரம், கருணாநிதி, கனிமொழி ஆகியோர் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவற்றிற்குத் துணைபோனவர்கள் என்பதும் உறுதியாகிறது. பின்னாளில் போர்க்குற்ற விசாரணை நடைபெறும்போது இவர்கள் பேசியதெல்லாம் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்பது உறுதி.

வியாழன், 12 டிசம்பர், 2013

இ.பி.கோ. 377 ஓரினச்சேர்க்கைக்கு மட்டுமா தடை விதித்தது? மனித உரிமைகளுக்கல்லவா விடை கொடுத்தது!

நேற்று 11-12-13 அன்று இந்திய உச்ச நீதி மன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆம். இந்தத் தீர்ப்பு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிந்து வைக்கப்படும்.

படம் உதவி:  Manjul Toons

இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்ல என்பது பல்வேறு தருணங்களில் மெய்ப்பிக்கப்பட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை அதே உண்மையை நம் கண் முன்னே கெக்கலி கொட்டிக் காண்பிக்கப் பட்ட நாள்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள். இனிமேலும் இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடு என்று யாரேனும் சொல்ல முடியுமா?

பிரச்சினை இதுதான். இந்திய உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது.

எந்த அடிப்படையில்?

1. எயிட்ஸ் பரவும் வாய்ப்பு.

ஆண் - பெண் விபச்சார உடலுறவால் 4.94% 
ஆண் - ஆண் உடலுறவால் 7.23%
ஊசி மருந்து பயன்படுத்துபவர்களிடையே 10.30%
என அவர்களது தீர்ப்பிலே ஒரு புள்ளிவிபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளிவிபரங்கள் சரியாக இருந்தால் கூட அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் உள்ளடிக் கருத்துடையது. 

ஆண் பெண் உடலுறவில் விபச்சாரத்தின் மூலமாக மட்டுமே அதாவது ஒரு ஆண் பல பெண்களுடனோ அல்லது ஒரு பெண் பல ஆண்களுடனோ உடலுறவு வைத்துக் கொண்டால் மட்டுமே அதுவும் “பாதுகாப்பற்ற” உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே எயிட்ஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உறவில் எயிட்ஸ் வருவதற்கோ, பரவுவதற்கோ வாய்ப்பில்லை.

ஆண் - ஆண் உறவும் அத்தகையதே என்பதை எளிதாக மறந்து விட்டு ஒட்டு மொத்தமாக எல்லா ஆண்-ஆண் உறவிலும் எயிட்ஸ் பரவும் என்பதுபோலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மை என்ன? ஆண்-ஆண் உறவிலும் ஒருவனுக்கு ஒருவன் என்கிற உறவில் எயிட்ஸ் பரவ வாய்ப்பில்லை. ஒரு ஆண் பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டாலும்கூட பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படுமாயின் அங்கே எயிட்ஸ் என்கிறபேச்சுக்கே இடமில்லை. ஆண்-ஆண் உறவு என்பதே விபச்சாரம் என்பது போலச் சித்தரிப்பது முட்டாள்த்தனமானது. ஆண்-ஆண் உறவிலும் பெருமளவு ஒருவனுக்கு ஒருவன் என்பதும் ஆண்-பெண் உறவை விட அதிக அளவு “பொசசிவ்” ஆன உறவுகள் என்பதும்தான் உண்மை. ஆண் ஆண் உறவில் துரோகமிழைக்கப்படுமாயின் கொலை வரை நீண்ட சம்பவங்கள் பலவற்றை நாம் கேட்டிருக்கிறோம். ஆக எயிட்ஸ் என்கிற வாதம் எளிதில் அடிபட்டுப் போய்விடுகிறது.

ஆண் -பெண் ஒருவருக்கொருவர் சம்மதத்தோடு உறவு கொள்வதில் தவறில்லை. உறவின்போது பாதுகாப்பைக் கடைப்பிடியுங்கள் உறையைப் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துவது போலவே ஆண் -ஆண் நண்பர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும்.

2. இயற்கைக்கு மாறான உடலுறவு

ஆண்-ஆண் உறவு இயற்கைக்கு மாறானதுதான். அதே நேரத்தில் இயற்கைக்கு மாறான எதை மனிதன் செய்யவில்லை அதில் எதை இந்தியச் சட்டம் அனுமதிக்கவில்லை என்கிற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்.

அடிப்படையில் உடையணிவதே இயற்கைக்கு மாறானதுதான். அம்மணமாகத் திரிவதுதான் இயற்கை.

பிற விடயங்களை விட்டுவிடுவோம் பாலுறவு குறித்த வகைகளிலேயே ஆண், பெண் சுய இன்பம் மற்றும் பெண்-பெண் உறவு போன்றவைகூட இயற்கைக்கு மாறானவை தானே? சுய இன்பத்தையோ, பெண்-பெண் கூடுவதையோ தடை செய்யவோ ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கவோ நீதி மன்றங்கள் முன்வருமா? :-) 

பெண்-பெண் கூடுவதிலோ, சுய இன்பத்திலோ உறுப்புகளுக்கிடையே “பெனிட்ரேசன்” இல்லை எயிட்ஸ் வர அல்லது பரவ வாய்ப்பில்லை எனக் கருதுவோர் மீண்டும் மேலே உள்ள பத்தியைப் படிக்கவும். பாதுகாப்பான உறவிலோ, ஒருவனுக்கு ஒருவன் என்கிற உறவிலோ எயிட்ஸ் என்னும் பேச்சுக்கே இடமில்லை.

ஒரு ஆணுக்கு ஆணோ.. பெண்ணோ.. யார் நண்பராக இருப்பதென்பதையும் அவர்களுக்கிடையேயான நட்பு எந்த அளவுக்கு இருக்கவேண்டுமென்பதிலோ நீதிமன்றம் எவ்வாறு தலையிடமுடியும்?

ஆக.. எந்த முகாந்திரமுமில்லாமல் ஏன் இந்தத் தீர்ப்பு? இங்கேதான் மத அடிப்படைவாதிகள் வருகிறார்கள். வழக்கமாக நீதிமன்றங்களிலும் மக்கள் மன்றங்களிலும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளும் எல்லா மதவாதிகளும் இவ்விடயத்தில் ஒன்றாகக் கைகோர்த்துள்ளனர். எல்லா மதப் புத்தகங்களிலும் ஆண்-ஆண் உறவு தவறானது என அறிவிக்கப்படுள்ளதாம். மனித உரிமைகளைவிட மத உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடு எவ்வாறு மதச் சார்பற்ற நாடாக இருக்க முடியும்.

நீதி மன்றங்களிலே வாதிகள் இருவர் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பின் அரசு வாக்குகளைக் குறிவைத்து மதச்சார்பற்ற நிலை எடுத்து நூறாண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்கும் அரசும், நீதிமன்றமும் மதவாதிகள் ஒன்று சேர்ந்து வரவும் மனித உரிமைகளின் மென்னியை முறிக்கிற வேலையில் இறங்கிவிடுகின்றன. இனி எவராவது இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொல்ல இயலுமா? மத அடிப்படைவாதிகளை மகிழ்விக்க உச்சநீதிமன்றம் இப்படியொரு பிற்போக்கான தீர்ப்பை வழங்கியதன் உலக அரங்கிலே மிகப்பெரும் தலைகுனிவைச் சந்தித்துள்ளது இந்தியா.

எத்தனையோ மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த வேலைகள் மூலையில் கிடக்க இனி பாராளுமன்றத்திலே அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே மனித உரிமை காக்கப்படும் துர்பாக்கிய நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது இந்திய உச்சநீதி மன்றம்.

இந்திய சமூகத்தில் ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதென்பதே இன்னும் ஏட்டளவிலேதான் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையிலே காதலென்றாலே குடும்ப கவுரவம், சாதி, மதம் லொட்டு லொசுக்கு எனச் சொல்லி கிட்டத்தட்ட அத்தனை காதலும் நசுக்கப்படுகிறன. அனைத்துக் காதலும் கள்ளத்தனமாகச் செய்ய வேண்டிய இழிவான நிலையிலேதான் வைத்திருக்கிறது இந்திய சமூகம். இதிலே நீதி மன்றங்கள் வந்து பாலியல் வறட்சியில் தவிக்கும் ஆணுக்கு வேற்று பாலின இணையை அதாவது பெண்களைப் பிடித்துத்தரும் வேலையைச் செய்து தருமா? மூன்றாம் பாலின நண்பர்கள் இருவரோ அல்லது வேறு ஆணுடனோ சேர்ந்து வாழ்வது குற்றம் என்று சொல்ல முடியுமா?

அப்படியென்றால் நீங்கள் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறீர்களா என்று என்னைக் கேட்டீர்களானால் எனது பதில்... அதிலே ஆதரிக்கவோ.. எதிர்க்கவோ ஒன்றுமில்லை என்பதுதான்.

திங்கள், 9 டிசம்பர், 2013

கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் - ஒரே தொகுதியில் போட்டியிடத் திராணியிருக்கிறதா?



ஜெயலலிதா ஆட்சியமைத்தால் கருணாநிதியும் கருணாநிதி ஆட்சியமைத்தால் ஜெயலலிதாவும் சட்டப்பேரவைக்குச் செல்வதேயில்லை. இதற்கிடையில் திடீர் உப்புமா, திடீர் நூடுல்ஸ் போல திடீரென்று எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்தும் அது என்னவோ சட்டப்பேரவைக்குச் செல்லாமல் இருப்பது ஒரு பெருமை எனக் கருதிக் கொண்டு சட்டப்பேரவைக்குச் செல்வதேயில்லை. 

துளியும் வெட்கமோ, கூச்சமோ இன்றி மாதாமாதம் கையெழுத்திட்டு சம்பளம் வாங்கத் தயங்குவதேயில்லை இந்த வெற்று உறுப்பினர்கள். எதிர்க்கட்சித் தலைவர் வெற்றி பெற்ற தொகுதி என்கிற வகையில் ஆளுங்கட்சியால் எவ்வித நலத் திட்டங்களுமின்றி புறக்கணிக்கப் பட்டு இவர்களைத் தேர்ந்தெடுத்த தொகுதிக்கும், தொகுதி மக்களுக்கும் எவ்விதப் பயனுமின்றிப் போகிறது. 

கடந்த காலங்களிலெல்லாம் கட்சி தோற்றாலும் வென்றாலும் அரசியல் கட்சித் தலைவர்கள் சட்டப்பேரவைக்குச் செல்லவேண்டும். தலைவர் என்கிற முறையில் ஜனநாயகக் கடமையாற்றுகிற வாய்ப்பைத் தருகிற அரசியல் நாகரீகம் வேண்டும் என்கிற வகையில் முதல்வர் பதவிக்குப் போட்டியிடுகிறவர்கள் எதிரும் புதிருமாக ஒரே தொகுதியில் போட்டியிடுவது தவிர்க்கப்பட்டு வந்தது.

இப்போது நாகரீகமாவது புடலங்காயாவது. ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொள்வதுமில்லை. சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டாலும் முகத்தைப் பார்க்கத் திராணியின்றி அவைக்கு வருவதில்லை.

பிறகென்ன ”டேசு”க்கு இவர்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினர் பதவி?

கட்சி தேர்தலில் தோற்குமானால் தலைவரும் தோற்று வீட்டிலே இருக்கவேண்டியதுதானே.. தலைவர்கள் என்கிற பெயரில் வெற்றிபெற்று சட்டப்பேரவைக்குச் செல்லாமல், ஒரு உறுப்பினர் பதவியையும் வீணாக்கி, மாதாமாதம் பல்லாயிரக்கணக்கான ரூபாய்கள் மக்கள் வரிப்பணத்தைத் தண்டச் சம்பளமாக ஏன் வாங்க வேண்டும்.

இதுதான் நிலைமை என்றால் வரும் தேர்தலில் கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் போன்ற அனைவரும் தங்கள் திராணியை நிரூபிக்க வேண்டும்.

டெல்லியிலே தமிழகத்தைப் போல சட்டப்பேரவைக்கே வராமல் தண்டச் சம்பளம் வாங்குவார்களா என்பது தெரியாது, இருந்தபோதும் அதுபோல ஒரு முயற்சி நடந்துள்ளது பாராட்டுகள். பா.ஜ.க முதல்வர் வேட்பாளரும் சீலா தீட்சித், மற்றும் கேசரிவாலுடன் மோதியிருக்கலாம். 

ஞாயிறு, 10 நவம்பர், 2013

காமன்வெல்த்: தி.மு.க.-காங். நாடகம். ”அரங்கேற்ற வேளை” இப்போது.. ”அறுவடை நாள்” எப்போது?

பொதுநலவாய மாநாடு இனப்படுகொலை நாடான இலங்கையில் நடத்தப்படக் கூடாது, பொதுநலவாய அமைப்பிலிருந்து (தற்காலிகமாகவாவது) இலங்கை நீக்கப்படவேண்டும், அப்படியே அம்மாநாடு இலங்கையிலே நடைபெற்றாலும் கூட இந்திய அரசு அம்மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்து இந்திய அரசு எப்போதும் மனித நேயத்தின் பக்கமே நிற்கும் என்று உலகிற்கு உரத்த குரலில் உரைக்க வேண்டுமென்பதே ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கையாக இருந்தது.

இனப்படுகொலையில் இலங்கைக்கு துணைபோன கூட்டுக் குற்றவாளியான இந்தியா எப்படி மேற்கண்ட கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் என்பது அனைவரின் ஐயமும் அச்சமுமாக இருந்ததும் உண்மைதான்.

இலங்கை அரசின் மீது இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என எந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபையிலோ, உலக நாடுகள் மத்தியிலோ  பேச்சு எழுந்தால் கூட துடித்துப்போய் களமிறங்கி இலங்கையைக் காப்பாற்ற அத்த்னை முயற்சிகளையுமெடுத்து வருவது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

ஐக்கிய நாடுகள் சபையிலே, மனித உரிமை ஆணையத்திலே இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுமேயானால், தீர்மானம் வருவதைத் தடுக்க முனைவதும் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால் மேற்குலக நாடுகளின் நெருக்கடியால் தீர்மானம் கொண்டுவரப்படுமேயானால் அத்தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்து இலங்கையைக் காப்பாற்றியதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகக் கண்டோம்.

இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களைக் காரணமாகக் காட்டி ஐரோப்பிய நாடுகளிலே இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகள், கடன் அல்லது உதவித் தொகைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படுமேயானால் இலங்கை அதிபர் இராசபக்சே மற்றும் அவரது பரிவாரங்களை இந்தியா வரவழைத்து விருந்து உபச்சாரங்கள் நடத்தி நாங்கள் இலங்கையின் பின்னே இருக்கிறோம் என அந்த நாடுகளைக் கேலி செய்ததும் நடந்தது. இந்தியாவிலிருந்து தமிழகத் துரோகக் கும்பலைச் சேர்ந்த தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் குழுவினை அனுப்பி அங்கே அனைத்தும் சிறப்பாக உள்ளது என இலங்கை அரசுக்குச் சான்றிதழ்கள் வழங்கி அந்தச் சான்றிதழ்களை இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுத்த நாடுகளின் முகத்திலே இலங்கை அரசை வீசச் செய்து அந்நாடுகளை அசிங்கப் படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

வேறு எவ்வகையில் இலங்கை அரசைக் காப்பாற்றுவது எனத் திட்டமிட்டு இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டை நடத்தி அதன் மூலம் 54 நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த்தின் தலைமைப் பொறுப்பிலே இராசபக்சேவை அமரவைத்துவிட்டால் எதிர்காலங்களில் எந்த உலகநாடுகளின் அமைப்புகளிலும் இலங்கை அரசை, இராசபக்சேவைத் தண்டிக்க முடியாது எனகிற நோக்கத்துடன் இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே முன்னெடுப்புகளை காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு துவங்கியதன் விளைவுதான் இந்த காமன்வெல்த் அரசுகளின் தலைவர்களுக்கான மாநாடு.

தமிழகத்தின் மாணவர் எழுச்சி மற்றும் மக்கள் போராட்டங்களின் விளைவாக காங்கிரசுடன் சேர்ந்து துரோகங்கள் பல புரிந்த தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக ஒரு அப்பட்டமான நாடகத்தை நிறைவேற்றி அதன் பிறகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காங்கிரசைக் காப்பாற்றுகிற வேலையிலே ஈடுபட்டு வந்ததையும், வரப்போகின்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளதையும் நாம் பார்க்கிறோம்

இப்பொது காமன்வெல்த் மாநாடு இலங்கையிலே நடத்தப்படக்கூடாது, அப்படி நடந்தாலும் இந்திய அரசு கல்ந்துகொள்ளக்கூடாது என்ற ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கைகளையும் ஏற்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தனிமைப் பட்டுப் போவதைத் தவிர்க்க தாங்களும் இதே கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும், இந்திய அரசுக்கு நெருக்கடி தருவதாகவும் “உள்ளே வெளியே” நாடகமாடி வந்தன.

அந்த நாடகம் இப்போது முழுமையாக நிறைவேறப் போவதாகத் தெரிகிறது. அதாவது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளப் போவதில்லையாம்.. ஆனால் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட படை பரிவாரங்களனைத்தும் கலந்து கொள்ளப்போகிறார்களாம். துரோகிகள் இதைத்தான் செய்யப்போகிறார்கள் என எதிர்பார்க்கப் பட்டதுதான். 

பிரதமர் கலந்து கொள்வதா வேண்டாமா என்பதை அறிவிக்க கடைசி நிமிடம் வரை இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியப் பிரதமர் ஏன் கலந்து கொள்ளவில்லை என உலக நாடுகள் கேள்விகள் எழுப்பும். அதற்கான காரணங்களை அலசும். ஏற்கனவே கனடா கலந்து கொள்ளாது என அறிவித்தபோது இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஏற்படுத்திய விவாதங்கள் போன்று நடைபெற்றுவிடக் கூடாது என்கிற நயவஞ்சக நோக்கமின்றி வேறென்ன?

இந்திய அரசின் இத்தகைய செயல்பாடு ஒரு மன நோயாளி செய்வது போலல்லவா இருக்கிறது. தமிழக மக்களின் போராட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் கலந்து கொள்வது தவிர்க்கப் பட்டிருந்தாலும் அதற்கான பலன்கள் தமிழர்களைச் சென்றடையக்கூடாது என்கிற கொடிய நோக்கத்துடனல்லவா செயல்படுகின்றன. தமிழர்களுக்கு அவ்வாறு சிறு பலன்களும் கிடைப்பதைத் தடுக்கிற நோக்கிலேதான் காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் நாடகமாடி வருகின்றன.

இந்திய அரசு பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் ஏன் கலந்துகொள்ளவில்லை? இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலையா? இலங்கையிலே நடைபெற்ற போர்க்குற்றங்களா? இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களா?

இவையெதுவுமில்லையென்றால் As I am suffering from fever, i am unable to attend போலவா என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். 

கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் என்ன ______க்காகச் செல்கிறார். ஏற்கனவே தமிழக காங்கிரசு அமைச்சர்களால் வியாக்கியானத்தில் சொல்லப்பட்டது போல இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கெதிராக இலங்கை அரசு மற்றும் இராசபக்சே மீது அனைத்துலக நாடுகளால் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப் படவேண்டுமென பேசப்போகிறாரா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

தி.மு.க., வி.சி.க., காங்கிரசுக் கூட்டணியின் நாடகங்களில் புதிய அத்தியாயமான காமன்வெல்த் அத்தியாயம்  அரங்கேறும் வேளை வந்திருக்கிறது. ”அரங்கேற்ற வேளை” ஒருநாள் வந்தால் ”அறுவடை நாளும்” வந்துதானே தீரும்.

துரோகத்தைப் பரிசளித்தவர்களுக்கு திருப்பிச் செலுத்துகிற வாய்ப்பு 2014 நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

கருணாநிதி பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அதை நியாயப் படுத்த என்ன காரணம் சொல்வார்?




OPTIONS:

A) பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சியல்ல. தி.மு.க. தீண்டாமைக்கு எதிரான இயக்கம்.


B) பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோமே தவிர நாங்கள் மோடியை ஆதரிக்கவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் வெற்றி பெற்றுச் செல்லும் கழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மோடியை ஆதரித்து வாக்களித்தாலும் விவாதங்களில் ஆதரிக்க மாட்டார்கள்.

C) கடந்த பத்தாண்டுகளாக எவ்வாறு முந்திக்கொண்டு காங்கிரசோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க போன்ற பிற கட்சிகள் கூட்டணி வைப்பதைத் தடுத்தோமோ அதே வகையில் இப்போதும் பிற கட்சிகள் பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதைத் தடுக்கவே தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் இவ்வாறு பா,ஜ,கவோடு கூட்டணி வைக்கவில்லையெனில் வேறு கட்சிகள் கூட்டணி வைத்து அதனால் ஜனநாயகத்திற்குப் பெரும் தீங்கு விளைந்திருக்கும் என்பதை நாடறியும். ஏடறியும்.

D) குஜராத்திலே மதக்கலவரங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மோடியோ குஜராத்திலே முதல்வராக இருக்கிறார். நாம் குஜராத் சட்டசபையிலே சென்று அவரைக் கேள்விகேட்க நமக்கு அங்கே உறுப்பினர்கள் இல்லை. ஆகவே, மோடியைப் பிரதமரானால் அதன்மூலம் அவர் நாடாளுமன்றத்தில் அமருகிற நிலை உருவாகும். நாடாளுமன்றத்திலே இருக்கும் நம் கழக உறுப்பினர்கள் அவரிடம் நேரடியாக குஜராத் மதக்கலவரங்கள் குறித்து கேள்வி கேட்கிற வாய்ப்பு ஏற்படும் என்கிற உன்னத நோக்கத்தினாலேதான் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துள்ளோம்.

E) டெசோ அமைப்பிலே காங்கிரஸ் பங்குபெறாததைக் கண்டித்து காங்கிரஸ் கூட்டணியிலே இருந்து வெளியேற முடிவெடுத்தோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் டெசோ அமைப்பிலே அவர்கள் சேர வாய்ப்பிருக்கிறது என்கிற உறுதிமொழியை அவர்கள் எதிர்காலத்திலே வழங்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நமக்கு இல்லாமலில்லை. அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையிலேதான் இந்தக் கூட்டணி அமையவிருக்கிறது.

F) காங்கிரஸ் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அந்தந்த ஊழல்கள் தொடர்பாக ஆங்காங்கே விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருவதாக கழக உடன்பிறப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படிப்பட்ட தகவல்கள் நம் பொதுச்செயலாளர் மற்றும் நம் பொருளாளர் அவர்கள் கவனத்திற்கும் எடுத்துவரப்பட்டு அதே தகவல்கள் நம் செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் விவாதிக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டு இருக்கிற சூழலிலே நாம் இன்னமும் காங்கிரஸ் கூட்டணியிலே தொடர வேண்டுமா? என்கிற கேள்விகள் எழாமலிருக்கிறது என்று சொல்ல முடியாத வகையில் அதனைப் புறந்தள்ளிவிடவும் வழியின்றி ஒரு முடிவெடுத்திட வேண்டிய காலகட்டத்தில் நம் கழக கண்மணிகளாம் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் பொய்யான குற்றசசாட்டுகளின் அடிப்படையிலே சிறையிலே அடைக்கப்பட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலைகளையும் கருத்திலே கொண்டு காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினால் அதற்கு மாற்று என்கிற வகையிலே வேறு எந்தத் தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கமுடியும் என்கிற பல்வேறு விவாதங்கள் நடைபெற்று அதிலே என்னென்ன முடிவுகளெடுக்கப்பட்டன என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டு அதற்கேற்ப பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதென எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக் கொள்வதே கழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதெனக் கருதி பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டதை நான் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

G) மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும்.