ஞாயிறு, 24 பிப்ரவரி, 2013

நடைபயண நாயகனும்.. 1200 ஸ்பார்ட்டா நிகர் வீரர்களும்..

ஸ்பார்ட்டா தேசத்தின் முந்நூறு வீரர்கள், பத்து லட்சம்பேர் கொண்ட பாரசீகத்தின் படையை எதிர்த்து நின்றனர். அவர்களின் பயணம் நீண்டதாக இருந்தது. இலக்கு வெகு தூரமாக இருந்தது. பாரசீகப் படையை எதிர்த்து அவர்கள் பயணம் துவங்குகிற வேளையில் கிரேக்க தேவதையிடம் அருள்வாக்கு கேட்டார்களாம். நீங்கள் துவங்குகிற இந்தப் பயணத்தில் வெல்ல முடியாது, உங்களால் பாரசீகப் பெரும்படையை வெல்ல இயலாது எனக் குறிப்பு வந்ததாம். கிரேக்கதேவதையே குறிப்புணர்த்திய பிறகும் அவர்கள் சபதமேற்றுப் பாரசீக சேனையை எதிர்கொள்ள முன்னேறினர். 

நாங்கள் சரணடையப் போவதில்லை. எந்தக்காரணம் கொண்டும் முன்வைத்த காலைப் பின்வாங்கப் போவதில்லை. நாங்கள் புறமுதுகு காட்டிப் ஓடப்போவதில்லை. மானத்தையே எங்கள் உயிராக மதிக்கிறோம். நாங்கள் உயிரையும் தருவோம். இந்த மண்ணின் மானம் காக்க மடிந்து போனாலும் போவோமே தவிர ஒருபோதும் எதிரிகளிடம் சரணடைய மாட்டோம்”

என்று முழங்கியவாறு முன்னேறிச் சென்றனர். ஸ்பார்ட்டாவின் வீரர்கள் வீரச்சமர் புரிந்ததால் போர் நீண்டுகொண்டே சென்றது. கிரேக்கத்திலிருந்தே ஒரு துரோகி பாரசீகப் படைக்கு குறுக்கு வழியைக் காட்டிக் கொடுத்தான். அவன் பாரசீகப்படைக்கு ஸ்பார்ட்டாவின் வீரர்களைப் பின்புறமாகச் சுற்றிவளைக்கும் வழியைக் காட்டிக் கொடுத்தான். துரோகியின் யோசனைப்படி பாரசீகப்படை ஸ்பார்ட்டா வீரர்களை சுற்றிவளைத்து தாக்கியது.

இலட்சக்கணக்கான அம்புகள் தாக்கின. இலட்சம் அம்புகள் தாக்கிய போதும் லட்சியத்திலிருந்து விலகாமல் போராடி மடிந்தனர் ஸ்பார்ட்டாவின் வீரர்கள்.

மேலே சொல்லப்பட்ட ஸ்பார்ட்டா வீரர்களின் கதையை நாம் கண்களால் வாசித்து, மனதினில் உள்வாங்கி, உணர்வு நரம்புகள் மூளைக்கு எடுத்துச் செல்கிறபோதே உடலில் இருக்கும் மயிர்க்கால்கள் அத்தனையும் எழுந்து நிற்கிறதே.. 

இதே போன்றதொரு வீர வரலாற்றுக் காவியத்தைத்தான் நாம் வாழ்கின்ற நாளிலே, நம் கண் முன்னே நிகழ்த்தினர் தமிழீழ விடுதலைப் புலிகள். இருபதுக்கும் மேற்பட்ட உலக நாடுகளின் உதவியோடு நடத்தப்பட்ட தாக்குதலை எதிர்கொண்டு ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கான ஒரு வரலாற்றை எழுதியிருக்கின்றனர் விடுதலைப் புலிகள்.

வைகோவும் அத்தகைய ஒரு பயணத்தைத்தான் இப்போது துவங்கியுள்ளார். இது ஆயுதங்கள் தாங்கிய எதிரியை ஆயுதங்களால் தாக்கியழிக்கும் போரல்ல.. ஒரு உளவியல் போர். ஆம் 1200 தொண்டரணி, மாணவரணி, இளைஞரணி வீரர்களுடன் வைகோ துவங்கியிருக்கும் மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணம் ஒரு உளவியல் போர்தான்.

பத்து, இருபதாண்டுகளுக்கு முன்பாக தமிழகத்தில் மதுக்கடைகள் இருந்தன. ஆனால் மக்களிடம் குடிப்பழக்கம் அதிகமாக இருந்ததில்லை. மது அருந்துபவன் குடிகாரன் என அழைக்கப்பட்டு சமூகத்தில் ஓரங்கட்டப்பட்டுவிடுவான். வீட்டுக்கு அடங்காதவர்கள், தறுதலைகள், சமூகவிரோதிகள், வாழ்க்கையில் தோல்வியடைந்து விரக்தியில் உழல்பவர்களுக்கு போதை ஒரு வழியாகத் தெரிந்து மதுக்கடைகளை நாடிச் செல்வது வழக்கமாக இருந்தது. மதுக்கடைகள்/கள்ளுக்கடைகள் ஊருக்கு வெளியிலே ஒதுக்குப்புறமாக அமைக்கப்பட்டிருந்தன. 

ஆனால் இப்போது நிலைமையென்ன? அரசே தெருவுக்குத் தெரு மதுக்கடைகளைத் திறந்து வைத்துள்ளது. மது என்கிற கொடிய அரக்கன் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகத்தையே சுற்றி வளைத்து விட்டான். மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அபரிமிதாகப் பெருகிவிட்டது. மது அருந்துவதற்கான காரணங்களும் பெருகி விட்டன. முன்பெல்லாம் நண்பர்கள் சேர்ந்தால் அமர்ந்து பேச அரட்டையடிக்க தேனீர்க்கடை பெஞ்சுகளை நிரப்புவார்கள். அந்தக் கூட்டமெல்லாம் இப்போது மதுக்கடைகளில் குடிப்பகங்களை நிரப்புகிறது. குடிப்பழக்கமில்லாதவர்களுக்கு நண்பர்கள் கிடைப்பதில்லை.  மாணவர்கள், பெண்கள் என மது வாடையே பட்டிராத சமூகத்தின் பகுதிகள் கூட அரக்கனின் பிடியில் சிக்கிவிட்டனர். 

குழு குழுவாகச் சென்று மது அருந்துபவர்களால் குற்றச் செயல்கள் அதிகரித்துவிட்டன. மது அருந்துபவர்கள் அனைவரும் குற்றச் செயல்களில் ஈடுபடுவதில்லைதான். ஆனால் குற்றச்செயலில் ஈடுபடுபவர்களுக்கு மது ஒரு ஊக்கசக்தியாக மது இருக்கிறது. பெரும்பாலான குற்றச் செயல்களைச் செய்தவர்கள் மதுவின் ஆதிக்கமில்லையென்றால் அச்செயல்களில் ஈடுபட்டிருக்க வாய்ப்பில்லை. நல்ல மனிதனையும் நாசக்காரனாக்குகிறது மது. மது குடித்தவர்களால் இயல்பு நிலையில் இருக்கமுடிவதில்லையே.. எத்தனையெத்தனை விபத்துகள். குடித்தவர்களால் நிகழ்த்தப்படும் விபத்துகளில் குடிப்பழக்கமே இல்லாத அப்பாவி மக்கள் கூடப் பலியாகிவிடுகிறனர். 

எனவே மது அரக்கனை ஒழித்து தமிழ்ச்சமூகத்தைக் காப்பாற்றும் கடமை ஒவ்வொரு தமிழருக்கும் உண்டு. 

மதுவிலக்கு சாத்தியமா? ஒரே நாளில் மதுக்கடைகளை மூடிவிட இயலுமா? அரசு மதுக்கடைகளை மூடிவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடாதா? இதெல்லாம் அனைவருக்கும் எழுகின்ற கேள்விகள்.

இது போன்ற கேள்விகள்தான் வைகோ அவர்களின் நடைபயணத்தின் நோக்கத்தைக் கேலி செய்ய வைக்கின்றன. வேறு சிலர் அரசியல் காரணங்களுக்காக இந்த மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணத்தைக் கொச்சைப்படுத்தி வருகின்றனர்.

மதுவிலக்கு சாத்தியம்தான். அரசால் மதுக்கடைகளை மூடிவிட இயலும். கள்ளச்சாராயம் விற்கப்படுமே எனகேட்பீர்களேயானால்...

ஆமாம். உண்மைதான். கள்ளச்சாராயம் வரலாம். சமூக விரோதச் செயல்களைத்தடுப்பதுதான் அரசின் வேலையாக இருக்க முடியும். மது அருந்தும் நண்பர்களிடம் கேட்கிறேன் யாரெல்லாம் கள்ளச்சாராயத்தை அருந்துவீர்கள்? நிச்சயம் சட்டத்தை மதிக்கிற, சாதாரண மக்கள் கள்ளச்சாராயத்தை அருந்தமாட்டார்கள். மாறாக கள்ளச்சாராயத்தை அருந்துபவர்கள் சமூக விரோதிகள் என அறியப்படுவார்கள். மது அருந்துவதுதான் நாகரீகம் என்கிற நிலைபோய் கள்ளச்சாராயத்தைக் குடிப்பவர்கள் மக்களால் ஒதுக்கி வைக்கப்பட்டு முன்புபோல மதுக் குடிப்பது கேவலம் என்கிற நிலைமை வரும்.

இது மக்கள் மத்தியில் மிகப்பெரும் உளவியல் மாற்றத்தைக் கொண்டு வரும். அது போன்ற ஒரு உளவியல் பிரச்சாரம்தான் வைகோவின் மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணம். ஆயிரம் பேரைத் திரட்டி சென்னையில் பனகல் மாளிகை முன்பாகவோ, ஆட்சியர் அலுவலகம் முன்பாகவோ ஒருநாள் ஆர்ப்பாட்டத்தை நடத்தி அரசின் கவனத்தை ஈர்த்திருக்க முடியும். சேப்பாக்கத்திலோ, ராசரத்தினம் விளையாட்டரங்கத்தின் அருகிலோ ஒருநாள் உண்ணாவிரதமிருந்து அரசுக்கு கோரிக்கை வைத்திருக்க முடியும். ஆனால் கோடிக்கணக்கான மக்களை அவர்கள் வாசலுக்குச் சென்று சந்தித்து மதுவிற்கு எதிராகக் கிளர்ச்சி செய்ய வைக்க இது போன்ற நடைபயணங்களாலேயே சாதிக்க முடியும்.

நம் மக்களுக்கு என்ன தேவை.. நம் மக்களை நோக்கி என்ன இடர் நெருங்கி வருகிறது என்பதை அவர்களுக்கு விளக்கிப் புரியவைத்து தூண்டிவிட வேண்டிய நிலையில்தான் நாடு இருக்கிறது. அந்த நிலையில்தான் நமது ஊடகங்களும், ஆண்ட மற்றும் ஆளும் கட்சிகளும் நம் மக்களை வைத்துள்ளன.

முல்லைப் பெரியாறில் இதுதான் நடந்தது. முல்லைப்பெரியாறில் கேரள அரசின் சதிச்செயலை முன்கூட்டியே அறிந்து மதுரையில் இருந்து கூடலூர் வரை அனைத்துக் கிராமங்கள் வழியாக நடைபயணம் செய்து சூழவிருந்த இன்னலை மக்களுக்கு எடுத்துரைத்தார். எத்தனையெத்தனை போராட்டங்கள். வீதி வீதியாக கால்கடுக்க நடந்தார். மக்கள் ஆதரவு இருப்பது போலவே தெரியாது. இறுதியில் கேரளம் அணையை உடைக்க முற்பட்டபோது தமிழக வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மக்கள் ஒன்று திரண்டு அந்தச் சதியை முறியடித்தனர்.

அதே போலத்தான் மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணமும். நீண்ட நெடிய பயணம். இது போன்ற பயணங்களுக்கு அவர் தளபதிகளையும் தொண்டர்களையும் தயார் செய்யும் உத்தி அனைவரிலும் மாறுபட்டது.

மாவீரன் இராயபுரம் இரா.ஏழுமலை அவர்கள் நினைவுநாளில் வைகோ ஆற்றிய உரையின் ஒரு பகுதியைப் படிக்க..

இந்த உன்னதமான நோக்கத்திற்கான நடைபயணத்திற்காக தமிழகம் முழுவதும் சல்லடை போட்டுச் சலித்ததுபோல மது அருந்தாத, மதுவிலக்கின் அவசியத்தை தாங்களாகவே உணர்ந்த தொண்டர்களிடம் நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தார்.

மதுவிலக்கின் அவசியத்தை உணர்ந்த பெற்றோர் சிலர் தமது பிள்ளைகளையும் நடைபயணத்தில் இணைத்துவிடக்கோரி வைகோவிடம் ஒப்படைத்தனர். அவர்களையெல்லாம் புறக்கணித்து தாமாகவே முன்வந்த இளைஞர்களை மட்டுமே தேர்ந்த்தெடுத்தார். அரசியல் கட்சி நிகழ்ச்சிகளனைத்தும் மது மற்றும் பிரியாணிப் பொட்டலங்களை நம்பியே நடந்துவரும் இன்றைய சூழலில் அந்த மதுவை எதிர்த்தே இளைஞர்களைத் திரட்ட வைகோ அவர்களால் மட்டும்தானே சாத்தியமாகியது.






பெண்களை இப்போராட்டத்தில் ஏன் இணைத்துக்கொள்ளவில்லை எனத் தெரியவில்லை. உடல்வலு, தங்குமிடம் மற்றும் இயற்கை உபாதைகள் கருதி இந்த முடிவை எடுத்திருக்கக் கூடும். பெண்களையும் இணைத்துக்கொண்டிருந்தால் போராட்டத்தின் வீரியம் பன்மடங்கு பெரிதாயிருந்திருக்கும். எதிர்காலத்தில் பரிசீலிக்க வேண்டும் என்பது என் கருத்து.

ஸ்பார்ட்டா வீரர்களும், விடுதலைப்புலிகளும் அவர்களது போராட்டத்தில் தோற்றுத்தானே போனார்கள், எதிரிகளால் பேரழிவைச் சந்தித்தார்களே என்கிறீர்களா?

நிச்சயம் அவர்கள் தோற்கவில்லை. அவர்கள் உருவாக்கிய விடுதலையுணர்ச்சியே பின்னர் அலெக்சாண்டர் போன்ற கிரேக்க வீரர்கள் உலகையே வெல்ல காரணமாயிருந்தது. அதேபோல விடுதலைப் புலிகள் செய்த தியாகம் ஒருநாள் தமிழீழம் பெற்றுத்தந்தே தீரும்.

நடைபயண நாயகன் வைகோ மற்றும் ஸ்பார்ட்டா நிகர் வீரர்களின் இலட்சியம் நிச்சயம் வெல்லும். மதுவிலக்கு விழிப்புணர்வு நடைபயணம் மட்டுமல்ல, அவர் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் தமிழர் வாழ்வைக் கரைசேர்க்கத்தான். அந்த இலட்சியப்பயணம் ஒருநாள் நிச்சயம் வெல்லும்.