சனி, 17 ஆகஸ்ட், 2013

தலைவா திரைப்படம் : உன் குத்தமா? என் குத்தமா? யாரை நானும் குத்தஞ்சொல்ல?

விஜய் நடித்து கடந்த வெள்ளியன்று வெளிவரவேண்டிய தலைவா திரைப்படம் வெளியாவது மிகுந்த சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. என்ன நடக்கிறது என்பதைத் திரைப்படத்தைத் தயாரிப்பாளர் தரப்போ, இயக்குனர் விஜய், நடிகர் விஜய் உள்ளிட்ட படக்குழுவோ, திரைப்படத்தை வாங்கிய திரையரங்க உரிமையாளர்கள் தரப்போ அல்லது தமிழக அரசின் தரப்பிலோ வெளிப்படையாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. வழக்கமாக இன்னதென்று இல்லாமல் அனைத்து விவகாரங்களிலும் உள்நுழைந்து உண்மைகளை அவரவர் பாணியிலே வெளிக்கொணரும் புலனாய்வு இதழ்களும் இவ்விவகாரத்தில் மிகவும் அடக்கி வாசிக்கின்றன.


ஆனால் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் வெளிவந்த செய்திகளை வைத்தும் சமூக வலைத்தளங்களில் பரிமாறிக்கொள்ளப்பட்ட தகவல்களை வைத்தும் நாம் சிலவற்றை அனுமானிக்க முடிகிறது.

தலைவா திரைப்படம் படம் வெளியிடப்படாமல் நிற்பது குறித்து வெளியான வெடிகுண்டு மிரட்டலில் சிறிதும் உணமையிருப்பதாகக் கருதவில்லை. திரைப்படத்திற்கு எப்படியும் வரிவிலக்கு பெற்றுவிடுவோம் என்று வாக்குறுதி தந்து தயாரிப்பாளர் பெருந்தொகையை திரையரங்க உரிமையாளர்களின் லாபக்கணக்கில் காட்டி கூடுதல் விலைக்கு விற்றுவிட்டார். தமிழக தணிக்கைக்குழு படத்திற்கு ”யு” சான்றிதழ் வழங்கவில்லை.”யு” சான்றிதழ் பெறாத படங்கள் வரிவிலக்குக்கு பரிசீலிக்கப்படுவதில்லை. படக்குழு வேறு மாநிலத்தில் சென்று ”யு” சான்றிதழ் “வாங்கி” வந்து விட்டது. அதன்பின்னரும் தமிழக அரசின் வரிவிலக்குப் பரிசீலனை செய்யும் குழுவில் அனைவரும் இப்படம் வரிவிலக்கிற்கு ஏற்றதல்ல எனப்பரிந்துரை செய்த ஆவணங்களை தமிழக அரசே வெளியிட்டிருந்தது. இப்போது திரையரங்கங்கள் வரி செலுத்தினால் அவர்களுக்கு நட்டம் (அ) இலாபத்தில் குறைவு. அவர்கள் வரி செலுத்தி படத்தை வெளியிடத்தயாராக இல்லை. தயாரிப்பாளர் ஏற்றுக்கொண்டால் அவருக்கு இழப்பு. தயாரிப்பாளர் படத்தை விற்றுப் பணத்தைக் கல்லாவில் போட்டுவிட்டார். மார்வாடிகளின் கல்லாவில் சென்றபணம் திரும்புமா? இதிலேதான் படம் இடையில் சிக்கிக் கொண்டுள்ளது. தமிழக அரசு சலுகை செய்து வரிவிலக்கு அளித்துவிட்டால் தயாரிப்பாளர் தரப்புக்கும் இழப்பில்லை. திரையரங்க உரிமையாளர்களுக்கும் இழப்பில்லை. வரி விலக்கு சலுகையளித்தால் யாருக்கு இழப்பு என்பதைச் சொல்லவும் வேண்டுமா? தமிழக அரசுக்குத்தான். 

ஆக, தலைவா திரைப்படம் வெளியாகாமல் சிக்கி நிற்பது தமிழக அரசின் வரிச்சலுகையை எதிர்பார்த்துதான். சலுகையை எதிர்பாக்கும் இவர்கள் எப்படி அரசை முறைத்துக்கொள்ள முடியும். அரசைக் கண்டித்தோ எதிர்த்தோ போராட்டம் நடத்த முடியும்? ஒருவேளை அப்படிப் போராட்டம் நடத்தினால் அரசு சலுகை வழங்கி விடுமா?

சரி நடிகர் விஜய் தரப்பில் என்ன தவறு நிகழ்ந்தது? ஒருவேளை அவரும் தயாரிப்பில் தலையிட்டு வரிவிலக்கு உத்தரவாதமளித்து திரையரங்க உரிமையாளர்கள் தலையில் கட்டியிருப்பாரேயானால் அவருக்கும் படம் வெளிவருவதில் ஏற்பட்ட சிக்கலில் பங்கு உண்டு. ஆனால் விஜய் அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது அவ்வாறு தெரியவில்லை. நடித்துக் கொடுத்ததுடன் கடமை முடிந்ததுபோலத்தான் செயல்படுகிறார். வெளியீட்டு நாளன்று ரசிகர்மன்ற காட்சிகள், பதாகைகள் என்பன போன்ற செயல்பாடுகள் வழக்கமானதுதான்.  பிறகு வெளியிடப்பட்ட வீடியோ அறிக்கை கூட ஏதோ நிர்ப்பந்தத்தால் பேசியதுபோலத்தான் தோன்றியது. உண்மையிலேயே விஜய் தரப்பிற்கு ஏதேனும் நெருக்கடியிருக்குமெனில் நிச்சயம் ரசிகர்களைத் திரட்டி போராடக்கூடிய அளவிற்கு அமைப்பு பலம் அவர்களிடமிருக்கிறது. அவர் அதில் முனைப்பு காட்டாததிலிருந்து விஜய் தரப்பில் எதுவும் பிழையிருக்க வாய்ப்பில்லை எனப் புரிந்து கொள்ளலாம். மேலும் இதன் மூலம் வருகிற இழப்பை அடுத்த படத்தில் சரிக்கட்ட விநியோகஸ்தர்கள்/ திரையரங்க உரிமையாளர்கள் வற்புறுத்தக்கூடும். அதுவொன்றும் அவருக்குப் பெரிய விசயமில்லை. துப்பாக்கி திரைப்படத்திற்கு இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தபோது அடுத்த படத்தில் விஜய் முஸ்லிமாக நடிப்பார் என்கிற அற்புதமான டீலிங்கைப் போட்டு படத்தை வெளியிட்டவர்தானே? இதெல்லாம் அவருக்குத் தூசு.

தயாரிப்பாளர் செய்தியாளர் சந்திப்பிலும் வெளிப்படையாக எதுவும் பேசவில்லை. தமிழக அரசு தன்னைக் காப்பாற்ற வேண்டும் என கண்ணீரும் கம்பலையுமாக வேண்டுகோள் விடுத்தார். அவர் பேசியதும் அரசிடமிருந்து சலுகை எதிர்பார்ப்பதுபோலத்தான் இருந்தது.

படத்திற்குத் தமிழக அரசு தடை விதித்திருப்பதாகவும் தெரியவில்லை. அப்படித் தடை விதிக்கப்பட்டிருக்குமேயானால் ஏன் தடை? எதற்காகத் தடை? என்பதையெல்லாம் அரசே வெளியிட்டிருக்கும். அப்படியே காரணம் சொல்லவில்லையென்றால் தயாரிப்பாளர் தரப்போ, படக்குழுவோ, வெளியாட்களில் ஒருவரோ கூட காரணத்தை  வெளியிட நிர்ப்பந்திக்கலாம். அதையும் மீறினால் நீதிமன்ற நடவடிக்கைகள் மூலம் அரசை நிர்பந்தம் செய்ய வழியிருக்கிறது.

வெடிகுண்டு புரளியெல்லாம் உண்மையாக இருந்தால் கூட வைத்து பத்து நாட்களாக ஏசி திரையரங்குகளிலும், பெய்த மழை காரணமாகவும் வெடிகுண்டெல்லாம் நமத்துப் போயிருக்கும். மிரட்டல் விடுத்தவனே படத்தைப் போட்டுத் தொலைங்கடா என்று வெறுத்துப்போயிருப்பான்.  இப்போதும் வெடிகுண்டு மிரட்டலுக்காக என்று தயாரிப்பாளர் தரப்பு சொல்லுமேயானால் நம் ஒவ்வொருவர் காதிலும் ஒன்றரை முழம் பூவைச் சுத்துகிறார்கள் என்று பொருள்.

திரைப்பட நடிகர்களின் ரசிகர்களும், தமிழக மக்களும் கட்டுகின்ற வரியை அரசுக்குச் செலுத்தாமல்  ஒரு சில மனிதர்கள் மிகுதியாகச் சம்பாதிக்கும் பொருட்டு கல்லாக்கட்ட அனுமதிக்க வேண்டுமா என்கிற சிந்தனையோடு...

திங்கள், 5 ஆகஸ்ட், 2013

சேது சமுத்திரத் திட்டத்தில் கருணாநிதியின் அந்தர் பல்டிகள்




சேது சமுத்திர நாயகன் வைகோ அவர்களால் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கபட்டு மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் வந்தபோதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த திட்டம் சேது சமுத்திரத் திட்டம். 

அத்திட்டத்தால் மீனவர்களுக்கு ஏற்படும் இடற்பாடுகளை நீக்கி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் நிறைவேற்றப்படவேண்டுமென்பதே ஆரம்பத்திலிருந்தே மறுமலர்ச்சி தி.மு.க. மற்றும் வைகோ அவர்களின் நிலைப்பாடாகும்.

ஆனால் சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய கப்பல் போக்குவரத்துத் துறையைக் கையில் வைத்திருந்த தி.மு.க. அத்திட்டத்தை மக்கள் நலத்திட்டமாகக் கருதாமல் பணம் கொழிக்கிற, பொன்முட்டையிடுகிற வாத்தாகக் கருதி திட்டத்தைக் குறித்த காலத்தில் முறையான வழிகளில் மீனவர்களுக்கு இடையூறின்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பின்றி நிறைவேற்றிட முன்வரவில்லை. இழுத்துக் கடத்தியதோடு மட்டுமல்லாமல் சரியான திட்டமிடலுமின்றி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலைவைக்கிற செயலிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தராமலும் அத்திட்டத்தின் ஒப்பந்தங்களில் ஊழல் செய்து பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தது.

இத்திட்டத்தில் கருணாநிதி கும்பல் செய்த கையாடல் ஒருபுறமிருக்க அவ்ர்களின் வாயாடல் இத்திட்டத்திற்கு பெரும் பின்னடவைத் தந்தது. ஆம் வரம்புமீறிப் பேசி எந்த இந்துத்துவ பாரதீய ஜனதாக்கட்சியைச் சார்ந்த பிரதமரான வாஜ்பாயைச் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை வைகோ அறிவிக்கச் செய்தாரோ அதே இந்துத்துவ சக்திகளனைத்தையும் சேதுத் திட்டத்திற்கு எதிராகத் திருப்பினார் கருணாநிதி.

இராமர் பாலம் என்கிற காரணத்தைக் காட்டி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இத்திட்டத்தை முடக்கிப்போடுவதில் மும்மரமாக நின்றவர் கருணாநிதியின் மதவெறுப்புக் கருத்துக்களால் தூண்டிவிடப்பட்ட சுப்பிரமணியசாமி. 

இதே சுப்பிரமணிய சாமியிடம் 2ஜி அலைவரிசை ஊழல் வழக்கில் வகையாய்ச் சிக்கிக்கொண்ட கருணாநிதி கும்பல் இதுவரை வழக்குத் தொடர்ந்து சேதுத் திட்டத்தை முடக்கிப்போட்ட சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருப்பார்களா? தி.மு.க. என்கிற கட்சி எதிர்த்துப் போராட்டம் நடத்துகிற அளவுக்கு சுப்பிரமணியசாமி என்ன பெரிய ஆளா எனக் கேட்கலாம். சரி கருணாநிதிக்கு சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிடக்கூட துணிச்சலில்லாமல் போனது ஏன்? அறிக்கை வெளியிட துணிச்சலில்லையா? பரவாயில்லை எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிப் போட்டு வைத்துள்ளார்களோ அதே நீதிமன்றத்தில் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் நாங்கள் எனவே எங்களையும் ஒரு மனுதாரராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி சுப்பிரமணியசாமியின் வாதங்களைத் தவிடுபொடியாக்கி வழக்கை வென்றிருக்க வேண்டாமா? 

கருணாநிதி என்கிற மோசடிப் பேர்வழி தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்று சொன்னால் நீதிமன்றம் சிரியாய்ச் சிரிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். தி.மு.க. என்கிற கட்சியின் சார்பிலே மனுச்செய்திருக்கலாமே? செய்யவில்லை. வழக்குத் தொடரப்பட்டபோதும் நீதிமன்றம் தடையாணை வழங்கியபோதும் கருணாநிதிதான் முதல்வராக இருந்தார். தமிழக அரசின் சார்பிலே ஒரு மனுதாரராகச் சேர்ந்து வாதிட்டிருக்கலாமே? செய்தாரா என்று கேட்டால் இல்லை.

கருணாநிதியின் தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதிகாட்டாமல் ஆய்வுசெய்ய நீதிபதி பச்சோரி தலைமையில் ஆய்வுக் கமிட்டி ஒன்றை அமைத்து அந்த ஆய்வுக் கமிட்டியும் திட்டத்திற்கு எதிரான ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க வைத்தது.

இப்போது கூடங்குளத்திற்கு எதிராக மத்திய அரசு ஒரு கமிட்டியமைத்து திட்டத்திற்கெதிராக அறிக்கை சமர்ப்பிக்க அனுமதித்திருக்குமா? மத்திய அரசு நினைப்பதை காகிதத்தில் அச்சடித்து வழங்குவதுதானே கமிட்டிகளின் வேலை. ஆக தான் அங்கம்வகித்த காங்கிரஸ் அரசு திட்டத்தில் குளறுபடி  செய்ததைக் கூட்டணியிலே இருந்தபோதும் தடுக்கத் தவறியவர்தான் இந்தக் கருணாநிதி.

இதிலே மிகவும் வேதனைக்குரிய விடயமென்னவென்றால் மக்கள் நலத்திட்டமென்ற போர்வையில் கொள்ளையடிப்பதில் காங்கிரசும், தி.மு.க.வும் குடுமிபிடிச்சண்டை போட்டுக்கொண்டதுதான். தி.மு.க. தன்கையில் வளம் கொழிக்கும் துறைகளைத் தேர்ந்தெடுத்து இயன்ற மட்டும் கொள்ளையடித்ததை வேடிக்கை பார்த்து அல்லது பங்குபோட்டுக்கொண்ட காங்கிரஸ் சேதுத் திட்டத்தைக் குறிவைத்து கப்பல் போக்குவரத்துத் துறையை தி.மு.க.விடமிருந்து பறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வாசனிடம் ஒப்படைத்தது. தி.மு.க.வும் திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக கமுக்கமாக இருந்து கொண்டது. ஒரு புரட்சியில்லை. போராட்டமில்லை. நல்லவன் யோக்கியனென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? சேதுத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுகிறவகையில் கப்பல் போக்குவரத்துத் துறையை மீண்டும் தரவேண்டுமென்று கேட்டிருக்க வேண்டுமல்லவா? கேட்கவில்லை. கேட்டால் 2ஜி ஊழல் வழக்கில் ஆப்படிப்பான் காங்கிரஸ்காரன். 

இந்நிலையில் நீதிமன்றமே தமிழக அரசிடம் தனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்கவேண்டுமெனக் கேட்டு சம்மனனுப்பியிருக்கிறது. தமிழக அரசும் அத்திட்டத்தின் சாதக பாதகங்களை, மீனவர்களின் பிரச்சினைகளை, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைச் சொல்லி நீதிமன்றத்தில் திட்டத்தைக் கைவிடவேண்டுமென பதில் மனுத்தாக்கல் செய்துவிட்டது. தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்கக் கூடாதென்று கூறியதே நீதி மன்றமோ மத்திய அரசோ கேட்டதா? தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் இயக்கக் கூடாதென்று நீதிமன்றத்திலே முறையிட்டதே.. நீதிமன்றமோ, மத்திய அரசோ செவி மடுத்ததா? வலுக்கட்டாயமாகத் தமிழக மக்கள் தலையில் திணிக்கிறனவே... அப்போதெல்லாம் கருணாநிதி கேளாக்காதினராகவும், கண்ணிருந்தும் குருடராகவும் மூச்சுவிடாமல் கிடந்தாரே கருணாநிதி.

ஈழப்பிரச்சினையைக் கையிலெடுத்தால் பூமராங்காக மாறித் தன்னையே தாக்குகிறது. ஊழல், மணற்கொள்ளை, மின்வெட்டு என எந்தப் பிரச்சினையிலும் தன்னை யோக்கியன் என நிரூபித்துக் கொள்ள வழியின்றி தமிழக அரசியலில் தனிமைப்பட்டுப்போயிருந்த,  அரசியல் செய்ய வழியில்லாமல் கிடந்த நாடாளுமன்றத் தேர்தல் வருவதைக் கணக்கில் கொண்டு கருணாநிதி சேது சமுத்திரத் திட்டத்தைக் கையிலெடுக்கிறார். போராட்டம் அறிவிக்கிறார்.

சரி. நீதான் போக்கத்தவன். பொழப்புக்கெட்டவன். போகிறபோக்கில் வைகோவை ஏன் வம்புக்கிழுக்கிறாய்.

தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப்பிரச்சினையிலும் முன்னணியில் நின்று போராடுபவர் வைகோ. சேது சமுத்திரத்திட்டத்திலும் அவர் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார். மீனவர்கள் மற்றும் சுற்றுச்ச்சுழல் ஆர்வலர்களின் கேள்விகளுக்குப் பதில் யார் தருவது? சேது சமுத்திரத்திட்டத்தால் யாருடைய தலைக்குமேலாவது கத்தி தொங்குகிறதா? தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவருக்கு முன்னுரிமை எதற்குத் தரவேண்டுமென்பது தெரியாதா?

சேதுசமுத்திரத்திட்டம் தேவையானதுதான். நிறைவேற்றப்படவேண்டியதுதான். அதற்காகத் தமிழக மீனவர்களின் சோற்றில் மண்ணைப்போட்டுவிட்டல்ல. அவர்களின் வாழ்வுரிமை பாதிக்காத வகையிலேதான் நிறைவேற்றப்படவேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும். மீனவர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படாத வகையிலே நிறைவேற்றப்பட அனைவரும் துணைநிற்பார்கள். வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகி டெல்லி சென்றால் பித்தலாட்டக்காரன் கருணாநிதியிடம் யாரும் போய் நிற்கப்போவதில்லை. சேது சமுத்திரத் திட்டம் வைகோ முயற்சியால் செவ்வனே நிறைவேற்றப்படும். அதுவரை கருணாநிதி மற்றும் டெசோ கும்பலின் தேர்தல் நாடகப் போராட்டங்களைக் கண்ணுற்று மகிழ்ந்திருங்கள்.