ஞாயிறு, 10 நவம்பர், 2013

காமன்வெல்த்: தி.மு.க.-காங். நாடகம். ”அரங்கேற்ற வேளை” இப்போது.. ”அறுவடை நாள்” எப்போது?

பொதுநலவாய மாநாடு இனப்படுகொலை நாடான இலங்கையில் நடத்தப்படக் கூடாது, பொதுநலவாய அமைப்பிலிருந்து (தற்காலிகமாகவாவது) இலங்கை நீக்கப்படவேண்டும், அப்படியே அம்மாநாடு இலங்கையிலே நடைபெற்றாலும் கூட இந்திய அரசு அம்மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்து இந்திய அரசு எப்போதும் மனித நேயத்தின் பக்கமே நிற்கும் என்று உலகிற்கு உரத்த குரலில் உரைக்க வேண்டுமென்பதே ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கையாக இருந்தது.

இனப்படுகொலையில் இலங்கைக்கு துணைபோன கூட்டுக் குற்றவாளியான இந்தியா எப்படி மேற்கண்ட கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் என்பது அனைவரின் ஐயமும் அச்சமுமாக இருந்ததும் உண்மைதான்.

இலங்கை அரசின் மீது இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என எந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபையிலோ, உலக நாடுகள் மத்தியிலோ  பேச்சு எழுந்தால் கூட துடித்துப்போய் களமிறங்கி இலங்கையைக் காப்பாற்ற அத்த்னை முயற்சிகளையுமெடுத்து வருவது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

ஐக்கிய நாடுகள் சபையிலே, மனித உரிமை ஆணையத்திலே இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுமேயானால், தீர்மானம் வருவதைத் தடுக்க முனைவதும் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால் மேற்குலக நாடுகளின் நெருக்கடியால் தீர்மானம் கொண்டுவரப்படுமேயானால் அத்தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்து இலங்கையைக் காப்பாற்றியதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகக் கண்டோம்.

இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களைக் காரணமாகக் காட்டி ஐரோப்பிய நாடுகளிலே இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகள், கடன் அல்லது உதவித் தொகைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படுமேயானால் இலங்கை அதிபர் இராசபக்சே மற்றும் அவரது பரிவாரங்களை இந்தியா வரவழைத்து விருந்து உபச்சாரங்கள் நடத்தி நாங்கள் இலங்கையின் பின்னே இருக்கிறோம் என அந்த நாடுகளைக் கேலி செய்ததும் நடந்தது. இந்தியாவிலிருந்து தமிழகத் துரோகக் கும்பலைச் சேர்ந்த தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் குழுவினை அனுப்பி அங்கே அனைத்தும் சிறப்பாக உள்ளது என இலங்கை அரசுக்குச் சான்றிதழ்கள் வழங்கி அந்தச் சான்றிதழ்களை இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுத்த நாடுகளின் முகத்திலே இலங்கை அரசை வீசச் செய்து அந்நாடுகளை அசிங்கப் படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.

வேறு எவ்வகையில் இலங்கை அரசைக் காப்பாற்றுவது எனத் திட்டமிட்டு இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டை நடத்தி அதன் மூலம் 54 நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த்தின் தலைமைப் பொறுப்பிலே இராசபக்சேவை அமரவைத்துவிட்டால் எதிர்காலங்களில் எந்த உலகநாடுகளின் அமைப்புகளிலும் இலங்கை அரசை, இராசபக்சேவைத் தண்டிக்க முடியாது எனகிற நோக்கத்துடன் இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே முன்னெடுப்புகளை காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு துவங்கியதன் விளைவுதான் இந்த காமன்வெல்த் அரசுகளின் தலைவர்களுக்கான மாநாடு.

தமிழகத்தின் மாணவர் எழுச்சி மற்றும் மக்கள் போராட்டங்களின் விளைவாக காங்கிரசுடன் சேர்ந்து துரோகங்கள் பல புரிந்த தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக ஒரு அப்பட்டமான நாடகத்தை நிறைவேற்றி அதன் பிறகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காங்கிரசைக் காப்பாற்றுகிற வேலையிலே ஈடுபட்டு வந்ததையும், வரப்போகின்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளதையும் நாம் பார்க்கிறோம்

இப்பொது காமன்வெல்த் மாநாடு இலங்கையிலே நடத்தப்படக்கூடாது, அப்படி நடந்தாலும் இந்திய அரசு கல்ந்துகொள்ளக்கூடாது என்ற ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கைகளையும் ஏற்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தனிமைப் பட்டுப் போவதைத் தவிர்க்க தாங்களும் இதே கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும், இந்திய அரசுக்கு நெருக்கடி தருவதாகவும் “உள்ளே வெளியே” நாடகமாடி வந்தன.

அந்த நாடகம் இப்போது முழுமையாக நிறைவேறப் போவதாகத் தெரிகிறது. அதாவது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளப் போவதில்லையாம்.. ஆனால் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட படை பரிவாரங்களனைத்தும் கலந்து கொள்ளப்போகிறார்களாம். துரோகிகள் இதைத்தான் செய்யப்போகிறார்கள் என எதிர்பார்க்கப் பட்டதுதான். 

பிரதமர் கலந்து கொள்வதா வேண்டாமா என்பதை அறிவிக்க கடைசி நிமிடம் வரை இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியப் பிரதமர் ஏன் கலந்து கொள்ளவில்லை என உலக நாடுகள் கேள்விகள் எழுப்பும். அதற்கான காரணங்களை அலசும். ஏற்கனவே கனடா கலந்து கொள்ளாது என அறிவித்தபோது இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஏற்படுத்திய விவாதங்கள் போன்று நடைபெற்றுவிடக் கூடாது என்கிற நயவஞ்சக நோக்கமின்றி வேறென்ன?

இந்திய அரசின் இத்தகைய செயல்பாடு ஒரு மன நோயாளி செய்வது போலல்லவா இருக்கிறது. தமிழக மக்களின் போராட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் கலந்து கொள்வது தவிர்க்கப் பட்டிருந்தாலும் அதற்கான பலன்கள் தமிழர்களைச் சென்றடையக்கூடாது என்கிற கொடிய நோக்கத்துடனல்லவா செயல்படுகின்றன. தமிழர்களுக்கு அவ்வாறு சிறு பலன்களும் கிடைப்பதைத் தடுக்கிற நோக்கிலேதான் காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் நாடகமாடி வருகின்றன.

இந்திய அரசு பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் ஏன் கலந்துகொள்ளவில்லை? இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலையா? இலங்கையிலே நடைபெற்ற போர்க்குற்றங்களா? இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களா?

இவையெதுவுமில்லையென்றால் As I am suffering from fever, i am unable to attend போலவா என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும். 

கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் என்ன ______க்காகச் செல்கிறார். ஏற்கனவே தமிழக காங்கிரசு அமைச்சர்களால் வியாக்கியானத்தில் சொல்லப்பட்டது போல இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கெதிராக இலங்கை அரசு மற்றும் இராசபக்சே மீது அனைத்துலக நாடுகளால் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப் படவேண்டுமென பேசப்போகிறாரா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

தி.மு.க., வி.சி.க., காங்கிரசுக் கூட்டணியின் நாடகங்களில் புதிய அத்தியாயமான காமன்வெல்த் அத்தியாயம்  அரங்கேறும் வேளை வந்திருக்கிறது. ”அரங்கேற்ற வேளை” ஒருநாள் வந்தால் ”அறுவடை நாளும்” வந்துதானே தீரும்.

துரோகத்தைப் பரிசளித்தவர்களுக்கு திருப்பிச் செலுத்துகிற வாய்ப்பு 2014 நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

ஞாயிறு, 3 நவம்பர், 2013

கருணாநிதி பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்தால் அதை நியாயப் படுத்த என்ன காரணம் சொல்வார்?




OPTIONS:

A) பா.ஜ.க. தீண்டத்தகாத கட்சியல்ல. தி.மு.க. தீண்டாமைக்கு எதிரான இயக்கம்.


B) பா.ஜ.க. கூட்டணியில் இருக்கிறோமே தவிர நாங்கள் மோடியை ஆதரிக்கவில்லை. பா.ஜ.க. கூட்டணியில் வெற்றி பெற்றுச் செல்லும் கழக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் மோடியை ஆதரித்து வாக்களித்தாலும் விவாதங்களில் ஆதரிக்க மாட்டார்கள்.

C) கடந்த பத்தாண்டுகளாக எவ்வாறு முந்திக்கொண்டு காங்கிரசோடு கூட்டணி வைத்து அ.தி.மு.க போன்ற பிற கட்சிகள் கூட்டணி வைப்பதைத் தடுத்தோமோ அதே வகையில் இப்போதும் பிற கட்சிகள் பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதைத் தடுக்கவே தி.மு.க. கூட்டணி வைத்துள்ளது. நாங்கள் இவ்வாறு பா,ஜ,கவோடு கூட்டணி வைக்கவில்லையெனில் வேறு கட்சிகள் கூட்டணி வைத்து அதனால் ஜனநாயகத்திற்குப் பெரும் தீங்கு விளைந்திருக்கும் என்பதை நாடறியும். ஏடறியும்.

D) குஜராத்திலே மதக்கலவரங்கள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. மோடியோ குஜராத்திலே முதல்வராக இருக்கிறார். நாம் குஜராத் சட்டசபையிலே சென்று அவரைக் கேள்விகேட்க நமக்கு அங்கே உறுப்பினர்கள் இல்லை. ஆகவே, மோடியைப் பிரதமரானால் அதன்மூலம் அவர் நாடாளுமன்றத்தில் அமருகிற நிலை உருவாகும். நாடாளுமன்றத்திலே இருக்கும் நம் கழக உறுப்பினர்கள் அவரிடம் நேரடியாக குஜராத் மதக்கலவரங்கள் குறித்து கேள்வி கேட்கிற வாய்ப்பு ஏற்படும் என்கிற உன்னத நோக்கத்தினாலேதான் பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்துள்ளோம்.

E) டெசோ அமைப்பிலே காங்கிரஸ் பங்குபெறாததைக் கண்டித்து காங்கிரஸ் கூட்டணியிலே இருந்து வெளியேற முடிவெடுத்தோம். பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்தால் டெசோ அமைப்பிலே அவர்கள் சேர வாய்ப்பிருக்கிறது என்கிற உறுதிமொழியை அவர்கள் எதிர்காலத்திலே வழங்கக்கூடும் என்கிற எதிர்பார்ப்பு நமக்கு இல்லாமலில்லை. அந்த எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்யும் வகையிலேதான் இந்தக் கூட்டணி அமையவிருக்கிறது.

F) காங்கிரஸ் ஆட்சியில் பெருமளவு ஊழல் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் வந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியிடப்பட்டதாகவும் அந்தந்த ஊழல்கள் தொடர்பாக ஆங்காங்கே விசாரணைகள் நடைபெற்றுவருவதாகவும் மக்கள் மத்தியில் பேச்சு நிலவி வருவதாக கழக உடன்பிறப்புகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அப்படிப்பட்ட தகவல்கள் நம் பொதுச்செயலாளர் மற்றும் நம் பொருளாளர் அவர்கள் கவனத்திற்கும் எடுத்துவரப்பட்டு அதே தகவல்கள் நம் செயற்குழுவிலும் பொதுக்குழுவிலும் விவாதிக்கப்படவேண்டும் என கோரிக்கைகள் விடப்பட்டு இருக்கிற சூழலிலே நாம் இன்னமும் காங்கிரஸ் கூட்டணியிலே தொடர வேண்டுமா? என்கிற கேள்விகள் எழாமலிருக்கிறது என்று சொல்ல முடியாத வகையில் அதனைப் புறந்தள்ளிவிடவும் வழியின்றி ஒரு முடிவெடுத்திட வேண்டிய காலகட்டத்தில் நம் கழக கண்மணிகளாம் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் பொய்யான குற்றசசாட்டுகளின் அடிப்படையிலே சிறையிலே அடைக்கப்பட்டு சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாக்கப்பட்ட நிலைகளையும் கருத்திலே கொண்டு காங்கிரஸ் கூட்டணியை விட்டு வெளியேறினால் அதற்கு மாற்று என்கிற வகையிலே வேறு எந்தத் தேசியக் கட்சியுடன் கூட்டணி வைக்கமுடியும் என்கிற பல்வேறு விவாதங்கள் நடைபெற்று அதிலே என்னென்ன முடிவுகளெடுக்கப்பட்டன என்று என்னிடம் தெரிவிக்கப்பட்டு அதற்கேற்ப பா.ஜ.க.வோடு கூட்டணி வைப்பதென எடுக்கப்பட்ட முடிவை ஏற்றுக் கொள்வதே கழகத்தின் எதிர்காலத்திற்கு நல்லதெனக் கருதி பொதுச்செயலாளரால் அறிவிக்கப்பட்டதை நான் ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்பதால் பா.ஜ.க. கூட்டணியில் இணைவதாக ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.

G) மேலே குறிப்பிடப்பட்டுள்ள அனைத்தும்.

சனி, 2 நவம்பர், 2013

தமிழக அரசே... தோழர் கொளத்தூர் மணி அவர்களை விடுதலை செய்.





இனப்படுகொலை இலங்கையில் காமன்வெல்த் மாநாடு நடத்தப்படக் கூடாது. அதனைத் தடுத்திட இந்திய அரசு முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்று ஒட்டுமொத்தத் தமிழகமும் கோரிக்கை வைத்தும் இந்திய அரசு செவி சாய்க்காமல் வெந்த புண்ணிலே வேலைப் பாய்ச்சுவதுபோல வெளியுறவு அமைச்சர் வாயிலாக அந்நிகழ்விலே கலந்து கொள்ளப்போவதாக பூச்சாண்டி காட்டி தமிழக மக்களின் பொறுமையின் ஆழத்தைச் சோதித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

சென்னையிலும் சேலத்திலும் மத்திய அரசு அலுவலகங்களிலும் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர்கள் சிலர் கைது செய்யப்பட்டு தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் சிறையிலடைக்கப் பட்டுள்ளனர். 

மத்திய அரசைக் கண்டிக்க வன்முறையைக் கையிலெடுப்பதை எந்நிலையிலும் ஆதரிப்பதற்கில்லை.

இவ்வாறான பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் தி.வி.க. தோழர்கள் ஈடுபட்டிருப்பார்களேயானால் அவர்கள் செய்யும் செயலின் தீவிரம் என்ன? அதன் பின் விளைவுகள் என்ன என்பதை அறிந்தே செய்திருப்பார்கள். இது போன்ற செயல்களைச் செய்து சிறை செல்வதை தியாகம் என நினைத்திருப்பார்களேயானால் அவர்களின் தியாகத்தை மதித்து அவர்களைச் சிறையிலடைத்து அவர்களின் தியாகத்தை அரசு முழுமையடையச் செய்வதே சரியாகும். ஆகவே திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தான் செய்திருப்பார்களேயானால் அவர்கள் கைது செய்யப்படுவதிலோ வழக்கைச் சந்திக்க வேண்டுமென்பதில் மாற்றுக் கருத்து ஏதுமிருக்கப் போவதில்லை. 

ஏற்கனவே ஈழத்தமிழர்களின் இனப்படுகொலைக்கு இந்திய அரசும் காங்கிரசு, கருணாநிதி தி.மு.க. கூட்டணியின் துரோகத்தைக் கண்டித்தும், ஊடகங்கள் செய்திகளை இருட்டடிப்புச் செய்த காரணத்தால் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு 18 தமிழர்கள் வன்முறையில் ஈடுபடாமல் உச்சபட்ச தியாகமான தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்வதன் மூலம் அதன் பயனாக இந்திய அரசும், ஊடகங்களும், துரோகக் கும்பலும் திருந்திவிடாதா என்ற ஏக்கத்துடனே இறந்து போயினர். அவர்கள் தியாகங்களும் வீணாகப் போயின.

மேலும் மேலும் துரோகங்களைப் பரிசளிக்கும் இந்திய அரசையும் அதன் தமிழகக் கூட்டாளிகளையும் கண்டித்தோ அவர்களின் கேளாக் காதுகளின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டோ இனியும் எவரும் இன்னுயிரை மாய்த்துக்கொள்ளக்கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொண்டு அரசின் கவனத்தை ஈர்க்க முயல்வது ஒருவகை முட்டாள்தனமென்றால், வன்முறைச் செயல்கள் மூலம் கவனத்தை ஈர்க்க முயல்வது வேறுவகை முட்டாள்தனம்.

மத்திய அரசு அலுவலகங்களில் பெட்ரோல் குண்டு வீசிய வன்முறைச் செயலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டின் பேரில் தி.வி.க. தோழர்கள் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்களைக் கைது செய்திருப்பது அடாத செயல்.

தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மிகவும் கண்ணியமானவர், அதிர்ந்து பேசக்கூடத் தெரியாதவர். மிகவும் ஆத்திரமூட்டும் விவாதக் களங்களேயானாலும் ஆத்திரப்படாமல் அறிவுப்பூர்வமாக தன் கருத்துக்களைப் பாங்குடனே எடுத்து வைக்கிற பக்குவப்பட்டவர்.

ஒருவேளை தொண்டர்கள் செய்த(?) சில செயல்களுக்காக தலைவர் கைது செய்யப்படுவதுதான் சரியென்றால்

பல்லாயிரம் கோடி ரூ. 2ஜி ஊழல் வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி ஏன் கைது செய்யப்படவில்லை?

தா.கிருட்டிணன் கொலை வழக்கிலே கருணாநிதியோ, மு.க.ஸ்டாலினோ கைது செய்யப்பட்டார்களா? 

கிரானைட் கொள்ளை வழக்கிலே கருணாநிதி ஏன் கைது செய்யப்படவில்லை?

கோவை வேளாண் கல்லூரி மாணவிகள் எரித்துக் கொல்லப்பட்ட வழக்கிலே ஜெயலலிதா ஏன் கைது செய்யப்படவில்லை?

தமிழீழத்திலே ஒன்றரை லட்சம் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக தஞ்சையிலே முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் திறப்பு நிகழ்விலே தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொள்ள இருந்த நிலையில் இந்நிகழ்வைச் சீர்குலைக்கும் வகையில் பொய் வழக்கில் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவே தெரிகிறது.

தமிழக அரசு இதுபோன்ற சில்லறைத்தனமான வேலைகளில் ஈடுபடாமல் தோழர் கொளத்தூர் மணி அவர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.