புதன், 31 ஜூலை, 2013

திராவிடம் தேவையா? தமிழ் தேசியத்திற்குத் தாவையா...

அவ்வப்போது தலைகாட்டும் வெற்றுக் கூச்சல்களில் ஒன்றுதான் தலைப்பிலே குறிப்பிட்ட வாசகம்.

தமிழகத்தில் மக்கள் தி.மு.க. அ.தி.மு.க. என்கிற இரண்டு கட்சிகளின் ஆட்சியைப் பல தசாப்தங்களாகப் பார்த்து வெறுப்பின் உச்சகட்டத்தில் இருக்கின்றனர். மக்கள் மனதில் மாற்று அரசியலுக்கான தேடலும் ஏக்கமும் முன்னெப்போதுமில்லாத வகையில்   அதிகரித்துக்கொண்டே வருகிறது. கொளுத்தி விடப்பட்ட வெடியின் திரிபோல மறுமுனையிலிருக்கும் மாற்று அரசியல் புரட்சி நோக்கி அது அத்துணை மனங்களையும் ஒன்றுசேர்த்து இழுத்துச் செல்கிறது. அவ்வாறு கொளுத்தி விடப்பட்ட திரிக்கும் மாற்று அரசியல் புரட்சிக்குமான இடைவெளியை அதிகரிப்பதிலும், அதிகரிக்கப்பட்ட அவ்விடைவெளியில் கிடைக்கும் பதவிகளை பங்குபோடுவதிலும் தி.மு.க. தலைமையும் அ.தி.மு.க. தலைமையும் ஒத்திசைந்து செயல்பட்டு வருகின்றன.

இடையில் புகுந்து அரசியல் இலாபம் தேடும் ஒரு கும்பல் செய்யும் முழக்கம்தான் தலைப்பிலே சொன்னது. அதிலே எந்தளவுக்கு உண்மையுள்ளது? பார்ப்போம்.

ஆப்பிளை ஆப்பிளுடன் ஒப்பிடவேண்டுமென்று சொல்வார்கள். அதுபோல அடிப்படையில் திராவிட கருத்தியலை தமிழ்த்தேசியத்துடன் ஒப்பிடுவதே தவறானது.

திராவிடம் என்பது மொழிசார்ந்தோ நிலம் சார்ந்தோ உருவானதல்ல. திராவிடம் என்பது ஆரிய ஒடுக்குமுறைக்கு எதிரான, சாதி ஒடுக்குமுறை பெண்ணடிமைக்கு எதிரான கருத்தியல் சித்தாந்தம். குறிப்பாக பிறப்பை வைத்து மனிதனை இழிவு படுத்தும் சனாதன பார்ப்பன கொள்கைகளிடமிருந்து மக்களைக் காக்க உருவான கருத்தியல். யாரெல்லாம் பார்ப்பனரில்லையோ, யாரெல்லாம் ஆரியரில்லையோ அவரெல்லாம் திராவிடர். திராவிடம் என்பது பிறப்பினடிப்படையில் அடிமைப்படுத்தப்பட்ட அனைத்து மக்களுக்கும் பொதுவானது. இன்னும் எளிமையாகச் சொல்ல வேண்டுமானால் அமெரிக்காவில் பிறப்பினடிப்படையில் ஒடுக்கப்படும் கறுப்பின பழங்குடியினர் கூட திராவிடர்கள்தான். அங்கேயும் ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கங்கள் வேறுபெயர்களில் இயங்கி வருகின்றன.

திராவிடம் என்கிற கருத்தியலுக்கு சமமான ஒரு கருத்தியலென்றால்  பொதுவுடமைச் சித்தாந்தங்களை வேண்டுமானால் ஒப்பிடலாமே தவிர தமிழ்த் தேசியத்தை ஒப்பிடுவது தவறானது. உள்நோக்கம் கொண்டது. திராவிடக் கருத்தியல்/சித்தாந்தம் தமிழ் தேசியத்திற்கு எதிரானதல்ல. பொதுவுடமைச் சித்தாந்தம் வர்க்க வேறுபாடுகளைக் களையும் பொருட்டு, முதலாளித்துவத்திற்கெதிராகத் துவங்கப்பட்டு உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. பொதுவுடைமைச் சித்தாந்தம் தமிழ்த்தேசியத்திற்கெதிரானதா? அவ்வாறு சொன்னால் அது எந்த அளவுக்கு பைத்தியக்காரத்தனமாகப் படுமோ அதே அளவு பைத்தியக்காரத்தனம்தான் திராவிட கருத்தியல் தமிழ்த்தேசியத்திற்கெதிரானது என்று சொல்வதும். திராவிட இயக்கம் தமிழகத்திற்கு வெளியே இல்லையே தமிழகத்திலே மட்டும்தானே இருக்கிறது என்னும் கேள்வி எழலாம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை இயக்கங்கள் தமிழகத்திற்கு வெளியே வெவ்வேறு பெயர்களில் செயல்பட்டுதான் வருகிறது. இன்னும் வரவில்லையென்றால் இனிமேல் நிச்சயம் வரும். பெயர் வேறாக இருக்கலாம். மொழி வேறாக இருக்கலாம். பிறப்பினடிப்படையில் ஒடுக்கப்படும் மக்களுக்கான விடுதலை இயக்கங்களனைத்துமே திராவிட இயக்கங்கள்தான். ஆகவே திராவிட இயக்கமோ, பொதுவுடமை இயக்கமோ ஒருபோதும் தமிழ்த்தேசிய இயக்கங்களுக்கு எதிரானவையல்ல. 

மாறாக தமிழ்த்தேசியத்திற்கெதிரானது எது என்றால் அது இந்திய தேசியம். தமிழ்த் தேசியத்தை இந்திய தேசியத்துடன்தான் ஒப்பிட வேண்டுமே தவிர திராவிட இயக்கங்களுடன் ஒப்பிடுவது எவ்வளவு பெரிய முட்டாள்த்தனம்? 

இத்தகைய ஒரு முட்டாள்த்தனத்தைத்தான் சில நபர்கள் திட்டமிட்டுப் பொய்ப்பரப்புரைகள் மூலமாக பேசியும் எழுதியும் சில இளைஞர்களை தவறாக வழிகாட்டி வருகின்றனர். அவர்களுக்கு தவறான உள்நோக்கமிருக்கிறது.  இந்திய தேசியத்தை எதிர்த்துப் பேசி ஆள்பிடிக்க அவர்களால் முடியாது. தமிழகத்தில் வேர்விட்டு விழுதுகள் விட்டு வளர்ந்திருக்கும் திராவிட இயக்கத்தில் சில கிளைக் கட்சிகளின் மீது (தி.மு.க., அ.தி.மு.க.) அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிப் போய்விட்டதாக கடுமையான குற்றச்சாட்டுகள் உள்ளன. அத்தகைய கட்சிகளின் மீது மக்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வை மூலதனமாக வைத்து அரசியல் இலாபமடையும் நோக்கில் ஒட்டுமொத்த திராவிட இயக்கங்களையும் அவதூறு பேசி ஆள்பிடிக்கும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். அவ்வாறு திராவிட இயக்கங்களின் அடிப்படைக் கொள்கைகளிலிருந்து விலகிச் சென்ற கட்சிகளை நேர்மையான முறையில் விமர்சிக்க வேண்டுமே தவிர ஒட்டு மொத்த திராவிட இயக்கத்தையோ அல்லது பொதுவுடமை இயக்கத்தையோ தமிழ்த்தேசியத்திற்கு எதிரானதாகச் சித்தரித்துப் பொய்ப்பரப்புரை செய்வது அரைவேக்காடுகள் செய்யும் வேலை.

தமிழகத்தில் சாதிய ஒடுக்குமுறைகள், பெண்ணடிமை, பார்ப்பன சனாதன, மனுதர்ம ஒடுக்குமுறைகள் இருக்கும் வரை திராவிட இயக்கத்தின் தேவை இருந்துகொண்டேதான் இருக்கும். திராவிட இயக்கக் கொள்கைகளிலிருந்து விலகிச்சென்ற கட்சிகள் மக்களிடமிருந்தும் விலக்கி வைக்கப்படும். திராவிட இயக்கம் தமிழ்த்தேசியத்திற்கு எதிரானது எனப் பொய்ப்பரப்புரை செய்யும் கும்பலின் முயற்சிகள் அம்பலப்ப்ட்டுப்போகும். அந்த அரைவேக்காடுகளின் செயல் ஒருபோதும் வெற்றிபெறாது.