நாடாளுமன்றத்தேர்தல் நெருங்கி வருவதையடுத்து காங்கிரஸ் கட்சியின் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் கடந்த இரு வாரங்களுக்கு முன்பாக சென்னையில் ”ஈழத்தமிழர்கள் குறித்த இந்திய அரசின் நிலைப்பாடு” என்கிற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடத்தினார்.
ஒட்டுமொத்தத் தமிழகமும் அசந்து போய் அடேங்கப்பா... என்று மூக்கில் விரலை வைக்குமளவுக்கு இலங்கையில் இராசபக்சே அரசு இனப்படுகொலை செய்தது, போர்க்குற்றம் செய்தது, மனித உரிமைகளை மீறியது, மனித குலத்திற்கெதிரான தீங்குகளைச் செய்தது என்றெல்லாம் புகார் வாசித்தார். குதிரை ஓடிவிட்டபிறகு லாயத்தை எதற்கப்பா மூடுகிறான் இந்தக் கோமாளி என்கிற அளவிலேதான் தமிழக மக்களாலும் உலகத் தமிழர்களாலும் பார்க்கப்பட்டது.
இந்திய அரசின் நிலைப்பாட்டை டெல்லியிலே பத்திரிக்கையாளர்களை அழைத்துத் தெரிவிக்காமல் சென்னையிலே ஒரு நட்சத்திர விடுதியிலே மூடிய அரங்கில் ஒரு சில தமிழகச் செய்தியாளர்களை மட்டும் அழைத்து இந்திய அரசின் நிலைப்பாடு என்று ஒரு பித்தலாட்ட அறிவிப்பை வெளியிட்டார் சிதம்பரம்.
தமிழக ஊடகங்கள் மட்டுமே அவர்களது இலக்கு. தி இந்து போன்ற தமிழக ஊடகங்களே கூட சிதம்பரம் பேசிய பேச்சைச் சுத்திகரிப்பு செய்து அதிலே இருந்த இனப்படுகொலை என்கிற சொற்களையெல்லாம் நீக்கிவிட்டு உப்புசப்பில்லாமல் வெளியிட்டு காங்கிரசையும், ப.சிதம்பரத்தையும் விட நாங்கள் இராசபக்சேவுக்கு விசுவாசமானவர்கள் என்று பறைசாற்றிக் கொண்டார்கள். வேறு மாநில ஊடகங்களோ, வட இந்திய ஊடகங்களோ இச்செய்தியை வெளியிட்டு இந்திய அளவில் விவாதங்களைக் கிளப்பிவிடாத அளவிற்கு மிகக் கவனமாக ஒழுங்கு செய்தார்கள்.
இது ஒருபுறமிருக்க அதே கருத்தரங்கத்தில் பேசிய ப.சிதம்பரத்தின் அல்லக்கை மயிலாடுதுறை கே.எஸ்.அழகிரி வைகோ மற்றும் பழ.நெடுமாறன் குறித்து பல்வேறு அவதூறான செய்திகளைப் பேசினார். அதாவது வைகோ-வும், நெடுமாறனும் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுக்குத் தவறான நம்பிக்கையூட்டி அதன் மூலம் ஈழத்திலே நடைபெற்ற இனப்படுகொலைகளைத் தடுக்கத் தவறினர் என்பது அவரது குற்றச்சாட்டின் சாரம்.
ஈழத்திலே நடைபெற்ற இனப்படுகொலையை வைகோ-வும், பழ.நெடுமாறனும் தடுக்க இயலவில்லை என்பது புதிய செய்தியா? அவர்கள் கைமீறித்தானே அவ்வளவும் நடந்தது. அவர்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்தத்தமிழினமும் இலங்கையிலே நடைபெற்ற போர் நிறுத்தப்படவேண்டும் தமிழ் மக்கள் காக்கப்படவேண்டும் என்றுதானே முட்டிமோதி முயன்றது பிறகு அது முடியாமல் போனது. கருணாநிதி தி.மு.க., சோனியா காங்கிரஸ், இராசபக்சே கும்பல்,போரைத் நிறுத்த முயற்சித்த தமிழர்களின் அத்தனை முயற்சிகளையும் முறியடித்து அப்படியொரு இனப்படுகொலையை நடத்தி முடித்தது.
ஒன்றரை இலட்சம் பேர் படுகொலை செய்யப்படுவதைத் தடுக்க முயன்றவன் முடியாமல் தோற்றதாலே குற்றவாளி.. ஆனால் ஒன்றரை இலட்சம் பேரைக் கொன்றவன் நிரபராதியா? எந்த ஊரிலே இப்படியொரு நியாயத்தை மேடை போட்டுப் பேச இயலும். ஆம்... அறம் வளர்த்த, நீதி வளர்த்த தமிழகத்தில் மட்டுமே முடியும்.
அப்படியான அழகிரியின் பேச்சை சிறுபிள்ளைகள் கூட நம்பாத காரணத்தால் அது ஒட்டு மொத்தமாக தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டது. காங்கிரஸ்காரன் போரை நிறுத்த முயற்சி மேற்கொண்டதாகவும் பிரபாகரன் ஒத்துக் கொள்ளவில்லை என்றும் ஒரு புனை சுருட்டை அவிழ்த்து விட்டால் எவனாவது நம்புவானா? போரை நடத்தியதே காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசுதானே?
போரை நிறுத்துவதற்காக சில நிபந்தனைகளை விதித்ததாகவும் அந்த நிபந்தனைகளை (வைகோ, நெடுமாறன் ஆகியோரின் ஆலோசனையின் பேரில்) பிரபாகரன் ஏற்கவில்லை என்றதால் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொன்றோம் என்று ஒரு மத்திய அமைச்சர் வெளிப்படையாகப் பேசியதிலிருந்தே இவர்கள்தான் போரை நடத்தினார்கள் என்பதும் இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்தார்கள் என்பதும் புலனாகிவிட்டதே..
”காங்கிரசிலே மத்திய அமைச்சராக இருக்கும் ப.சிதம்பரமே கட்சியை விட்டும் பதவியை விட்டும் விலகிவிடு இல்லையேல் உன்னைக் கொன்று விடுவோம்” என்று ஒருவன் கூறுவதும், பிறகு பதவி விலக மறுத்ததால் அதே ஒருவன் ப.சிதம்பரத்தைக் கொன்று விட்டானென்றால் அது குற்றமில்லையா?
அவ்வாறு ஒரு கொலையைச் செய்துவிட்டு நான் விதித்த நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொள்ளாததால் கொன்றேன் என்று தனது செயலை நியாயப் படுத்துவானென்றால் அது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்?
புலிகள் அமைப்பு உருவானதே தமிழீழ விடுதலை கோரித்தான். அந்தக் கோரிக்கையிலே என்ன தவறு. அந்தக் கோரிக்கையைக் கைவிடு இல்லையென்றால் புலிகள் அமைப்பையும் ஒட்டு மொத்தத் தமிழர்களையும் கொன்று குவிப்பேன் என்றெல்லாம் சொல்லி ஒரு இன அழிப்பை காங்கிரசும், இராசபக்சேவும் கூட்டணி சேர்ந்து நடத்தியதும் அதற்கு கருணாநிதி திமுகவும் அவரது குடும்ப உறுப்பினர்களும் துணை போனதற்கும் இந்தக் கருத்தரங்கில் பேசியவையே சாட்சிகளாகும்.
வங்கதேசத்தில் கடந்த 1971ம் ஆண்டில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்காக 2010ம் ஆண்டிலேதான் சர்வதேச குற்றவிசாரணை ஆணையமே அமைக்கப்பட்டது. அதன் விசாரணை முடிவில் போர்க்குற்றம் நிரூபிக்கப்பட்டு வங்கதேச எதிர்க்கட்சித் தலைவர் அப்துல் காதர் முல்லா 12-12-2013 அன்றுதான் தூக்கிலிடப்பட்டார். தூக்குத்தண்டனையையோ, மரண தண்டனையையோ ஆதரிக்காத போதும் போர்க்குற்றங்களுக்குத் தண்டனை உறுதி என்கிற செய்தியை மட்டும் அந்நிகழ்விலேயிருந்து எடுத்துக் கொண்டு நம்பிக்கையைப் பெறுவோம்.
ஆகவே காலம் இன்னும் முடிந்துவிடவில்லை. இலங்கை இனப்படுகொலையில் தொடர்புடைய ப.சிதம்பரம், கருணாநிதியின் மகள் கனிமொழி ஆகியோர் அனைவரும் விசாரணை செய்யப்பட்டுத் தண்டிக்கப் படுவது உறுதி.
ப.சிதம்பரத்தின் புரட்டரங்கம் குறித்து மே பதினேழு இயக்கத்தின் தோழர் திருமுருகன் காந்தி அவர்கள் வழங்கிய நேர் முகம்.
விறுவிறுப்பு என்னும் இணையதளம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகத் துவங்கப்பட்டு ரிஷி என்கிற தனிமனிதரால் நடத்தப்பட்டுவரும் இணையதளம் ஆகும். அதற்கென்று தனியாக செய்தி ஆதாரங்களோ, எக்ஸ்குளூசிவான செய்தி மூலங்களோ கிடையாது. உலகமெங்குமிருந்து செய்தியோடைகளில் கிடைக்கும் செய்திகளுக்கு வார்த்தை ஜோடனை செய்து வெளியிட்டு வரும் ஊடகம் ஆகும். தமிழகச் செய்திகளைப் பொருத்தவரை தட்ஸ்தமிழ்தான் இந்த விறுவிறுப்பு தளத்திற்கு முக்கிய செய்தி மூலமாகும்.
ப.சிதம்பரம் நடத்திய புரட்டு அரங்கம் பற்றிய செய்திகள் தமிழக ஊடகங்களில் வெளியானதும் அந்த மொட்டைச் செய்திக்கு கை,கால், கண், காது மூக்கு என்று அங்கங்கள் வைத்து சோர்ஸ், சோர்ஸ் என்று சில நபர்களின் பெயரையும் பிறவற்றை பூடகமாகவும் வைத்து வழக்கம்போல ஒரு கற்பனைக் கதையை சுவராசியமாக அனைவரும் இரசிக்கும் வண்ணம் வெளியிட்டது விறுவிறுப்பு தளம்.
தமிழக மக்களுக்கு எப்போதுமே இருக்கும் இலங்கைப் பிரச்சினை தொடர்பான செய்திகளில் காட்டும் ஆர்வத்தை வைத்தே கல்லாக்கட்டிக் கொண்டிருக்கும் தளம் இப்படியொரு வாய்ப்பைத் தவறவிடுமா?
அவர்களுக்கு இருக்கும் சோர்ஸ்கள் முழுமையும் இராசபக்சேவிடம் இடம் மாறிய குமரன் பத்மனாபன், கருணா மற்றும் ஜெயராஜ் போன்ற இலங்கை உளவுத்துறையைச் சேர்ந்த சில தமிழர்கள் மட்டுமே. புலிகள் தரப்பிலோ தமிழகத்திலோ அவர்களுக்கு சோர்ஸ் எதுவும் கிடையாது.
விறுவிறுப்பு தளத்திடம் செய்திக்கான சோர்ஸ் இருந்திருக்குமானால் இது போன்ற செய்திகள் முதலில் விறுவிறுப்பு தளத்திலே வெளியாகியிருக்கவேண்டும் பிறகு அதனை மேற்கோள் காட்டி கே.எஸ்.அழகிரி பேசியிருக்க வேண்டும். பிறகு அதனை ஆமோதித்து ப.சிதம்பரம் பேசியிருக்க வேண்டும். ஆனால் அப்பரசண்டிகள் கோட்டைவிட்டுவிட்டார்கள். :-)
வழக்கம்போல செய்தியோடையில் கிடைத்த தகவல்களுக்கு ஜோடனை செய்து விறுவிறுப்பு ஒரு கட்டுக் கதையை வெளியிட அதிலுள்ள உள்பொருள் என்ன? இல் பொருள் என்ன? என்பது பற்றி எதுவும் ஆராயாமல் என்னவோ அக்கட்டுரை வைகோ-வுக்கும் பழ. நெடுமாறனுக்கும் எதிராக இருப்பதாகக் கருதிக் கொண்டு பரபரவென்று அதைப் பகிர்ந்து வருகிறார்கள் கருணாநிதி தி.மு.கவினர் மற்றும் சுப்பிரமணிய சுவாமி இரசிகர்கள்.
ஆனால் அந்தக் கட்டுரை முழுவதுமே சொந்தச் செலவில் சூனியம். எப்படி?
1. விடுதலைப் புலிகளை அவர்களது அடிப்படை உரிமைக் கோரிக்கையைக் கைவிடுமாறு இந்திய அரசும், ப.சிதம்பரம், கருணாநிதி மகள் கனிமொழி ஆகியோர் மிரட்டல் விடுத்து ”பிளாக் மெயில் செய்தது உண்மையென்றாகிறது.
2. அவ்வாறான ஒரு மிரட்டல்/ “ப்ளாக் மெயிலுக்கு” விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் ஒத்துக் கொள்ள, அடிபணிய மறுத்ததால் இராசபக்சேவுடன் சேர்ந்து ஒன்றரை இலட்சம் தமிழர்களை இந்திய காங்கிரஸ் அரசும், ப.சிதம்பரம், கருணாநிதி திமுக ஆகியோர் துணையுடன் இனப்படுகொலை செய்து முடித்ததும் உண்மையென்றாகிறது.
3. தமிழீழக் கோரிக்கை நியாயமானது என்று இலங்கையில் இப்போதுள்ள நிலைமையும் கூட நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டிவரும் நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் மட்டுமல்ல வைகோ, பழ நெடுமாறன் ஆகியோரும் தமிழீழ விடுதலை ஒன்றே தீர்வு என்று நம்பியதோடு எந்த நிலையிலும் அதனை விட்டுத் தரத் தயாராக இருந்தது இல்லை என்பதும் நிரூபணமாகியுள்ளது. வைகோ-வும் நெடுமாறனும் இன்றும் சொல்லிவரும் அதே கொள்கையைத்தான் அன்றும் சொல்லியிருக்கின்றனர். அதிலென்ன தவறு? கொள்கையைச் சொன்னால் கொன்று விடுவேன் எனச் சொல்லி மிரட்டியதும் மிரட்டலுக்கு அடிபணியாததால் தமிழ் மக்களைக் கொன்று குவித்ததும்தானே தவறு?
4. இறுதிவரை வைகோ-வும் பழ.நெடுமாறன் அவர்களும்தான் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு நம்பிக்கைக்குரியவர்களாகவும் ஆதரவு தருபவர்களாகவும் இருந்தனர் என்பதும் புதிதாய் முளைத்த காளான்கள் அண்ணன் சொன்னார், அண்ணன் சொன்னார் என்று சொல்வதெல்லாம் புருடா என்பதும் புலனாகிறது.
5. ப.சிதம்பரம், கருணாநிதி, கனிமொழி ஆகியோர் இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் ஆகியவற்றிற்குத் துணைபோனவர்கள் என்பதும் உறுதியாகிறது. பின்னாளில் போர்க்குற்ற விசாரணை நடைபெறும்போது இவர்கள் பேசியதெல்லாம் ஆதாரங்களாக எடுத்துக் கொள்ளப்பட்டு தண்டிக்கப் படுவார்கள் என்பது உறுதி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக