வெள்ளி, 22 மே, 2015

பிறந்த நாள்.

1980களுக்கு முன்பாக சிற்றூர்களில் பிறந்த எல்லாக் குழந்தைகளுக்கும் பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் இருந்ததில்லை.

தான் பிறந்த நாள் எதுவென்று பிள்ளைகளுக்கோ, தன் பிள்ளைகள் பிறந்தநாள் பெற்றோருக்கோ, உறவினர்களின் பிறந்தநாள் குடும்பத்தினருக்கோ நினைவிலிருக்காது.

அம்மாவுக்கு மட்டும் குத்து மதிப்பாக தமிழ்மாதக் கணக்கில் ஆவணி மாசம் ரெண்டாவது ஞாயிறுக்கு மறுநாள்னோ, புரட்டாசி மாசம் மூணாம் சனிக்கு முந்தின நாள்னோதான் நினைவிலிருக்கும்.

ஆங்கில நாள்காட்டிப்படியான நாட்கள் நிச்சயம் எவருக்கும் தெரிந்திருக்காது. ஒருவேளை தெரிந்துகொள்ள வேண்டிய சூழல் வந்தால் இருக்கும் ஒரே வழி ஜாதகம். எதோ ஒரு பீரோவிலோ அல்லது ட்ரெங்குப் பெட்டியிலோ அடி வரிசையில் கிடக்கும் அந்தப் புத்தகத்தைத் தேடிப்பிடித்துப் பிறந்த நாளை அறிந்து கொள்ளலாம்.

அப்படியிருந்தும் பத்தாவது முடிந்ததும் ஒவ்வொரு படிவம் நிரப்புகிற வேளையிலும் ஒரு இடத்தில் பிறந்த நாளை நிரப்பிவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விடுகிறது. இணைய யுகத்தில் எல்லாக் கணக்கிலும் பிறந்த நாள் பதிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தத்தால் பிறந்த நாளை நினைவிலே வைத்துக் கொள்ளவேண்டிய அவசியமாகிவிட்டது.

ஒவ்வொரு நாளும் நாம் நினைவில் வைத்துப் பதிகிற நம் பிறந்த நாள் நமதல்ல.. அது வேறு யாரோ ஒருவரால் குத்துமதிப்பாகத் தீர்மானிக்கப் பட்டது என்கிற கடுப்பு அனைத்து சிற்றூர்களில் பிறந்த இப்போது முப்பதைத் தாண்டிய பெரும்பாலானோருக்கு இருக்கும்.

நம் பிறந்த நாள் என ஒன்றிருக்க வேறு நாள் ஒன்றைக் காலம் முழுவதும் எழுதிக் கொண்டிருக்கும் நிலையில் நம்மைத் தள்ளிவிட்ட அந்த வில்லன் யார்?

துவக்கப் பள்ளித் தலைமையாசிரியர்.

சிற்றூர்ப் பள்ளிகளில் சேர்க்கையென்பது முறைப்படி இப்போது நடப்பது போல சான்றிதழ், படிவங்களெல்லாம் நிரப்பி எடுத்துச் சென்று குறிப்பிட்ட அல்லது பள்ளி திறக்கும் நாளில் வரிசையில் நின்று நேர்முகம் கண்டு நடந்ததில்லை.

அக்காள், அண்ணன், பக்கத்து வீட்டுப் பையன், பொண்ணு ஆகியோர் பள்ளி செல்லும் வேளையில் ”ஏலே, பள்ளிக்கொடமா போற.. இந்தா, இவனையும் கூட்டிட்டுப் போயேன்” எனக் கூட்டத்தோடு கூட்டமாக அனுப்பிவிடுவார்கள். பள்ளியிலே போனதும் நேரடியாக ஒண்ணம் வகுப்பல்லாது சில நாட்கள் /மாதங்கள் விளையாட்டு வகுப்புகள் மட்டுமே நடக்கும்.

விளையாட்டு ஆசிரியர் அல்லது காப்பாளர் அடுத்த கல்வியாண்டு துவக்கத்தில் ஐந்து வயதைத் தாண்டிவிட்டதாகக் கருதும் ஒரு கூட்டத்தை ஒண்ணாம் வகுப்புக்குத் தள்ளி விடுவார்.

ஒண்ணாம் வகுப்பில் மாணவர் பதிவு செய்ய வேண்டுமே. நண்டு சிண்டுகள் அனைவரும் தலைமையாசிரியர் முன்பாக வரிசையில் நிறுத்தப் படுவார்கள். தலைமையாசிரியர் அழைத்து வலது கையால் தலையைச் சுற்றி இடது காதைத் தொடும் பரிசோதனை செய்து மாணவர் ஐந்து வயதைத் தொட்டவர்தானா என்பதை உறுதி செய்து கொள்வார்.

மாணவரிடம் உன் பெயர் என்ன? உன் தந்தை பெயர் என்ன? என்பதைத் தெரிந்து கொள்வார். தந்தை பெயர் தெரிந்து கொண்டதும் ”இன்னார் மகனாலே நீ” ம்ம் ”போ..போ நல்லா வருவே”னு வாழ்த்தி அனுப்புவார்.

பெயர் மட்டுமே தெரிந்த மாணவர்களின் மற்ற விபரங்களனைத்தையும் தனக்குத் தானே நிரப்பி படிவத்தைப் பூர்த்தி செய்து சேர்க்கையை முடிப்பார் தலைமையாசிரியர். பிறந்த நாள் இடத்தை நிரப்பும் போது மட்டும் மிகவும் தெளிவாகக் கணக்கிட்டு பள்ளி துவங்கும் ஜூன் மாதத்தில் ஐந்து வயதைத் தாண்டியிருக்க வேண்டும் என்பதை மனதில் நிறுத்தி ஐந்து வருடங்களுக்கு முந்தைய மே மாதத்தில் குத்து மதிப்பாக ஒரு நாளைப் போட்டு சேர்க்கையை முடித்திருப்பார்.

அந்த ஆண்டுக்கான சேர்க்கை முடிந்திருக்கும் நிலையில் பதிவேடுகளைப் பார்த்தால் சேர்ந்திருக்கும் நூறு மாணவர்களில் தொன்னூற்று ஒன்பது பேர் ”மே மாதத்தில் ஒரு பொன்னாளில் பிறந்திருப்பர்”

அப்படிப்பட்ட தலைமையாசிரியர்களின் புண்ணியத்தால் வேறு எதோ ஒரு நாளில் பிறந்தும், மே மாதத்தில் ஒரு நாளை காலம் முழுவது பிறந்த நாள், பிறந்தநாள் என்று பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ள பல கோடிப் பேர்களில் நானும் ஒருவன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிற அதே வேளையில்...

என்போலவே தான் பிறக்காத நாளான மே மாதத்தில் பிறந்தநாள் எனப் பள்ளிப் பதிவேட்டிலே பதிவு செய்யப்பட்டதால் எதிர்பாராத வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டிருக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு எனது "ஹைஃபை”யை தெரிவித்துக் கொள்கிறேன்.

பள்ளித் தலைமையாசிரியருக்கு நன்றி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக