ஊடகங்களும் அரசியல் நோக்கர்களும் வாக்கு வங்கிக் கணக்குகளை வைத்துக் கொண்டு கூட்டல் கழித்தல் கணக்குகள் போட்டு கணிப்புகளை வெளியிட்டு வருகிறார்கள். ஆனால் உண்மையில் வாக்கு வங்கிக் கணக்குகள் தொகுதிப் பங்கீட்டை மட்டுமே தீர்மானிக்கின்றன. வெற்றி தோல்வியைக் கட்சிசாராத மக்களே தீர்மானிக்கிறார்கள்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் சுமார் 60% அளவுக்கு ஒவ்வொரு தனிப்பட்ட கட்சிகளின் வாக்கு சதவீதத்தையும் தாண்டி கட்சி சாராத மக்களின் வாக்கு சதவீதமாக உள்ளது.
இந்த 60% வாக்குகள்தான் ஒவ்வொரு முறையும் அ.தி.மு.க. அணிக்கும், தி.மு.க. அணிக்கும் பிரிந்து போய் அல்லது ஒரு தரப்பாகக் குவிந்து வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற ஆற்றலாக இருக்கின்றன.
எந்த ஒரு தனிப்பட்ட அரசியல் கட்சியின் வாக்கு சதவீதமும் 10% க்கு அதிகமாக இல்லை என்பதே யதார்த்தமான நிலையாகும்.
தேர்தலில் இரண்டே வலுவான அணிகள் என மக்களால் கருதப்படும் கூட்டணிகள் போட்டியிடும் போது கட்சிசாராத மக்களின் வாக்குகளான 60% வாக்குகள் இவ்விரு அணிகளுக்குள்ளேயே பங்கிடப்பட்டு விடுகின்றன. மூன்றாவதாக அல்லது அதற்குப் பின் வரும் கட்சிகளுக்கு இவ்வாக்குகள் விழுவதில்லை.
இம்முறை பா,ஜ,க., மறுமலர்ச்சி தி.மு.க. உள்ளடங்கிய மாற்று அணி வலுவாகக் களமிறங்குவதாலும் மத்தியிலே காங்கிரசுக்கு மாற்றாக வரும் வாய்ப்புள்ளதாகக் கருதப்படுவதாலும் பெருவாரியான கட்சிசாராத மக்களின் வாக்குகளை இவ்வணி பெறும் வாய்ப்பிருக்கிறது.
வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலத்தில் ஆளும் அ.தி.மு.க. அணி பெருவாரியான இடங்களைக் கைப்பற்றும் என கணிப்புகள் கூறி வந்தாலும், பா.ஜ.க.அணி அதிக அளவிலான கட்சிசாராத மக்களின் வாக்குகளைப் பெறுவதன் மூலம் அ.தி.மு.க.வுக்கு மிகப்பெரும் சவாலாக விளங்கும் என்பது திண்ணம்.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க, ம.தி.மு.க., பா.ம.க., கம்யூனிஸ்டுகள், சிறுபான்மை அமைப்புகள், அடங்கிய வானவில் கூட்டணி, தமிழீழ இனப்படுகொலைச் செய்திகளால் நாடே கொந்தளித்துப் போய்க் கிடந்த நிலைமை இவற்றையெல்லாம் தாண்டி தி.மு.க. காங். அணி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. அச்சமயத்தில் வெளியான கருத்துக் கணிப்புகள் அனைத்திலும் அ.தி.மு.க. அணியே அதிக இடங்களில் வெற்றிபெறும் என்று கணிக்கப் பட்டிருந்தது.
ஆனால், தி.மு.க. அணி 27 இடங்களிலும், அ.தி.மு.க. அணி 12 இடங்களிலும் வெற்றி பெற்றன. என்ன காரணம்?
தி.மு.க. காங். மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் கூட்டணி - அரசு அதிகாரங்களைப் பயன்படுத்தினார்கள் என்பது ஒருபுறமிருந்தாலும் அ.தி.மு.க. அணியில் தேசியக் கட்சியொன்று காங்கிரசுக்கு மாற்றாக இல்லை என்பது மிக மிக முக்கியக் காரணமாக இருந்தது.
தி.மு.க. அணி பிரதமராக மன்மோகன் சிங் மீண்டும் வருவார் எனப் பிரச்சாரம் செய்தபோது, யார் பிரதமர் வேட்பாளர்? அ.தி.மு.க. அணி வெற்றிபெற்றால் டெல்லியிலே யாரைத் தேர்ந்தெடுப்பார்கள்? வெறும் 39 உறுப்பினர்களைக் கொண்டு இவர்களால் என்ன செய்துவிட முடியும் என்கிற குழப்ப மனநிலை அ.தி.மு.க., ம.தி.மு.க. அணியை வெகுமளவு பாதித்தது.
இம்முறை இதே குழப்ப மனநிலை தி.மு.க. அணிக்கும் (காங்கிரஸ் இவ்வணியில் இணைத்துக் கொள்ளப்படாத நிலையில்) அ.தி.மு.க. அணிக்கும் இருக்கப்போகிறது.
தமிழின விரோத காங்கிரஸ் மத்தியிலே தொடர்ந்து பத்தாண்டுகள் ஆட்சியிலே இருந்து வருகிறது. மீண்டும் வருவோம் என்கிற எண்ணம் அவர்களுக்கே இல்லை. மக்கள் மாறுதலை விரும்புகிறார்கள். காங்கிரசின் தமிழின விரோத நடவடிக்கைளால் நொந்து போயுள்ள மக்கள் மீண்டும் காங்கிரசோ அல்லது காங்கிரசின் ஆதரவு பெற்ற அணியோ ஆட்சியிலமர ஒருபோதும் சம்மதிக்க மாட்டார்கள்.
ஒருவேளை காங்கிரஸ் பெரும்பான்மை பெறாத சூழலில் தி.மு.க. அணியோ, இடதுசாரிகளை உள்ளடக்கிய மூன்றாவது அணியோ காங்கிரசுக்கு முட்டுக் கொடுக்கத் தயங்க மாட்டார்கள் என்பதை அனைத்து மக்களும் உணர்ந்தே இருக்கிறார்கள்.
தமிழக மக்களைப் பொறுத்தவரையில் மத்தியிலோ, மாநிலத்திலோ வெற்றிபெறும் என்று கருதுகிற அணிக்கு வாக்களித்து தாங்களே நேரடியாகப் பிரதமரையோ, முதல்வரையோ தேர்ந்தெடுத்தோம் என்கிற மனநிறைவு அடைவதே வழக்கமாக இருந்திருக்கிறது. இந்த உளவியல் காரணி பா.ஜ.க., ம.தி.மு.க. அடங்கிய அணிக்கு மிகவும் வலுச் சேர்க்கும். இவ்வணியில் வேறு சில கட்சிகள் சேரும் பட்சத்தில் இவ்வணியே தமிழகத்தில் முதல் அணியாகவும் வரும் வாய்ப்பிருக்கிறது.
எனவே வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சிட்டுக்குருவிகள் வல்லூறுகளை வீழ்த்தும்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக