வியாழன், 31 ஜனவரி, 2013

கமலஹாசனை ஏன் ஆதரிக்க முடியவில்லை?

வெறும் திரைப்படமான விசுவரூபம் குறித்து தேவைக்கு அதிகமாகவே டுவிட்டர், முகநூல் வலைப்பதிவுகளில் விவாதம் நிகழ்த்தப்பட்டுவிட்ட நிலையில் விசுவரூபம் அரசியலிலும் கிளை பரப்பி பல புதிய பரிமாணங்களை எட்டியுள்ளது. இப்போது திரைப்படம் என்ற அளவைத் தாண்டி அரசியலுக்குள் நுழைந்துவிட்ட நிலையில் அது துவக்கி வைத்த சர்ச்சைகள் புறந்தள்ள முடியாதவைகளாகி விட்டன.

என்னைப்பொருத்தவரை ஆரம்பம் முதலே கமலின் தவறான அணுகுமுறை ஓவ்வொரு அசைவிலும் காணக் கூடியதாக இருந்தது. அவர் கதையைத் தேர்ந்தெடுத்தது, படமெடுத்தது, அதற்குத் தலைப்பிட்டது, தலைப்பை வடிவமைத்தது, தூண்டுப்படம் வெளியிட்டது இவையனைத்திலும் துளியும் யாரும் தலையிட உரிமை கிடையாது. அது ஒரு படைப்பாளியின் சுதந்திரம். அதை விமர்சிக்கும் எண்ணமுமில்லை.

பெரும் பொருட்செலவில் எடுத்த படத்தை வெளியிட அவர் வெளியீட்டாளர்களை அணுகியபோது கொள்வாரில்லாமல் போனது சோகம்தான். தணிக்கைக்குழுவில் இருந்த நபர் ஒருவரால் வெளியீட்டாளர்களிடம், படத்தில் திரைப்படத்தை வெற்றிபெறச் செய்யத்தக்க வகையிலான மசாலா கலவையில்லை, இது மாபெரும் சோதனை முயற்சி என செய்திகளை கசிய விட்டது வெளியீட்டாளர்களைப் பின்வாங்கச் செய்ததுடன், எடுத்துக்கொள்ள முன்வந்த வெளியீட்டாளர்களையும் அடிமாட்டு விலைக்குக் கேட்க வைத்தது.

தணிக்கைக்குழு மத்திய ஆளும்கட்சி உறுப்பினர்களால் நிரப்பப்படுகிறது. மத்தியிலே ஆளுபவர்கள் காங்கிரசு மற்றும் தி.மு.க. தணிக்கைக்குழுவில் இருந்த நபர் இது போன்ற விபரங்களை வெளியே கசிய விட்டு படத்தின் வியாபாரம்/விலையைக் குறைப்பது யாருக்கு லாபம் தரும்? வெளியீட்டாளர்கள் அல்லது தொலைக்காட்சி உரிமையாளர்கள் இருவருக்குதான்.  தமிழகத்தின் தொலைக்காட்சி வலையமைப்பில் காங்கிரசுக்கு அவ்வளவு செல்வாக்கில்லை. ஆளும்கட்சியின் ஜெ.வுக்கு தனிக்கைத்துறையில் ஆளிருக்க வாய்ப்பில்லை. இதனால் முழுக்க முழுக்க ஆதாயமடையப்போவது தி.மு.க./கருணாநிதி குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நிறுவனங்களும், கருணாநிதி குடும்பத் திரைப்பட வெளியீட்டு நிறுவனங்களும்தான். திட்டமிட்டது போல திரைப்படத்தின் தொலைக்காட்சி வெளியிடும் உரிமை கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளுக்குக் கிடைக்காமல் வேறு தொலைகாட்சிகளுக்கு தரப்பட்டுவிட்டாலும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கான திரையரங்க வெளியீட்டு உரிமைகளை அள்ளின கருணாநிதி குடும்ப வெளியீட்டு நிறுவனங்கள் என்பது பின்னால் வந்த செய்தி.

படத்தின் தொலைக்காட்சி உரிமை ஜெயா தொலைகாட்சிக்கு பேசப்பட்டு பேரம் படியாமல் பிறகு விஜய் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுவிட்டதாம். ஜெயா தொலைக்காட்சி எப்போதுமே இது போன்று புதிய திரைப்படங்களை உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வெளியிடும் போட்டியில் இருந்ததாகத் தெரியவில்லை. இப்போது புதிதாக அவர்கள் ஆசைப்பட்டாலும் பெரிய அளவில் வியாபாரமாகக்கூடிய அளவிற்கு பார்வையாளர்களோ அல்லது விளம்பரங்களோ இல்லை என்பதுதான் உண்மை.

ஆக படம் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரமாகவில்லை என்பது தெரிந்த பிறகு நட்டத்திற்கு வியாபாரம் செய்ய எந்த முதலாளிதான் வருவான். கையைக் கடிக்கும் என்று தெரிந்தபின் தக்காளியாக இருந்தாலும் பாலாக இருந்தாலும் கீழே கொட்டி வீணடித்த உற்பத்தியாளர்களைப் பார்த்திருக்கிறோம். தர்ம காரியங்கள் செய்ய வியாபாரிகள் தயாராக இருப்பதில்லை. 

அந்த வகையில் கமல் ஏதேனும் செய்து படத்தை விற்று விட எண்ணித்தான் புதிய முயற்சியாக டிடிஎச் ஒளிபரப்பைத் தேர்ந்தெடுத்தார். அவர் டிடிஎச்-ல் படத்தை வெளியிட்டிருந்தால் நிச்சயம் அவர் போட்ட முதல் திரும்பக் கிடைத்திருக்க பெருமளவு வாய்ப்பிருந்தது. அவர் என்ன லாபக் கணக்கு வைத்திருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. திரையரங்குகளிலும் வெளியிட்டே தீரவேண்டும் என்றும் முயற்சி செய்தார். ஆனால் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பால், தனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, டிடிஎச் ஒளிபரப்பில் ஏற்பட்ட சர்ச்சையை தனது படத்திற்கான விளம்பரமாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு டிடிஎச்-ல் முன்பதிவு செய்தவர்களையெல்லாம் முட்டாளாக்கிவிட்டு மீண்டும் திரையரங்கப் பாதைக்கு வந்தார்.

சிறுபான்மை மக்கள் குறித்த சர்ச்சைக்குரிய திரைக்கதையை எடுத்தால் எதிர்ப்புகள் வரும் என்பது தெரியாதவரல்ல கமல். நிச்சயம் தெரிந்தேதான் வைத்திருப்பார். அதனாலேதான் படத்தைத் திரையிடும்முன் இசுலாமிய அமைப்பினருக்குக் காட்டிட முன்வந்தார். 

படத்தில் இந்திய இசுலாமியர்களுக்கு எதிராக எதுவுமில்லை என படம் பார்த்த அனைத்து நண்பர்களும் தெரிவித்தபோதும் இசுலாமியர்கள் தாங்கள் மதிக்கிற திருக்குரான் இழிவுபடுத்தப் படுவது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு என்பது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளத்தக்கதே. கமல் காட்சிகளை நீக்க முன்வராத நிலையில்  இசுலாமிய அமைப்புகள் நேரடியாக சட்டத்தைக் கையிலெடுக்காமல் முறையான வழிகளில் அரசிடம் முறையிட்டு படத்திற்குத் தடை வாங்கியது.

தமிழக அரசு இப்படத்தைத் தடை செய்தது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என நான் கருதவில்லை. கருத்து சுதந்திரம் என்பது தேர்ந்தெடுத்த விசயங்களில் மட்டுமே வேண்டும் மற்றவற்றில் கடிவாளம் போடவேண்டுமென்பதை ஏற்பதற்கில்லை. இதே அரசுகள் ஈழத்தில் ஏற்பட்ட துயரங்களைத் திரையில் வடித்த படங்களான காற்றுக்கென்ன வேலி, ஆணிவேர், தேன்கூடு, உச்சிதனை முகர்ந்தால், குற்றப்பத்திரிக்கை போன்ற படங்களை வெளியிட அனுமதி மறுத்தன. அவை வெளியிட யாராவது எதிர்ப்புத் தெரிவித்தார்களா என்று கேட்டால் யாருமில்லை. ஆனாலும் மக்களுக்கு செய்திகள் சென்று சேர்வதில் அவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் தடை செய்யப்பட்டன. மேற்குறிப்பிட்டதில் சில படங்கள் பிறகு சட்டப்போராட்டங்களை நடத்தி வெளிவந்தன. சில படங்கள் பெட்டிகளுக்குள்ளேயே முடங்கிப் போயின.

கமலின் இந்த திரைப்படம் முழுமையாக படைப்பாளியின் சுதந்திரத்தோடு வெளிவரவேண்டுமென்பதே எனது நிலைப்பாடு.

கருத்து சுதந்திரமென்பது அனைத்திற்கும்/அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். படத்தை எடுக்கும் கருத்துரிமை கமலுக்கு இருக்கும் போது அதனை எதிர்க்கும் உரிமை என இசுலாமிய சகோதரர்களுக்கு இல்லையா? கமலின் கருத்துரிமையை மதிக்கும் நாம் ஏன் இசுலாமிய நண்பர்களின் கருத்துரிமையை ஏற்க மறுக்கிறோம்?

மேற்சொன்ன படங்களுக்குக் கிடைக்காத விளம்பரம் புதிதாகத் தோன்றிய கருத்துரிமைக் காவலர்களால் விசுவரூபம் திரைப்படத்திற்குக் கிடைத்துள்ளது. கமலும் தனது கருத்துரிமையைப் பாதுகாக்க சட்டத்தின் வழியில் போராடி படத்தை வெளியில் கொண்டு வருவதுதானே முறை.

ஆனால் கமல் செய்ததென்ன? சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இங்கே அரசு தடை செய்துள்ளது. படத்தை வெளியிட வேண்டியது முக்கியமானதென்றால் இசுலாமிய அமைப்புகளுடனும் அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அல்லது சட்டப் போராட்டத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். படத்தின் காட்சிகளை நீக்க மறுத்ததுடன் அமெரிக்காவுக்கு பறந்து சென்று விட்டார்.

அவர் அமெரிக்காவுக்கு போனதும், மத்திய அரசு/ காங்கிரசு செய்தித் தொடர்பாளர் மணீசு திவாரி தணிக்கை வாரியம் அனுமதி தந்தபின் தமிழக அரசுக்கு திரைப்படத்தைத் தடை செய்ய அதிகாரமில்லை என அறிக்கை வெளியிடுகிறார். ஏன்?

மத்தியில் ஆளும் காங்கிரசு ஏன் சம்மனே இல்லாமல் விசுவரூபம் விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது. இங்கேதான் வருகிறார் நம் சீமான் சிதம்பரம். கூடவே சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த கருணாநிதியும் விவகாரத்தை அரசியலாக்கி அதில் குளிர்காய்வதைத்தவிர இவர்களுக்கு வேறென்ன நோக்கமிருக்க வேண்டும்.

இசுலாமிய அமைப்புகளோ, அ.தி.மு.க. அரசோ, முதல்வர் ஜெ. வோ கமலைப் புறக்கணித்ததாகத் தெரியவில்லை. ஆனால் கமல்தான் இவர்களைப் புறக்கணித்து, தடைகளைத் தகர்த்தெறிவேன் எனச் சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கச் சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். தமிழக அரசு அதிகாரிகளோ, முதல்வர் ஜெ.வோ அமெரிக்கா சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்க முடியுமா? 

கமலின் ஆலோசகர்களாகச் செயல்பட்ட இவர்கள், நாங்கள் பிண்ணனியில் இருக்கிறோம். படத்தைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என கமலை தவறாக வழிநடத்தி விட்டவர்கள் போல தோன்றுகிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் அதே நாள்தான் டேம் 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் என்று உச்ச நீதி மன்றம் சொல்லியிருந்தது. ஆக நண்பர்கள் என்கிற பெயரில் காலை வாரிவிட்டு, கமலைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி அதில் அரசியல் லாபமீட்டும் சகுனிகளின் ஆலோசனைக்குக் கமல் பலிகடாவாகி விட்டார். 

பிறகு உயர்நீதிமன்றம் தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு நாட்டிற்கு மிகவும் முக்கியமான விசுவரூபம் திரைப்படத்தை பார்த்து இரவு பன்னிரண்டு மணிக்கு தீர்ப்பு வழங்கியது. படத்திற்கு இருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. 

கமல் தரப்பில் எந்தவிதமான சமரசத்திற்கும் தயாராக இல்லாத நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சம்மதமோ, அறிவிப்போ வெளியிடாத நிலையில், தீர்ப்புக்கு முந்தைய நிலவரத்திலோ எந்த மாற்றாமும் இல்லாத நிலையில், இசுலாமிய அமைப்புகளின் கோரிக்கைகள் செவி மடுக்கப்படாமல் வலுக்கட்டாயமாக தீர்ப்பை நீதிமன்றத் தீர்ப்பைத் திணிக்க முற்படாமல் மேல் முறையீட்டுக்கு விண்ணப்பித்தது தமிழக அரசு.  

இது போன்ற ஒரு சந்தர்ப்பத்திற்காகவே காத்துக்கிடந்த மத்திய அரசு தனது அனைத்து பரிவாரங்களையும் பயன்படுத்தி (பொதிகை தொலைக்காட்சி உட்பட) தமிழக அரசுக்கு எதிரான உளவியல் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டது. கருணாநிதி சும்மாயிருப்பாரா?

1996 ல் போயசு கார்டனில் வாய்க்கால் தகராறுக்காக ரசினிகாந்தை உசுப்பிவிட்டு அவரை மூளைச்சலவை செய்து தங்களுக்கு ஆதரவாகத் திருப்பி எளிதாக வெற்றிக்கனியைப் பறித்த தந்திரக்காரராயிற்றே. அந்தக் குழுவில் இருந்த சோ ராமசாமியைத் தவிர மீதி எல்லோரும் இப்போதும் ஒன்று சேர்ந்து இப்போது சிக்கிய கமலை வைத்து அரசியல் நாடகம் நடத்த எத்தனிக்கின்றனர். பிரச்சினைகளின் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ள கமல் ஏதேனும் கொப்பு கிடைத்தால் பற்றிக் கொண்டு கரையேறும் நோக்கில்தான் இந்த சகுனிகளை நம்பினார் எனக் கொள்ளலாம்.

தங்கள் கட்சி எம்பிக்கள் சிலரையும் தங்கள் ஆதரவு திரையுலகப் பிரமுகர்கள் சிலரையும் அனுப்பிவைத்து கமலுக்கு கொம்பு சீவினர். கமலும் உணர்ச்சிவசப்பட்டு விதையாவேன், சதையாவேன் என்றெல்லாம் பேட்டியளித்தார். வீட்டை விற்றுப் படமெடுத்தேன். வெளியிட அனுமதிக்கவில்லையென்றால் மதச்சார்பற்ற நாட்டுக்குப் போய் விடுவதாக “எமோசனல் ப்ளாக்மெயில்” செய்தார்.  உண்மையில் அவர் சித்தரிப்பதுபோல தமிழகம் ஒன்றும் மதவாதிகளின் கையில் போய்விடவில்லை. ஆனால் இது போன்ற “சென்சேசனல்” அரசியல்களால் போய்விடும் வாய்ப்பிருக்கிறது. இசுலாமிய அடிப்படைவாதிகளின் கையிலல்ல. இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கையில். ஆகவே உணர்ச்சிவசப்பட்டு அவர் அளித்த பேட்டியைப் புறந்தள்ளிவிடுவதே சரி.

ஆனால் வியப்பு என்னவென்றால் எல்லா நிலைமைகளையும் சீர்தூக்கிப் பார்க்கும் சமூக வலைத்தளப் பயனாளர்களும், பொதுமக்களும் பின்னணியில் நடைபெறும் அரசியலை கருத்தில் கொள்ளாமல் அவசரக் கோலத்தில் செயல்படுவதுதான்.

கமலுக்கு கருத்து சுதந்திரம் தேவைதான் மறுப்பதற்கில்லை. அதேபோன்ற கருத்து சுதந்திரமும் சட்ட நடைமுறைகளும் இசுலாமிய நண்பர்களுக்கும் உரிமையுள்ளது. அவர்கள் படத்திற்கு தடை கோருவதும் இவர் தடை விலக்கக் கோருவதும் நெறிமுறைகளுக்கு உட்பட்டதே.. சர்ச்சைக்குரிய திரைக்கதையைத் துணிச்சலுடன் தேர்வு செய்த கமல் இசுலாமிய அமைப்புகளுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் தொடுக்கும் வழக்கினை வென்று (எத்தனை முறை மேல் முறையீடு சென்றாலும்) படத்தை வெளியிட வேண்டும்.

அதுவுமில்லை தமிழக அரசு ஏதேனும் சலுகை செய்ய வேண்டும் எனக் கருதினால் அவர் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அரசியல் செய்யும் காங்கிரசையும், கருணாநிதியையும் துரத்திவிட்டால்தான் அது சாத்தியப்படும்.

பிற்சேர்க்கை: இன்று ஜெ. செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. சமரசத்திற்கு இசுலாமிய அமைப்புகள் ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகும் கமல் அவர்கள் காங்கிரசு, தி.மு.க.வின் அரசியல் சதிகளுக்கு பலியாகாமல் ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டியது அவசியம். இன்னமும் அவர்களை நம்பினால் தமிழர்களைப்  படுகுழியில் தள்ளியதுபோலத் தள்ளிவிடுவர் என்பது நிச்சயம்.

வெள்ளி, 25 ஜனவரி, 2013

தணிக்கைத் துறை அனுமதித்தால் திரைப்படத்தைத் தடை செய்யக் கூடாதா?

விசுவரூபம் திரைப்படத்திற்கு மத்திய தணிக்கைத்துறை அனுமதி வழங்கிய பிறகும் தடை செய்வது சரியா எனக் கேள்வியெழுப்பப்படுகிறது.


தணிக்கை வாரியம் அனுமதி வழங்கிவிட்டதாலேயே அனுமதியோ/தடையோ செய்ய வேண்டுமென்பது சரியல்ல.. தணிக்கை வாரியம் மத்தியில் ஆளும் கட்சியினரால் நிரப்பப் படுகிறது.

மத்தியில் காங்கிரசு அரசு எண்ணற்ற வழிகளில் தமிழின விரோதச் செயல்களைப் பகிரங்கமாகச் செயல்படுத்திக் குழிபறித்த பின்னரும், இன்றும் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் காங்கிரசுக் கட்சியில் ஊருக்கு இரண்டு காங்கிரசு கயவர்கள் கதர் சட்டையுடன் வலம வாருகின்றனரென்றால் இது போன்ற மத்திய அரசால் நியமிக்கப்படும் வாரியத்தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளைக் குறிவைத்துதான்.

தணிக்கைத் துறை மட்டுமல்ல மத்திய அரசின் கீழ் ஆயிரக்கணக்கான வாரியங்களும், வாரிய உறுப்பினர்பதவிகளும் உள்ளன. அவையனைத்தும் ஆளும் காங்கிரசு மற்றும் திமுகவினருக்கு பங்கு வைக்கப் படுகின்றன.

இதுபோன்ற பதவிகள் மூலம் எந்தப் பதவிக்கும் பொருத்தமற்ற குறிப்பிட்ட ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களுக்கு மாதாமாதம் ஊதியம் என்கிற பெயரில் மக்கள் வரிப்பணம் தண்டமாக அழப்படுகிறது. லஞ்சம் ஊழலிலே கரைகண்ட கட்சிக்காரர்கள் சும்மாயிருப்பார்களா? விதிமுறைகளைப் புறந்தள்ளி எடுக்கப் படும் ஆபாசத்திரைப்படங்களுக்கு பணத்தை வாங்கிக்கொண்டு சான்றிதழ் வழங்குகிறார்கள். நல்ல முறையில் எடுக்கப்படும் திரைப்படங்களுக்குக் கூட உரிய நேரத்தில் சான்றிதழ் வழங்காமல் தாமதப் படுத்தி பிறகு ”உரிய முறையில் கவனித்த” பிறகு சான்றிதழ் வழங்குகிறார்கள்.

ஆக ஒரு திரைப்படத்திற்கு "A" "U" அல்லது ”U/A” சான்றிதழ் வழங்கப்படுவதில்லை தயாரிப்பாளர்களால் ”வாங்கப்படுகிறது”

விசுவரூபம் திரைப்படம் தடை செய்யப்பட்டது நீதிமன்றத்தில் தயாரிப்பாளர்களால் கேள்விக்குள்ளாக்கப்பட்டு விட்ட பிறகு தணிக்கைத் துறையின் முறைகேடுகளை தோண்டி வெளிக்கொண்டு வந்து விடுவார்கள் என எண்ணிப் பயந்த காரணத்தினாலேயே மத்தியில் ஆளும் காங்கிரசின் செய்தித் தொடர்பாளர் மணீசு திவாரி சம்மனே இல்லாமல் ஆஜராகி தணிக்கைத் துறை அனுமதி குடுத்த திரைப்படத்தைத் தடை செய்யக்கூடாது என கருத்துத் தெரிவித்துள்ளாரோ என எண்ணத் தோன்றுகிறது.


தணிக்கை வாரியம் ஆளுங்கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கும்வரை அவர்கள் முறைகேடான வழியில் பணம் சேர்க்கவே பயன்படும். அதன் மூலம் வாங்கப்படும் எந்தச் சான்றிதழுக்கும் அத்துணை மதிப்பிருக்கப்போவதில்லை.

ஒன்று தணிக்கை தேவையில்லை எனும் நிலை வரவேண்டும் அல்லது தணிக்கை வாரியம் தனி அமைப்பாகச் செயல்படுத்தப் பட்டு சீர் செய்யப்பட வேண்டும். 

புதன், 9 ஜனவரி, 2013

விசுவரூபம்: கமலின் நம்பகத்தன்மையும் என் குற்ற உணர்ச்சியும்.



திரைப்படங்கள்தான் நம் காலத்தில் மக்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள மிகப்பெரிய ஊடகமாகும். தொலைகாட்சிகள் வந்தபிறகும் அவை திரைப்படங்களைச் சார்ந்தே இயங்கி வருகின்றன. என்னைப் பொறுத்த அளவில் திரைப்படங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் தந்ததில்லை.. அதற்காக படம் பார்ப்பதில்லை என்றும் சொல்லமுடியாது. பொழுதுபோக்கு என்கிற அம்சத்தைத் தாண்டி எனக்கு அவற்றில் வேறு எதுவுமிருப்பதில்லை. 

திரைப்படங்கள் குறித்து எதுவும் எழுதியதில்லை எனும் நிலையில் சற்றே பின்னோக்கிப் பார்க்கலாமெனத் தோன்றுகிறது. ஆனால் அது என்னுள் பலப்பல ரசவாதங்களையும், கீற்றுகளைப் போலத் தெறித்து ஓடும் பால்ய நினைவுகளையும் தட்டி எழுப்பி விடுகிறது. எழுதத் தொடங்கினால் இந்தப் பதிவில் முடியாது. எனவே நேரம் கிடைக்கும் போது மிக மிக சுவாராசியமான அந்த நினைவுகளைப் பதிவு செய்கிறேன்.

சென்னையில் இருந்த வரை நேரமின்மை காரணமாக மிகவும் சலித்து தேர்ந்தெடுத்த திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பதையே வழக்கமாக வைத்திருந்தேன்.இதுவரையில் ஒரு முறை கூட ஒரு படத்தைக் கூட (திருட்டு) டிவிடியில் பார்த்ததில்லை.  நாடு கடந்த பிறகு முழுக்க முழுக்க இணையமே பொழுது போக்கு என ஆகிவிட்டது. வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் இணையத்தில் இறக்கம் செய்து பார்த்துவிடுவது. அனைத்துப் படங்களும் என்றால் அனைத்துப்படங்களும்தான். ஒன்றுகூட விட்டு வைப்பதில்லை. நம் ஊரில் எவரும் பெயரே அறிந்திராத தமிழ்ப் படங்களைக் கூட பார்த்துவிடுவேன். 

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் இறக்கம் செய்து பார்த்துவிடுவது. கன்னடம் மட்டும் ஒட்டுவதேயில்லை.

ஆனால் எந்தப் படமாக இருப்பினும் டிவிடி அளவுக்கு தரமாக வரும் வரை காத்திருப்பேன். படம் வெளியான மறுநாளே டிசி எனப்படும் திரையரங்குகளில் பதிவு செய்யப்படும் தரம் குறைந்த பதிப்புகள் வந்துவிட்டாலும் டிவிடி தரத்தில் வர குறைந்தது பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம். இருப்பினும் காத்திருந்து பார்ப்பதே எனது வழக்கம். அதுவரை டுவிட்டர்களிலும் வலைப்பதிவுகளிலும், வெளியான அந்தப் படங்களை துவைத்துக் காயப்போட்டாலும் கண்டுகொள்வதில்லை. டிவிடி தரத்தில் வெளியான பின்னரே இறக்கம் செய்து பார்ப்பது..

இவ்வாறாக செய்கிற தொழிலில் ஒரு நேர்மையைக் கடைப்பிடித்து வந்தவன் நான். ;-)

விசுவரூபம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் டிடிஎச்-ல் முதலில் வெளியிடுவதாக கமல் அறிவித்தது சற்றே புருவத்தை உயரச் செய்தது. திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைக்க மறுத்தும் பிடிவாதமாக டிடிஎச்-ல் வெளியிட்டே தீருவேன் எனக் கமல் அறிவித்தது எனக்குள் கமலின் மீது வைத்திருந்த மதிப்பை சற்றே உயர்த்தியது எனக்கூட சொல்லலாம்.

எது எப்படியிருந்தாலும் விசுவரூபம் வெளியாகும் தகவல் குறித்தும் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.. நமக்குதான் தனியாக ஒரு வெளியீட்டு நாளல்லவா? நாம பார்க்கிறதுக்குதான் எப்படியும் ஒரு மாசமாகுமே. 

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பர் ரபீக் அழைத்து என்னிடம் சன் டைரக்ட் டிடிஎச் இருக்கு. விசுவரூபம் பார்க்கலாமா? இணையதளம் வழியாக எப்படி கட்டணம் செலுத்துவது? எப்படி இந்த சிறப்பு சேவையை செயல் படுத்துவது என உதவி கேட்டார். அவருக்கு கணிணி மற்றும் இணையம் அவ்வளவாக பரிச்சயமில்லை. 

எனக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதில்தான் என்ன சுகம். மற்றொன்று டிவிடி தரமுள்ள படத்தை இந்தியாவில் யாரும் திரையரங்குகளில் பார்க்குமுன்னே நாம் பார்த்துவிடலாமென்ற ஆர்வம். அதற்கும் மேல் என்னவென்றால் இந்தியாவில் படம் வெளியாகுமுன்னே படத்தை முதல் காட்சிகளில் குவைத்திலும், துபாயிலும் பார்த்துவிட்டு அவசர விமர்சனம் எழுதி வரும் நண்பர்களையும் முந்தி படத்தைப் பார்த்துவிடுவதால் கிடைக்கப் போகும் திருப்தி. (திருட்டுக் குமரன்  டுவீட் லாங்கரில் இந்திய ஊடகங்களுக்கு முன்னதாக நீதானே என் பொன் வசந்தத்திற்கு விமர்சனம் எழுதி தயாரிப்பாளரும், இயக்குனரும் கோடம்பாக்கத்தையே காலி செய்துவிட்டு ஓடிய சம்பவம் நினைவிற்கு வருகிறதா?)

ஆக மேற்சொன்ன உற்சாக மிகுதியில் அவர் கேட்டுக்கொண்டவாறு அவரது சன் டைரக்ட் கணக்கில் ஆயிரம் ரூ செலுத்தி (அவர் பணம்தான்) வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொடர்புகொண்டு விசுவரூபம் பார்க்க கூடுதல் சேவையை அளிக்க ஆவன செய்து கொடுத்தேன். வாடிக்கையாளர் சேவை அலுவலர் உங்களுக்கு விசுவரூபம் சேவை செயல்படுத்தப் பட்டுவிட்டது. 10-01-2013 அன்று மாலை இந்திய நேரப்படி 9:30 மணிக்கு துவங்கி விளம்பர இடைவெளியின்றி படம் ஒளிபரப்பப்படும் தவற விட்டுவிட்டால் திரும்பப் பார்க்க இயலாது எனச் சொல்லி நமது செயற்கைக்கோள் அலைவாங்கியைச் செயல்படுத்த ஒரு எண்ணையும் கொடுத்தார். படம் ஒளிபரப்பப்படும் வேளையில் மின்சாரம் போய் விட்டால் என்ன செய்வது என கேட்டதற்கு மின்சாரம் போனால் ஒன்றும் செய்ய இயலாது ஆனால் விசுவரூபம் ஒளிபரப்பாகும் நேரம் மின்சாரம் போகாது என (என்னவோ கமல் நேரடியாக நத்தம் விசுவநாதனிடம் ஒப்பந்தம் செய்துள்ளது போல) கூறினார்.

மறுநாள் அதிகாலையில் அதே நண்பர் ரபீக்கிடமிருந்து குறுஞ்செய்தி. நாம் எப்போது அதிகாலையெல்லாம் பார்த்திருக்கிறோம். பிறகு அவரிடமிருந்து நினைவூட்டல் அழைப்பு வந்தபிறகே குறுஞ்செய்தியைப் பார்த்தேன். இவர் விசுவரூபம் பார்க்கப் போகும் சங்கதியை ஊரில் உள்ள குடும்பத்தாரிடம் உளறி வைத்து விட்டார் போல.. சும்மா விடுவார்களா? ஊரில் உள்ள இன்னொரு இணைப்பிற்கும் விசுவரூபம் பார்க்க வகை செய்யப்போய் மொத்தமாக 2000 ரூ சன் டைரக்ட் நிறுவனத்திற்கு கட்டியாயிற்று.

வழக்கமாக விழித்ததும் டுவிட்டரில் உள் நுழைந்து நாட்டு நடப்புகள் உள்ளிட்ட எந்த டுவிட்டையும் தவற விட்டுவிடாமல் முதல் நாள் இரவில் தொடங்கி அப்போது வரையுள்ளது வரை நேரக்கோட்டை ஒரு பார்வையிட்டுவிடுவது வழக்கம். இன்று கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும் தந்த சுகத்தில் டுவிட்டருக்குப் போகாமலேயே மேற்சொன்ன சன் டைரக்ட்-விசுவரூபம் வேலையை செய்து முடித்துவிட்டு டுவிட்டரில் சென்று நண்பர்களிடம் பீற்றலாமென்று போனேன். அப்போதுதான் இடிபோல டுவீட்டுகள் நேரக்கோட்டில் வந்து  விழுந்தன. 

முதல்நாள் சன் டைரக்ட் இணையதளத்தின் முகப்பில் விசுவரூபம் பதாகையும் எப்படி அந்தச் சேவையைப் பெறுவது என்ற விளக்கங்களும் இருந்தன. ஆனால் இரண்டாம் முறை மறுநாள் காலை செல்லும்போது அந்த பதாகை நீக்கப்பட்டிருந்தது. இதை நானும் கவனித்தேன். ஆனால் ஒருவேளை ஏற்கனவே உள் நுழைந்திருந்ததால் குக்கிகள் மூலமாக முகப்புப் பக்கத்தைத் தாண்டி நேராக உள்நுழையும் வசதி இருக்கக்கூடுமென்ற சமாதானம் என் ஐயத்தை துடைத்துப் போட்டது. ஒருவேளை அதிகளவிலான விண்ணப்பங்களைச் சமாளிக்க முடியாமல்  நீக்கியிருக்கலாமென்ற கூமுட்டைத்தனமான (ஙே) எண்ணமும் வந்து போனதை மறுப்பதற்கில்லை

விசுவரூபம் டிடிஎச் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டதாம். பிறகு ஏகப்பட்ட தாவாக்களுக்குப் பிறகு இன்று (09-01-2013) காலை கமலே நேரடியாக அறிவித்துவிட்டார். விசுவரூபம் முதலில் திரையரங்குகளில்தான் வெளியிடப்படும். டிடிஎச்சிலும் அதே நேரம் வெளியிடப்படலாம் இல்லை வெளியிடப்படாமலும் போகலாம்.

எவ்வளவு பெரிய மோசடி இது. இதற்கு நானும் துணை போய்விட்டேனே என குற்ற உணர்ச்சி என்னைத் துரத்தியதே இந்த நீண்ட பதிவெழுத என்னைத் தூண்டியது.

குற்ற உணர்ச்சி மேலிட மேற்சொன்ன காரணங்களைவிட இன்னுமொரு முக்கிய காரணம் உண்டு. அது சன் டைரக்ட்.

கருணாநிதி ஆட்சியின் துணையுடன் நிகழ்த்தப்பட்ட தமிழீழ இனப்படுகொலை குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்ததுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடியவர்களை தொடர்ந்து இழிவு படுத்தி வந்தன சன் உள்ளிட்ட கருணாநிதி குடும்ப தொலைக்காட்சிகள். ஆகவே இந்தியாவில் இருந்தவரையில் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளையும், அவர்களது குடும்ப திரைப்படங்களையும் முழு மூச்சாக புறக்கணித்து வந்தேன். எந்த பிரபல நடிகர் நடித்திருந்தாலும் அவர்கள் குடும்பத் தயாரிப்புகளைப் பார்த்ததில்லை. அதே போல தொலைக்காட்சிகளையும் புறக்கணித்து வந்தேன்.

பழைய காயங்கள் மறக்கத் துவங்கியதோ தெரியவில்லை அந்த நண்பருக்கு உதவப் போய் சன் டைரக்ட் நிறுவனத்துடன் ஒரு வரவு செலவு தொடங்கிவிட்டேன். இந்த வரவு செலவு முழுக்க முழுக்க கமலுடன் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.

முதல்நாள் நண்பர் விஜயகோபாலசாமி டிடிஎச்-ல் படத்துக்கு 1000ரூ. விலை  வைத்ததன் மூலம் கமல் நம்மையெல்லாம் முட்டாளாக்கிவிட்டார் என்று டுவிட்டரில் சொன்னார். அப்போது நான் விருப்பமிருந்தால் தானே பார்க்கப்போகிறோம் இதிலே என்ன முட்டாள்தனம் இருக்கிறது என அவரை கடிந்து கொண்டேன். சொல்லி 24 மணிநேரம் கூட ஆகவில்லை  இப்போது படம் டிடிஎச்-ல் வெளிவராது என அறிவித்து முட்டாளாகவே ஆக்கிவிட்டார் கமல்.

இப்போது சன் டைரக்டோ அல்லது வேறு எந்த டிடிஎச் சேவைகளோ பிடிக்காமலிருந்தும் தனித்து விடப்பட்ட கமலுக்கு ஆதரவளிப்பதாக எண்ணிக்கொண்டு பகாசூர நிறுவனங்களிடம் பணத்தைக் கட்டியாகிவிட்டது. படம் வெளியிடவில்லையென கமல் ஒதுங்கிக் கொண்டால் மலை முழுங்கி சன் குழுமம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருமென்றெல்லாம் எண்ணுமளவுக்கு அப்பாவிகள் யாருமில்லை. வேண்டுமானால் மாதாந்திரக் கட்டணத்தில் கழித்துக் கொள்கிறேன் எனச் சொல்லிவிடப் போகிறான்.

கமல் தனது மீது மக்கள் வைத்திருந்த நம்பகத்தன்மை முழுவதையும் இழந்துவிட்டார். நிச்சயம் இவர் யாரையும் ஏமாற்ற வேண்டுமென்று திட்டமிட்டு இதைச் செய்திருப்பார் என நீங்கள் சொன்னால் கூட நம்பக்கூடியவனல்ல நான். திரையரங்கு உரிமையாளர்களின் நிர்ப்பந்தம் ஒருவகையில். சன் டைரக்ட் போன்ற திருட்டு பேர்வழிகள் கூட பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி அவரைப் பின்வாங்கச் செய்திருக்கலாம்.

இதில் கமல் இழந்தது அதிகம். டிடிஎச்-ல் எதிர்பார்த்திருந்த வருமானத்தை இழந்தார். பழையபடி திரையரங்குகளை நம்பியதால் திரையரங்கு லாபம் குறைந்துவிடும். படம் பொங்கல் விடுமுறை நாட்களில் வெளியாகாததால் முதல் வார வசூல் பாதிக்கப்படும். தாமதமான வெளியீட்டால் படத்தின் மீதிருந்த ஆர்வம் குறைந்துவிடும்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக கமல் இழந்தது அவர்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை.

தனித்து விடப்பட்ட ஒரு மனிதனை சீண்டி விளையாடுவது எனது நோக்கமல்ல.. சொல்லப்போனால் தனித்து விடப்படுதலின் வலியறிந்ததாலேதான் சன் டைரக்ட் என்னும் தடையிருந்தும் கமலின் விசுவரூபம் பார்க்க நண்பர் விரும்பியபோது எதையாவது சொல்லி அவரைத் தடுக்க முற்படாமல் பதிவு செய்ய உதவினேன். 

இக்கட்டுகளில் இருந்து மீண்டு வர கமலுக்கு வாழ்த்துகள்.

செவ்வாய், 8 ஜனவரி, 2013

துரை தயாநிதி - பின் - அழகிரி - பின் - கருணாநிதி ஏன் தி.மு.க. தலைவராகக் கூடாது?

அரபு நாடுகளில் இன்னார் மகன் இன்னார் என்பதைக் குறிக்க  இருவர் பெயர்களுக்கிடையில்  ”பின்” என்னும் சொல்லைப் பயன்படுத்திக் குறிப்பிடுவார்கள்.



கருணாநிதியின் மகன் அழகிரியின் ஒரே ஆண் வாரிசான துரை தயாநிதி அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார் அவரது தந்தையான - பட்டத்து இளவரசர் பதவியைத் தம்பி ஸ்டாலினிடம் பறிகொடுத்த - அழகிரி.

கருணாநிதியிடமிருந்து கற்ற வித்தையைக் கருணாநிதியிடமே செயல்படுத்திப் பார்க்கிறார் அழகிரி.

அழகிரியின் மகன் துரை தயாநிதி, அவரது நடவடிக்கைகளைக் கவனித்துப் பார்த்தால் அவருக்கு மக்கள் நலனிலோ, திராவிட இயக்கக் கொள்கைகளிலோ கிஞ்சிற்றும் தொடர்பிருப்பதாகத் தெரியவில்லையே.. இவர் எதோ மைனர் போல இருக்கிறார். தந்தை நீட்டிய இடங்களிலெல்லாம் பினாமியாக கையெழுத்துப் போடுகிறார். கையெழுத்துப் போட்டதன் விளைவாகவே மாபெரும் இயற்கைவளச் சுரண்டல் விவகாரங்களில் ஒன்றான கிரானைட் கொள்ளை வழக்கில் சிக்கி நான்கைந்து மாதங்களாகத்  தலைமறைவாக சுற்றித் திரிந்து விட்டு நீதிமன்றத்தில் மீண்டும் மீண்டும் பிணை விண்ணப்பித்து, பிணை கிடைத்ததும் ஊருக்குள் தலை காட்டுகிறார். 

மறுபுறம் ஊழல் செய்து சேர்த்த பணத்தை வைத்து கிளவுட் நைன் நிறுவனம் மூலம் கோடிகளைக் கொட்டி சினிமாப்படமெடுக்கிறார். கறுப்பை வெள்ளையாக மாற்றுகிறார். (அவர் சேர்த்த பணம் ஊழல் மூலம் வந்ததல்ல எனக்கருதுவோர் அவர் பணம் சேர்த்த வழிகள் தெரிந்தால் கூறவும்).

இன்னும் மாறன்களுக்கு போட்டியாக கேபிள் தொலைக்காட்சி விவகாரங்கள், திரைப்பட நடிகைகளுடன் தொடர்பிருப்பதாக வரும் தகவல்களையெல்லாம் சேர்த்துப் பார்த்தால் இவர் ஒரு தீராத விளையாட்டுப் பிள்ளையாகத்தானே தெரிகிறார். 

தி.மு.க.வின் தலைமைப் பீடத்தை அலங்கரிக்க இவருக்கு என்ன தகுதியிருக்கிறது என தி.மு.க. தொண்டர்களும், பொது மக்களும் கொதித்துபோயிருப்பார்களேயானால்......

இருபது ஆண்டுகளுக்கு முன்னால், இப்போது தி.மு.க.வின் பட்டத்து இளவரசராகவும், கருணாநிதியின் காலத்திற்குப் பிறகு தி.மு.க.வின் தலைவராக முன்மொழியப்பட இருப்பவருமான ஸ்டாலின் பன்மடங்கு தீராத விளையாட்டுப் பிள்ளையாகத்தானே சென்னையில் வலம் வந்தார். பள்ளிப்படிப்பைத் தாண்டியதில்லை.

அவர் சினிமாவில் நடிகராக முயற்சி செய்தது, சிலபல பலான விவகாரங்களில் அவர் பெயர் அடிபட்டது என இன்றைய துரை தயாநிதிக்கு சற்றும் இளைத்தவரல்ல ஸ்டாலின். திராவிட இயக்கக் கொள்கைகளிலோ, தமிழ் மக்கள் நலனிலோ சிறிதும் தொடர்பில்லாமலிருந்த ஸ்டாலின் கருணாநிதியால் வலிந்து திணிக்கப்பட்டு வளர்த்தெடுக்கப் பட்டார். மிசா காலத்தில் சிறையிலடைக்கப்பட்டதையே வாழ்நாள் சாதனையாகச் சொல்லி வருகிறவர்கள், மிசாவில் இலட்சக்கணக்கான திமுகவினர் சிறையிலிருந்தார்களே அவர்களெல்லாம் தி.மு.க. தலைவர் பதவியைக் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியுமா? என்கிற கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.

தி.மு.க.வில் இதனைத் தட்டிக்கேட்ட அத்தனை பேரையும் திட்டமிட்டு வெளியேற்றி கழகத்தைக் குடும்ப நிறுவனமாக மாற்றினார் கருணாநிதி. ஸ்டாலினின் முடிசூட்டலை ஆதரிப்பவர் மட்டுமே தி.மு.க.வில் இருக்க முடியும், மற்றவர்களுக்கு இடமில்லையெனும் சூழல் உருவாக்கப்பட்டது. கட்சிக்குள்ளேயே இருந்து குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்த ஒரே ஆள் வீரபாண்டி ஆறுமுகம்தான். அவர் உயிரோடு இருந்த காலம்வரை சேலம் பகுதியில் கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கம் செல்லுபடியாகவில்லை. 

இதனைக் கவனத்தில் கொண்டுதானோ என்னவோ வீரபாண்டி ஆறுமுகம் அ.தி.மு.க அரசால் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட போது பிணையில் வரவேண்டாமென கூறியது கருணாநிதி குடும்பம். வேறு யாருக்கும் தமிழக அளவில் போராட்டம் நடத்தவில்லை, உங்களுக்காக கழக்த்தின் சார்பில் தமிழகம் முழுவதும் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்போகிறோம். நீங்கள் பிணையில் வந்துவிட்டால்  போராட்டத்திற்கு வலுவான காரணம் கிட்டாது என கூறி அவரைச் சம்மதிக்க வைத்தனர்.

தங்கள் குடும்ப அங்கத்தினரோ அல்லது குடும்ப அங்கத்தினருக்கு பல்லக்கு தூக்கும் பொன்முடி போன்ற அல்லக்கைகளெல்லாம் ஊழல் வழக்குகளில் பிணையில் வெளியே வந்தபோது தடுக்காத கருணாநிதி குடும்பம், ஏற்கனவே உடல் தளர்ந்திருந்த வீரபாண்டி ஆறுமுகம் பிணையில் வருவதை சதி செய்து தடுத்தது.

இது போன்ற சதிகளின் காரணமாகத்தானோ என்னவோ சிறையில் இருந்து வெளிவந்த சில நாட்களில் வீரபாண்டி ஆறுமுகம் இயற்கை எய்திவிட்டார். அவர் மறைந்த சில நாட்களிலேயே சேலம் பகுதியில் கருணாநிதி குடும்பம் ஆதிக்கம் செலுத்தத் துவங்கி விட்டது.

இதுநாள்வரை அடக்கி வாசித்துக்கொண்டிருந்த கருணாநிதி தனது மகன் ஸ்டாலினை தி.மு.க. தலைவராக முன் மொழியப் போவதாக கிசுகிசுவை அவரே கிளப்பிவிட்டு பிறகு அதற்குப் பதிலளிக்கப் போவதாக நாடகமாடி அறிவித்துவிட்டார்.

இது போன்ற நாடகங்களைக் கவனித்த அழகிரி இனி தி.மு.க.வில் நாம் தலைவராக நினைத்தால் அது இந்தப் பிறவியில் நடக்காது. கனவாகவே அமையும் என்ன செய்யலாம் என நினைத்து விட்டத்தைப் பார்த்து சிந்தித்துக் கொண்டிருந்த வேளையில் உதித்ததுதான் இந்த உபாயம்.



எப்படியும் நாம் தலைவராக முடியாது ஏனென்றால் கருணாநிதிக்கு அடுத்த தலைமுறைத் தலைவராக ஸ்டாலின் முன்மொழியப்பட்டுவிட்டார். கழகக் காளைகள் அனைத்தும் இதனை ஏற்றுக் கொள்ளும் வகையில் வசக்கப்பட்டுவிட்டன. ஆனால் அதற்கு அடுத்த தலைமுறைக்கு ஸ்டாலினுடைய மகன் உதயநிதி பின் ஸ்டாலினோ அல்லது அவரது பேரன் இன்பநிதி பின் உதயநிதி பின் ஸ்டாலின் பின் கருணாநிதியோ அறிவிக்கப் படவில்லை.. இதுதான் சரியான தருணம். அவர்களுக்கு முன்னதாக நம் மகனை அதாவது துரை தயாநிதி பின் அழகிரி பின் கருணாநிதியை அறிவித்துவிட்டால் கழகக் காளைகளும் பூம்பூம் மாடுகளைப் போலத் தலையாட்டித்தான் தீரவேண்டும். குடும்பப் பஞ்சாயத்துகளுக்கு உள்ளேயும் நான்தானே முதலில் சொன்னேன் எனச் சொல்லி வாதத்தில் வெற்றிக்கனியைப் பற்றிவிடலாம் என்கிற தந்திரோபாயம்தான் அது.

இப்போது சொல்லுங்கள் இருபது வருடங்களுக்கு முன் தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருந்த ஸ்டாலின் பின் கருணாநிதி தி.மு.க. தலைவராக வருவது பொருத்தமாக இருக்குமானால் இப்போது தீராத விளையாட்டுப் பிள்ளையாக இருக்கும் துரை தயாநிதி பின் அழகிரி பின் கருணாநிதி ஏன் தி.மு.க. தலைவராக கூடாது?