பொதுநலவாய மாநாடு இனப்படுகொலை நாடான இலங்கையில் நடத்தப்படக் கூடாது, பொதுநலவாய அமைப்பிலிருந்து (தற்காலிகமாகவாவது) இலங்கை நீக்கப்படவேண்டும், அப்படியே அம்மாநாடு இலங்கையிலே நடைபெற்றாலும் கூட இந்திய அரசு அம்மாநாட்டில் பங்கேற்காமல் புறக்கணித்து இந்திய அரசு எப்போதும் மனித நேயத்தின் பக்கமே நிற்கும் என்று உலகிற்கு உரத்த குரலில் உரைக்க வேண்டுமென்பதே ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கையாக இருந்தது.
இனப்படுகொலையில் இலங்கைக்கு துணைபோன கூட்டுக் குற்றவாளியான இந்தியா எப்படி மேற்கண்ட கோரிக்கைகளுக்குச் செவி சாய்க்கும் என்பது அனைவரின் ஐயமும் அச்சமுமாக இருந்ததும் உண்மைதான்.
இலங்கை அரசின் மீது இனப்படுகொலை, போர்க்குற்றம், மனித உரிமை மீறல் என எந்தக் குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் சபையிலோ, உலக நாடுகள் மத்தியிலோ பேச்சு எழுந்தால் கூட துடித்துப்போய் களமிறங்கி இலங்கையைக் காப்பாற்ற அத்த்னை முயற்சிகளையுமெடுத்து வருவது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.
ஐக்கிய நாடுகள் சபையிலே, மனித உரிமை ஆணையத்திலே இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவரப்படுமேயானால், தீர்மானம் வருவதைத் தடுக்க முனைவதும் பிறகு தவிர்க்க முடியாத காரணத்தால் மேற்குலக நாடுகளின் நெருக்கடியால் தீர்மானம் கொண்டுவரப்படுமேயானால் அத்தீர்மானங்களை நீர்த்துப் போகச் செய்து இலங்கையைக் காப்பாற்றியதை நாம் கடந்த காலங்களில் கண்கூடாகக் கண்டோம்.
இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களைக் காரணமாகக் காட்டி ஐரோப்பிய நாடுகளிலே இலங்கைக்கு எதிராகப் பொருளாதாரத்தடைகள், கடன் அல்லது உதவித் தொகைகள் வழங்கப்படுவது நிறுத்தப்படுமேயானால் இலங்கை அதிபர் இராசபக்சே மற்றும் அவரது பரிவாரங்களை இந்தியா வரவழைத்து விருந்து உபச்சாரங்கள் நடத்தி நாங்கள் இலங்கையின் பின்னே இருக்கிறோம் என அந்த நாடுகளைக் கேலி செய்ததும் நடந்தது. இந்தியாவிலிருந்து தமிழகத் துரோகக் கும்பலைச் சேர்ந்த தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளின் எம்பிக்கள் குழுவினை அனுப்பி அங்கே அனைத்தும் சிறப்பாக உள்ளது என இலங்கை அரசுக்குச் சான்றிதழ்கள் வழங்கி அந்தச் சான்றிதழ்களை இலங்கைக்கு எதிரான நடவடிக்கை எடுத்த நாடுகளின் முகத்திலே இலங்கை அரசை வீசச் செய்து அந்நாடுகளை அசிங்கப் படுத்தியது காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு.
வேறு எவ்வகையில் இலங்கை அரசைக் காப்பாற்றுவது எனத் திட்டமிட்டு இலங்கையிலே காமன்வெல்த் மாநாட்டை நடத்தி அதன் மூலம் 54 நாடுகளை உள்ளடக்கிய காமன்வெல்த்தின் தலைமைப் பொறுப்பிலே இராசபக்சேவை அமரவைத்துவிட்டால் எதிர்காலங்களில் எந்த உலகநாடுகளின் அமைப்புகளிலும் இலங்கை அரசை, இராசபக்சேவைத் தண்டிக்க முடியாது எனகிற நோக்கத்துடன் இரண்டாண்டுகளுக்கு முன்பாகவே முன்னெடுப்புகளை காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு துவங்கியதன் விளைவுதான் இந்த காமன்வெல்த் அரசுகளின் தலைவர்களுக்கான மாநாடு.
தமிழகத்தின் மாணவர் எழுச்சி மற்றும் மக்கள் போராட்டங்களின் விளைவாக காங்கிரசுடன் சேர்ந்து துரோகங்கள் பல புரிந்த தி.மு.க. மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் கூட்டணியிலிருந்து வெளியேறியதாக ஒரு அப்பட்டமான நாடகத்தை நிறைவேற்றி அதன் பிறகும் பல்வேறு சந்தர்ப்பங்களில் காங்கிரசைக் காப்பாற்றுகிற வேலையிலே ஈடுபட்டு வந்ததையும், வரப்போகின்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி வைக்கப் போவதாகவும் அறிவித்துள்ளதையும் நாம் பார்க்கிறோம்
இப்பொது காமன்வெல்த் மாநாடு இலங்கையிலே நடத்தப்படக்கூடாது, அப்படி நடந்தாலும் இந்திய அரசு கல்ந்துகொள்ளக்கூடாது என்ற ஒட்டுமொத்தத் தமிழகத்தின் கோரிக்கைகளையும் ஏற்று தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள சூழலில், தி.மு.க., காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகள் தனிமைப் பட்டுப் போவதைத் தவிர்க்க தாங்களும் இதே கோரிக்கைகளை ஆதரிப்பதாகவும், இந்திய அரசுக்கு நெருக்கடி தருவதாகவும் “உள்ளே வெளியே” நாடகமாடி வந்தன.
அந்த நாடகம் இப்போது முழுமையாக நிறைவேறப் போவதாகத் தெரிகிறது. அதாவது காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்துகொள்ளப் போவதில்லையாம்.. ஆனால் வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட படை பரிவாரங்களனைத்தும் கலந்து கொள்ளப்போகிறார்களாம். துரோகிகள் இதைத்தான் செய்யப்போகிறார்கள் என எதிர்பார்க்கப் பட்டதுதான்.
பிரதமர் கலந்து கொள்வதா வேண்டாமா என்பதை அறிவிக்க கடைசி நிமிடம் வரை இழுத்தடிக்க வேண்டிய அவசியம் என்ன? இந்தியப் பிரதமர் ஏன் கலந்து கொள்ளவில்லை என உலக நாடுகள் கேள்விகள் எழுப்பும். அதற்கான காரணங்களை அலசும். ஏற்கனவே கனடா கலந்து கொள்ளாது என அறிவித்தபோது இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஏற்படுத்திய விவாதங்கள் போன்று நடைபெற்றுவிடக் கூடாது என்கிற நயவஞ்சக நோக்கமின்றி வேறென்ன?
இந்திய அரசின் இத்தகைய செயல்பாடு ஒரு மன நோயாளி செய்வது போலல்லவா இருக்கிறது. தமிழக மக்களின் போராட்டங்களால் ஏற்பட்ட நெருக்கடியால் பிரதமர் கலந்து கொள்வது தவிர்க்கப் பட்டிருந்தாலும் அதற்கான பலன்கள் தமிழர்களைச் சென்றடையக்கூடாது என்கிற கொடிய நோக்கத்துடனல்லவா செயல்படுகின்றன. தமிழர்களுக்கு அவ்வாறு சிறு பலன்களும் கிடைப்பதைத் தடுக்கிற நோக்கிலேதான் காங்கிரஸ், தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகள் நாடகமாடி வருகின்றன.
இந்திய அரசு பிரதமர் காமன்வெல்த் மாநாட்டில் ஏன் கலந்துகொள்ளவில்லை? இலங்கையிலே நடைபெற்ற இனப்படுகொலையா? இலங்கையிலே நடைபெற்ற போர்க்குற்றங்களா? இலங்கையிலே நடைபெற்ற மனித உரிமை மீறல்களா?
இவையெதுவுமில்லையென்றால் As I am suffering from fever, i am unable to attend போலவா என்பதைத் தெளிவாக அறிவிக்க வேண்டும்.
கலந்து கொள்ளப்போவதாக அறிவிக்கப்பட்டுள்ள வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித் என்ன ______க்காகச் செல்கிறார். ஏற்கனவே தமிழக காங்கிரசு அமைச்சர்களால் வியாக்கியானத்தில் சொல்லப்பட்டது போல இனப்படுகொலை, போர்க்குற்றங்கள், மனித உரிமை மீறல்களுக்கெதிராக இலங்கை அரசு மற்றும் இராசபக்சே மீது அனைத்துலக நாடுகளால் விசாரணை நடத்தப்பட்டு தண்டிக்கப் படவேண்டுமென பேசப்போகிறாரா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.
தி.மு.க., வி.சி.க., காங்கிரசுக் கூட்டணியின் நாடகங்களில் புதிய அத்தியாயமான காமன்வெல்த் அத்தியாயம் அரங்கேறும் வேளை வந்திருக்கிறது. ”அரங்கேற்ற வேளை” ஒருநாள் வந்தால் ”அறுவடை நாளும்” வந்துதானே தீரும்.
துரோகத்தைப் பரிசளித்தவர்களுக்கு திருப்பிச் செலுத்துகிற வாய்ப்பு 2014 நாடாளுமன்றத் தேர்தல் நமக்கு வழங்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.