சேது சமுத்திர நாயகன் வைகோ அவர்களால் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அறிவிக்கபட்டு மீண்டும் காங்கிரஸ் கூட்டணியில் வந்தபோதும் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டதால் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த திட்டம் சேது சமுத்திரத் திட்டம்.
அத்திட்டத்தால் மீனவர்களுக்கு ஏற்படும் இடற்பாடுகளை நீக்கி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத வகையில் நிறைவேற்றப்படவேண்டுமென்பதே ஆரம்பத்திலிருந்தே மறுமலர்ச்சி தி.மு.க. மற்றும் வைகோ அவர்களின் நிலைப்பாடாகும்.
ஆனால் சேது சமுத்திரத் திட்டம் தொடர்புடைய கப்பல் போக்குவரத்துத் துறையைக் கையில் வைத்திருந்த தி.மு.க. அத்திட்டத்தை மக்கள் நலத்திட்டமாகக் கருதாமல் பணம் கொழிக்கிற, பொன்முட்டையிடுகிற வாத்தாகக் கருதி திட்டத்தைக் குறித்த காலத்தில் முறையான வழிகளில் மீனவர்களுக்கு இடையூறின்றி, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பின்றி நிறைவேற்றிட முன்வரவில்லை. இழுத்துக் கடத்தியதோடு மட்டுமல்லாமல் சரியான திட்டமிடலுமின்றி மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கு உலைவைக்கிற செயலிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முன்னுரிமை தராமலும் அத்திட்டத்தின் ஒப்பந்தங்களில் ஊழல் செய்து பணம் சேர்ப்பதிலேயே குறியாக இருந்தது.
இத்திட்டத்தில் கருணாநிதி கும்பல் செய்த கையாடல் ஒருபுறமிருக்க அவ்ர்களின் வாயாடல் இத்திட்டத்திற்கு பெரும் பின்னடவைத் தந்தது. ஆம் வரம்புமீறிப் பேசி எந்த இந்துத்துவ பாரதீய ஜனதாக்கட்சியைச் சார்ந்த பிரதமரான வாஜ்பாயைச் சென்னைக் கடற்கரைப் பொதுக்கூட்டத்தில் சேது சமுத்திரத் திட்டத்தை வைகோ அறிவிக்கச் செய்தாரோ அதே இந்துத்துவ சக்திகளனைத்தையும் சேதுத் திட்டத்திற்கு எதிராகத் திருப்பினார் கருணாநிதி.
இராமர் பாலம் என்கிற காரணத்தைக் காட்டி நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இத்திட்டத்தை முடக்கிப்போடுவதில் மும்மரமாக நின்றவர் கருணாநிதியின் மதவெறுப்புக் கருத்துக்களால் தூண்டிவிடப்பட்ட சுப்பிரமணியசாமி.
இதே சுப்பிரமணிய சாமியிடம் 2ஜி அலைவரிசை ஊழல் வழக்கில் வகையாய்ச் சிக்கிக்கொண்ட கருணாநிதி கும்பல் இதுவரை வழக்குத் தொடர்ந்து சேதுத் திட்டத்தை முடக்கிப்போட்ட சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு போராட்டத்தையாவது நடத்தியிருப்பார்களா? தி.மு.க. என்கிற கட்சி எதிர்த்துப் போராட்டம் நடத்துகிற அளவுக்கு சுப்பிரமணியசாமி என்ன பெரிய ஆளா எனக் கேட்கலாம். சரி கருணாநிதிக்கு சுப்பிரமணிய சாமியை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிடக்கூட துணிச்சலில்லாமல் போனது ஏன்? அறிக்கை வெளியிட துணிச்சலில்லையா? பரவாயில்லை எந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து சேது சமுத்திரத் திட்டத்தை முடக்கிப் போட்டு வைத்துள்ளார்களோ அதே நீதிமன்றத்தில் தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் நாங்கள் எனவே எங்களையும் ஒரு மனுதாரராகச் சேர்த்துக்கொள்ள வேண்டும் எனக் கோரி சுப்பிரமணியசாமியின் வாதங்களைத் தவிடுபொடியாக்கி வழக்கை வென்றிருக்க வேண்டாமா?
கருணாநிதி என்கிற மோசடிப் பேர்வழி தமிழக மக்கள் நலனில் அக்கறை கொண்டவர் என்று சொன்னால் நீதிமன்றம் சிரியாய்ச் சிரிக்கும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதுதான். தி.மு.க. என்கிற கட்சியின் சார்பிலே மனுச்செய்திருக்கலாமே? செய்யவில்லை. வழக்குத் தொடரப்பட்டபோதும் நீதிமன்றம் தடையாணை வழங்கியபோதும் கருணாநிதிதான் முதல்வராக இருந்தார். தமிழக அரசின் சார்பிலே ஒரு மனுதாரராகச் சேர்ந்து வாதிட்டிருக்கலாமே? செய்தாரா என்று கேட்டால் இல்லை.
கருணாநிதியின் தி.மு.க. அங்கம் வகித்த மத்திய காங்கிரஸ் அரசு சேது சமுத்திரத்திட்டத்தை நிறைவேற்றுவதில் உறுதிகாட்டாமல் ஆய்வுசெய்ய நீதிபதி பச்சோரி தலைமையில் ஆய்வுக் கமிட்டி ஒன்றை அமைத்து அந்த ஆய்வுக் கமிட்டியும் திட்டத்திற்கு எதிரான ஒரு அறிக்கையைச் சமர்ப்பிக்க வைத்தது.
இப்போது கூடங்குளத்திற்கு எதிராக மத்திய அரசு ஒரு கமிட்டியமைத்து திட்டத்திற்கெதிராக அறிக்கை சமர்ப்பிக்க அனுமதித்திருக்குமா? மத்திய அரசு நினைப்பதை காகிதத்தில் அச்சடித்து வழங்குவதுதானே கமிட்டிகளின் வேலை. ஆக தான் அங்கம்வகித்த காங்கிரஸ் அரசு திட்டத்தில் குளறுபடி செய்ததைக் கூட்டணியிலே இருந்தபோதும் தடுக்கத் தவறியவர்தான் இந்தக் கருணாநிதி.
இதிலே மிகவும் வேதனைக்குரிய விடயமென்னவென்றால் மக்கள் நலத்திட்டமென்ற போர்வையில் கொள்ளையடிப்பதில் காங்கிரசும், தி.மு.க.வும் குடுமிபிடிச்சண்டை போட்டுக்கொண்டதுதான். தி.மு.க. தன்கையில் வளம் கொழிக்கும் துறைகளைத் தேர்ந்தெடுத்து இயன்ற மட்டும் கொள்ளையடித்ததை வேடிக்கை பார்த்து அல்லது பங்குபோட்டுக்கொண்ட காங்கிரஸ் சேதுத் திட்டத்தைக் குறிவைத்து கப்பல் போக்குவரத்துத் துறையை தி.மு.க.விடமிருந்து பறித்து தமிழக காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான வாசனிடம் ஒப்படைத்தது. தி.மு.க.வும் திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக கமுக்கமாக இருந்து கொண்டது. ஒரு புரட்சியில்லை. போராட்டமில்லை. நல்லவன் யோக்கியனென்றால் என்ன செய்திருக்க வேண்டும்? சேதுத் திட்டத்தை விரைவாக நிறைவேற்றுகிறவகையில் கப்பல் போக்குவரத்துத் துறையை மீண்டும் தரவேண்டுமென்று கேட்டிருக்க வேண்டுமல்லவா? கேட்கவில்லை. கேட்டால் 2ஜி ஊழல் வழக்கில் ஆப்படிப்பான் காங்கிரஸ்காரன்.
இந்நிலையில் நீதிமன்றமே தமிழக அரசிடம் தனது நிலைப்பாடு குறித்து தெரிவிக்கவேண்டுமெனக் கேட்டு சம்மனனுப்பியிருக்கிறது. தமிழக அரசும் அத்திட்டத்தின் சாதக பாதகங்களை, மீனவர்களின் பிரச்சினைகளை, சுற்றுச்சூழல் தொடர்பான பிரச்சினைகளைச் சொல்லி நீதிமன்றத்தில் திட்டத்தைக் கைவிடவேண்டுமென பதில் மனுத்தாக்கல் செய்துவிட்டது. தமிழக அரசு கூடங்குளம் அணு மின் நிலையத்தை இயக்கக் கூடாதென்று கூறியதே நீதி மன்றமோ மத்திய அரசோ கேட்டதா? தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் இயக்கக் கூடாதென்று நீதிமன்றத்திலே முறையிட்டதே.. நீதிமன்றமோ, மத்திய அரசோ செவி மடுத்ததா? வலுக்கட்டாயமாகத் தமிழக மக்கள் தலையில் திணிக்கிறனவே... அப்போதெல்லாம் கருணாநிதி கேளாக்காதினராகவும், கண்ணிருந்தும் குருடராகவும் மூச்சுவிடாமல் கிடந்தாரே கருணாநிதி.
ஈழப்பிரச்சினையைக் கையிலெடுத்தால் பூமராங்காக மாறித் தன்னையே தாக்குகிறது. ஊழல், மணற்கொள்ளை, மின்வெட்டு என எந்தப் பிரச்சினையிலும் தன்னை யோக்கியன் என நிரூபித்துக் கொள்ள வழியின்றி தமிழக அரசியலில் தனிமைப்பட்டுப்போயிருந்த, அரசியல் செய்ய வழியில்லாமல் கிடந்த நாடாளுமன்றத் தேர்தல் வருவதைக் கணக்கில் கொண்டு கருணாநிதி சேது சமுத்திரத் திட்டத்தைக் கையிலெடுக்கிறார். போராட்டம் அறிவிக்கிறார்.
சரி. நீதான் போக்கத்தவன். பொழப்புக்கெட்டவன். போகிறபோக்கில் வைகோவை ஏன் வம்புக்கிழுக்கிறாய்.
தமிழகத்தின் அனைத்து வாழ்வாதாரப்பிரச்சினையிலும் முன்னணியில் நின்று போராடுபவர் வைகோ. சேது சமுத்திரத்திட்டத்திலும் அவர் மக்கள் நலன் சார்ந்தே முடிவெடுக்கிறார். மீனவர்கள் மற்றும் சுற்றுச்ச்சுழல் ஆர்வலர்களின் கேள்விகளுக்குப் பதில் யார் தருவது? சேது சமுத்திரத்திட்டத்தால் யாருடைய தலைக்குமேலாவது கத்தி தொங்குகிறதா? தொலைநோக்குப் பார்வைகொண்ட தலைவருக்கு முன்னுரிமை எதற்குத் தரவேண்டுமென்பது தெரியாதா?
சேதுசமுத்திரத்திட்டம் தேவையானதுதான். நிறைவேற்றப்படவேண்டியதுதான். அதற்காகத் தமிழக மீனவர்களின் சோற்றில் மண்ணைப்போட்டுவிட்டல்ல. அவர்களின் வாழ்வுரிமை பாதிக்காத வகையிலேதான் நிறைவேற்றப்படவேண்டும். நீதிமன்றத் தீர்ப்பு வரட்டும். மீனவர்களின் வாழ்வுரிமை பாதிக்கப்படாத வகையிலே நிறைவேற்றப்பட அனைவரும் துணைநிற்பார்கள். வைகோ நாடாளுமன்ற உறுப்பினராகி டெல்லி சென்றால் பித்தலாட்டக்காரன் கருணாநிதியிடம் யாரும் போய் நிற்கப்போவதில்லை. சேது சமுத்திரத் திட்டம் வைகோ முயற்சியால் செவ்வனே நிறைவேற்றப்படும். அதுவரை கருணாநிதி மற்றும் டெசோ கும்பலின் தேர்தல் நாடகப் போராட்டங்களைக் கண்ணுற்று மகிழ்ந்திருங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக