வெறும் திரைப்படமான விசுவரூபம் குறித்து தேவைக்கு அதிகமாகவே டுவிட்டர், முகநூல் வலைப்பதிவுகளில் விவாதம் நிகழ்த்தப்பட்டுவிட்ட நிலையில் விசுவரூபம் அரசியலிலும் கிளை பரப்பி பல புதிய பரிமாணங்களை எட்டியுள்ளது. இப்போது திரைப்படம் என்ற அளவைத் தாண்டி அரசியலுக்குள் நுழைந்துவிட்ட நிலையில் அது துவக்கி வைத்த சர்ச்சைகள் புறந்தள்ள முடியாதவைகளாகி விட்டன.
என்னைப்பொருத்தவரை ஆரம்பம் முதலே கமலின் தவறான அணுகுமுறை ஓவ்வொரு அசைவிலும் காணக் கூடியதாக இருந்தது. அவர் கதையைத் தேர்ந்தெடுத்தது, படமெடுத்தது, அதற்குத் தலைப்பிட்டது, தலைப்பை வடிவமைத்தது, தூண்டுப்படம் வெளியிட்டது இவையனைத்திலும் துளியும் யாரும் தலையிட உரிமை கிடையாது. அது ஒரு படைப்பாளியின் சுதந்திரம். அதை விமர்சிக்கும் எண்ணமுமில்லை.
பெரும் பொருட்செலவில் எடுத்த படத்தை வெளியிட அவர் வெளியீட்டாளர்களை அணுகியபோது கொள்வாரில்லாமல் போனது சோகம்தான். தணிக்கைக்குழுவில் இருந்த நபர் ஒருவரால் வெளியீட்டாளர்களிடம், படத்தில் திரைப்படத்தை வெற்றிபெறச் செய்யத்தக்க வகையிலான மசாலா கலவையில்லை, இது மாபெரும் சோதனை முயற்சி என செய்திகளை கசிய விட்டது வெளியீட்டாளர்களைப் பின்வாங்கச் செய்ததுடன், எடுத்துக்கொள்ள முன்வந்த வெளியீட்டாளர்களையும் அடிமாட்டு விலைக்குக் கேட்க வைத்தது.
தணிக்கைக்குழு மத்திய ஆளும்கட்சி உறுப்பினர்களால் நிரப்பப்படுகிறது. மத்தியிலே ஆளுபவர்கள் காங்கிரசு மற்றும் தி.மு.க. தணிக்கைக்குழுவில் இருந்த நபர் இது போன்ற விபரங்களை வெளியே கசிய விட்டு படத்தின் வியாபாரம்/விலையைக் குறைப்பது யாருக்கு லாபம் தரும்? வெளியீட்டாளர்கள் அல்லது தொலைக்காட்சி உரிமையாளர்கள் இருவருக்குதான். தமிழகத்தின் தொலைக்காட்சி வலையமைப்பில் காங்கிரசுக்கு அவ்வளவு செல்வாக்கில்லை. ஆளும்கட்சியின் ஜெ.வுக்கு தனிக்கைத்துறையில் ஆளிருக்க வாய்ப்பில்லை. இதனால் முழுக்க முழுக்க ஆதாயமடையப்போவது தி.மு.க./கருணாநிதி குடும்பம் சார்ந்த தொலைக்காட்சி நிறுவனங்களும், கருணாநிதி குடும்பத் திரைப்பட வெளியீட்டு நிறுவனங்களும்தான். திட்டமிட்டது போல திரைப்படத்தின் தொலைக்காட்சி வெளியிடும் உரிமை கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளுக்குக் கிடைக்காமல் வேறு தொலைகாட்சிகளுக்கு தரப்பட்டுவிட்டாலும் தமிழகத்தின் பல பகுதிகளுக்கான திரையரங்க வெளியீட்டு உரிமைகளை அள்ளின கருணாநிதி குடும்ப வெளியீட்டு நிறுவனங்கள் என்பது பின்னால் வந்த செய்தி.
படத்தின் தொலைக்காட்சி உரிமை ஜெயா தொலைகாட்சிக்கு பேசப்பட்டு பேரம் படியாமல் பிறகு விஜய் தொலைக்காட்சிக்கு விற்கப்பட்டுவிட்டதாம். ஜெயா தொலைக்காட்சி எப்போதுமே இது போன்று புதிய திரைப்படங்களை உலகத் தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வெளியிடும் போட்டியில் இருந்ததாகத் தெரியவில்லை. இப்போது புதிதாக அவர்கள் ஆசைப்பட்டாலும் பெரிய அளவில் வியாபாரமாகக்கூடிய அளவிற்கு பார்வையாளர்களோ அல்லது விளம்பரங்களோ இல்லை என்பதுதான் உண்மை.
ஆக படம் எதிர்பார்த்த அளவிற்கு வியாபாரமாகவில்லை என்பது தெரிந்த பிறகு நட்டத்திற்கு வியாபாரம் செய்ய எந்த முதலாளிதான் வருவான். கையைக் கடிக்கும் என்று தெரிந்தபின் தக்காளியாக இருந்தாலும் பாலாக இருந்தாலும் கீழே கொட்டி வீணடித்த உற்பத்தியாளர்களைப் பார்த்திருக்கிறோம். தர்ம காரியங்கள் செய்ய வியாபாரிகள் தயாராக இருப்பதில்லை.
அந்த வகையில் கமல் ஏதேனும் செய்து படத்தை விற்று விட எண்ணித்தான் புதிய முயற்சியாக டிடிஎச் ஒளிபரப்பைத் தேர்ந்தெடுத்தார். அவர் டிடிஎச்-ல் படத்தை வெளியிட்டிருந்தால் நிச்சயம் அவர் போட்ட முதல் திரும்பக் கிடைத்திருக்க பெருமளவு வாய்ப்பிருந்தது. அவர் என்ன லாபக் கணக்கு வைத்திருந்தார் என்பது யாருக்கும் தெரியாது. திரையரங்குகளிலும் வெளியிட்டே தீரவேண்டும் என்றும் முயற்சி செய்தார். ஆனால் திரையரங்க உரிமையாளர்களின் எதிர்ப்பால், தனது எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, டிடிஎச் ஒளிபரப்பில் ஏற்பட்ட சர்ச்சையை தனது படத்திற்கான விளம்பரமாக மட்டுமே பயன்படுத்திக்கொண்டு டிடிஎச்-ல் முன்பதிவு செய்தவர்களையெல்லாம் முட்டாளாக்கிவிட்டு மீண்டும் திரையரங்கப் பாதைக்கு வந்தார்.
சிறுபான்மை மக்கள் குறித்த சர்ச்சைக்குரிய திரைக்கதையை எடுத்தால் எதிர்ப்புகள் வரும் என்பது தெரியாதவரல்ல கமல். நிச்சயம் தெரிந்தேதான் வைத்திருப்பார். அதனாலேதான் படத்தைத் திரையிடும்முன் இசுலாமிய அமைப்பினருக்குக் காட்டிட முன்வந்தார்.
படத்தில் இந்திய இசுலாமியர்களுக்கு எதிராக எதுவுமில்லை என படம் பார்த்த அனைத்து நண்பர்களும் தெரிவித்தபோதும் இசுலாமியர்கள் தாங்கள் மதிக்கிற திருக்குரான் இழிவுபடுத்தப் படுவது போன்ற காட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த எதிர்ப்பு என்பது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ளத்தக்கதே. கமல் காட்சிகளை நீக்க முன்வராத நிலையில் இசுலாமிய அமைப்புகள் நேரடியாக சட்டத்தைக் கையிலெடுக்காமல் முறையான வழிகளில் அரசிடம் முறையிட்டு படத்திற்குத் தடை வாங்கியது.
தமிழக அரசு இப்படத்தைத் தடை செய்தது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது என நான் கருதவில்லை. கருத்து சுதந்திரம் என்பது தேர்ந்தெடுத்த விசயங்களில் மட்டுமே வேண்டும் மற்றவற்றில் கடிவாளம் போடவேண்டுமென்பதை ஏற்பதற்கில்லை. இதே அரசுகள் ஈழத்தில் ஏற்பட்ட துயரங்களைத் திரையில் வடித்த படங்களான காற்றுக்கென்ன வேலி, ஆணிவேர், தேன்கூடு, உச்சிதனை முகர்ந்தால், குற்றப்பத்திரிக்கை போன்ற படங்களை வெளியிட அனுமதி மறுத்தன. அவை வெளியிட யாராவது எதிர்ப்புத் தெரிவித்தார்களா என்று கேட்டால் யாருமில்லை. ஆனாலும் மக்களுக்கு செய்திகள் சென்று சேர்வதில் அவர்களுக்குப் பிரச்சினைகள் இருக்கின்றன. அதனால் தடை செய்யப்பட்டன. மேற்குறிப்பிட்டதில் சில படங்கள் பிறகு சட்டப்போராட்டங்களை நடத்தி வெளிவந்தன. சில படங்கள் பெட்டிகளுக்குள்ளேயே முடங்கிப் போயின.
கமலின் இந்த திரைப்படம் முழுமையாக படைப்பாளியின் சுதந்திரத்தோடு வெளிவரவேண்டுமென்பதே எனது நிலைப்பாடு.
கருத்து சுதந்திரமென்பது அனைத்திற்கும்/அனைவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். படத்தை எடுக்கும் கருத்துரிமை கமலுக்கு இருக்கும் போது அதனை எதிர்க்கும் உரிமை என இசுலாமிய சகோதரர்களுக்கு இல்லையா? கமலின் கருத்துரிமையை மதிக்கும் நாம் ஏன் இசுலாமிய நண்பர்களின் கருத்துரிமையை ஏற்க மறுக்கிறோம்?
மேற்சொன்ன படங்களுக்குக் கிடைக்காத விளம்பரம் புதிதாகத் தோன்றிய கருத்துரிமைக் காவலர்களால் விசுவரூபம் திரைப்படத்திற்குக் கிடைத்துள்ளது. கமலும் தனது கருத்துரிமையைப் பாதுகாக்க சட்டத்தின் வழியில் போராடி படத்தை வெளியில் கொண்டு வருவதுதானே முறை.
ஆனால் கமல் செய்ததென்ன? சட்டம் ஒழுங்கைக் காரணம் காட்டி இங்கே அரசு தடை செய்துள்ளது. படத்தை வெளியிட வேண்டியது முக்கியமானதென்றால் இசுலாமிய அமைப்புகளுடனும் அரசுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். அல்லது சட்டப் போராட்டத்திற்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். படத்தின் காட்சிகளை நீக்க மறுத்ததுடன் அமெரிக்காவுக்கு பறந்து சென்று விட்டார்.
அவர் அமெரிக்காவுக்கு போனதும், மத்திய அரசு/ காங்கிரசு செய்தித் தொடர்பாளர் மணீசு திவாரி தணிக்கை வாரியம் அனுமதி தந்தபின் தமிழக அரசுக்கு திரைப்படத்தைத் தடை செய்ய அதிகாரமில்லை என அறிக்கை வெளியிடுகிறார். ஏன்?
மத்தியில் ஆளும் காங்கிரசு ஏன் சம்மனே இல்லாமல் விசுவரூபம் விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது. இங்கேதான் வருகிறார் நம் சீமான் சிதம்பரம். கூடவே சந்தர்ப்பத்திற்காகவே காத்திருந்த கருணாநிதியும் விவகாரத்தை அரசியலாக்கி அதில் குளிர்காய்வதைத்தவிர இவர்களுக்கு வேறென்ன நோக்கமிருக்க வேண்டும்.
இசுலாமிய அமைப்புகளோ, அ.தி.மு.க. அரசோ, முதல்வர் ஜெ. வோ கமலைப் புறக்கணித்ததாகத் தெரியவில்லை. ஆனால் கமல்தான் இவர்களைப் புறக்கணித்து, தடைகளைத் தகர்த்தெறிவேன் எனச் சொல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கச் சொல்லிவிட்டு அமெரிக்கா சென்றுவிட்டார். தமிழக அரசு அதிகாரிகளோ, முதல்வர் ஜெ.வோ அமெரிக்கா சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்க முடியுமா?
கமலின் ஆலோசகர்களாகச் செயல்பட்ட இவர்கள், நாங்கள் பிண்ணனியில் இருக்கிறோம். படத்தைத் தடை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என கமலை தவறாக வழிநடத்தி விட்டவர்கள் போல தோன்றுகிறது. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் அதே நாள்தான் டேம் 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடை செல்லும் என்று உச்ச நீதி மன்றம் சொல்லியிருந்தது. ஆக நண்பர்கள் என்கிற பெயரில் காலை வாரிவிட்டு, கமலைப் பகடைக் காயாகப் பயன்படுத்தி அதில் அரசியல் லாபமீட்டும் சகுனிகளின் ஆலோசனைக்குக் கமல் பலிகடாவாகி விட்டார்.
பிறகு உயர்நீதிமன்றம் தனது வேலைகளை எல்லாம் விட்டுவிட்டு நாட்டிற்கு மிகவும் முக்கியமான விசுவரூபம் திரைப்படத்தை பார்த்து இரவு பன்னிரண்டு மணிக்கு தீர்ப்பு வழங்கியது. படத்திற்கு இருந்த தடையை நீக்கி உத்தரவிட்டது.
கமல் தரப்பில் எந்தவிதமான சமரசத்திற்கும் தயாராக இல்லாத நிலையில், சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க சம்மதமோ, அறிவிப்போ வெளியிடாத நிலையில், தீர்ப்புக்கு முந்தைய நிலவரத்திலோ எந்த மாற்றாமும் இல்லாத நிலையில், இசுலாமிய அமைப்புகளின் கோரிக்கைகள் செவி மடுக்கப்படாமல் வலுக்கட்டாயமாக தீர்ப்பை நீதிமன்றத் தீர்ப்பைத் திணிக்க முற்படாமல் மேல் முறையீட்டுக்கு விண்ணப்பித்தது தமிழக அரசு.
இது போன்ற ஒரு சந்தர்ப்பத்திற்காகவே காத்துக்கிடந்த மத்திய அரசு தனது அனைத்து பரிவாரங்களையும் பயன்படுத்தி (பொதிகை தொலைக்காட்சி உட்பட) தமிழக அரசுக்கு எதிரான உளவியல் பிரச்சாரங்களை கட்டவிழ்த்து விட்டது. கருணாநிதி சும்மாயிருப்பாரா?
1996 ல் போயசு கார்டனில் வாய்க்கால் தகராறுக்காக ரசினிகாந்தை உசுப்பிவிட்டு அவரை மூளைச்சலவை செய்து தங்களுக்கு ஆதரவாகத் திருப்பி எளிதாக வெற்றிக்கனியைப் பறித்த தந்திரக்காரராயிற்றே. அந்தக் குழுவில் இருந்த சோ ராமசாமியைத் தவிர மீதி எல்லோரும் இப்போதும் ஒன்று சேர்ந்து இப்போது சிக்கிய கமலை வைத்து அரசியல் நாடகம் நடத்த எத்தனிக்கின்றனர். பிரச்சினைகளின் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ள கமல் ஏதேனும் கொப்பு கிடைத்தால் பற்றிக் கொண்டு கரையேறும் நோக்கில்தான் இந்த சகுனிகளை நம்பினார் எனக் கொள்ளலாம்.
தங்கள் கட்சி எம்பிக்கள் சிலரையும் தங்கள் ஆதரவு திரையுலகப் பிரமுகர்கள் சிலரையும் அனுப்பிவைத்து கமலுக்கு கொம்பு சீவினர். கமலும் உணர்ச்சிவசப்பட்டு விதையாவேன், சதையாவேன் என்றெல்லாம் பேட்டியளித்தார். வீட்டை விற்றுப் படமெடுத்தேன். வெளியிட அனுமதிக்கவில்லையென்றால் மதச்சார்பற்ற நாட்டுக்குப் போய் விடுவதாக “எமோசனல் ப்ளாக்மெயில்” செய்தார். உண்மையில் அவர் சித்தரிப்பதுபோல தமிழகம் ஒன்றும் மதவாதிகளின் கையில் போய்விடவில்லை. ஆனால் இது போன்ற “சென்சேசனல்” அரசியல்களால் போய்விடும் வாய்ப்பிருக்கிறது. இசுலாமிய அடிப்படைவாதிகளின் கையிலல்ல. இந்துத்துவ அடிப்படைவாதிகளின் கையில். ஆகவே உணர்ச்சிவசப்பட்டு அவர் அளித்த பேட்டியைப் புறந்தள்ளிவிடுவதே சரி.
ஆனால் வியப்பு என்னவென்றால் எல்லா நிலைமைகளையும் சீர்தூக்கிப் பார்க்கும் சமூக வலைத்தளப் பயனாளர்களும், பொதுமக்களும் பின்னணியில் நடைபெறும் அரசியலை கருத்தில் கொள்ளாமல் அவசரக் கோலத்தில் செயல்படுவதுதான்.
கமலுக்கு கருத்து சுதந்திரம் தேவைதான் மறுப்பதற்கில்லை. அதேபோன்ற கருத்து சுதந்திரமும் சட்ட நடைமுறைகளும் இசுலாமிய நண்பர்களுக்கும் உரிமையுள்ளது. அவர்கள் படத்திற்கு தடை கோருவதும் இவர் தடை விலக்கக் கோருவதும் நெறிமுறைகளுக்கு உட்பட்டதே.. சர்ச்சைக்குரிய திரைக்கதையைத் துணிச்சலுடன் தேர்வு செய்த கமல் இசுலாமிய அமைப்புகளுடன் சமரசம் செய்து கொள்ள வேண்டும் அல்லது அவர்கள் தொடுக்கும் வழக்கினை வென்று (எத்தனை முறை மேல் முறையீடு சென்றாலும்) படத்தை வெளியிட வேண்டும்.
அதுவுமில்லை தமிழக அரசு ஏதேனும் சலுகை செய்ய வேண்டும் எனக் கருதினால் அவர் முதுகுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு அரசியல் செய்யும் காங்கிரசையும், கருணாநிதியையும் துரத்திவிட்டால்தான் அது சாத்தியப்படும்.
பிற்சேர்க்கை: இன்று ஜெ. செய்தியாளர்களிடம் பேசிய ஜெ. சமரசத்திற்கு இசுலாமிய அமைப்புகள் ஆயத்தமாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இதற்குப் பிறகும் கமல் அவர்கள் காங்கிரசு, தி.மு.க.வின் அரசியல் சதிகளுக்கு பலியாகாமல் ஆகவேண்டியதைப் பார்க்க வேண்டியது அவசியம். இன்னமும் அவர்களை நம்பினால் தமிழர்களைப் படுகுழியில் தள்ளியதுபோலத் தள்ளிவிடுவர் என்பது நிச்சயம்.



