புதன், 9 ஜனவரி, 2013

விசுவரூபம்: கமலின் நம்பகத்தன்மையும் என் குற்ற உணர்ச்சியும்.



திரைப்படங்கள்தான் நம் காலத்தில் மக்களை ஆக்கிரமித்துக் கொண்டுள்ள மிகப்பெரிய ஊடகமாகும். தொலைகாட்சிகள் வந்தபிறகும் அவை திரைப்படங்களைச் சார்ந்தே இயங்கி வருகின்றன. என்னைப் பொறுத்த அளவில் திரைப்படங்களுக்கு எப்போதுமே முக்கியத்துவம் தந்ததில்லை.. அதற்காக படம் பார்ப்பதில்லை என்றும் சொல்லமுடியாது. பொழுதுபோக்கு என்கிற அம்சத்தைத் தாண்டி எனக்கு அவற்றில் வேறு எதுவுமிருப்பதில்லை. 

திரைப்படங்கள் குறித்து எதுவும் எழுதியதில்லை எனும் நிலையில் சற்றே பின்னோக்கிப் பார்க்கலாமெனத் தோன்றுகிறது. ஆனால் அது என்னுள் பலப்பல ரசவாதங்களையும், கீற்றுகளைப் போலத் தெறித்து ஓடும் பால்ய நினைவுகளையும் தட்டி எழுப்பி விடுகிறது. எழுதத் தொடங்கினால் இந்தப் பதிவில் முடியாது. எனவே நேரம் கிடைக்கும் போது மிக மிக சுவாராசியமான அந்த நினைவுகளைப் பதிவு செய்கிறேன்.

சென்னையில் இருந்த வரை நேரமின்மை காரணமாக மிகவும் சலித்து தேர்ந்தெடுத்த திரைப்படங்களை திரையரங்கில் சென்று பார்ப்பதையே வழக்கமாக வைத்திருந்தேன்.இதுவரையில் ஒரு முறை கூட ஒரு படத்தைக் கூட (திருட்டு) டிவிடியில் பார்த்ததில்லை.  நாடு கடந்த பிறகு முழுக்க முழுக்க இணையமே பொழுது போக்கு என ஆகிவிட்டது. வெளியாகும் அனைத்து திரைப்படங்களையும் இணையத்தில் இறக்கம் செய்து பார்த்துவிடுவது. அனைத்துப் படங்களும் என்றால் அனைத்துப்படங்களும்தான். ஒன்றுகூட விட்டு வைப்பதில்லை. நம் ஊரில் எவரும் பெயரே அறிந்திராத தமிழ்ப் படங்களைக் கூட பார்த்துவிடுவேன். 

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு மற்றும் இந்திப் படங்களையும் இறக்கம் செய்து பார்த்துவிடுவது. கன்னடம் மட்டும் ஒட்டுவதேயில்லை.

ஆனால் எந்தப் படமாக இருப்பினும் டிவிடி அளவுக்கு தரமாக வரும் வரை காத்திருப்பேன். படம் வெளியான மறுநாளே டிசி எனப்படும் திரையரங்குகளில் பதிவு செய்யப்படும் தரம் குறைந்த பதிப்புகள் வந்துவிட்டாலும் டிவிடி தரத்தில் வர குறைந்தது பதினைந்து நாட்கள் முதல் ஒரு மாதம் வரை ஆகலாம். இருப்பினும் காத்திருந்து பார்ப்பதே எனது வழக்கம். அதுவரை டுவிட்டர்களிலும் வலைப்பதிவுகளிலும், வெளியான அந்தப் படங்களை துவைத்துக் காயப்போட்டாலும் கண்டுகொள்வதில்லை. டிவிடி தரத்தில் வெளியான பின்னரே இறக்கம் செய்து பார்ப்பது..

இவ்வாறாக செய்கிற தொழிலில் ஒரு நேர்மையைக் கடைப்பிடித்து வந்தவன் நான். ;-)

விசுவரூபம் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடாமல் டிடிஎச்-ல் முதலில் வெளியிடுவதாக கமல் அறிவித்தது சற்றே புருவத்தை உயரச் செய்தது. திரையரங்க உரிமையாளர்கள் ஒத்துழைக்க மறுத்தும் பிடிவாதமாக டிடிஎச்-ல் வெளியிட்டே தீருவேன் எனக் கமல் அறிவித்தது எனக்குள் கமலின் மீது வைத்திருந்த மதிப்பை சற்றே உயர்த்தியது எனக்கூட சொல்லலாம்.

எது எப்படியிருந்தாலும் விசுவரூபம் வெளியாகும் தகவல் குறித்தும் சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.. நமக்குதான் தனியாக ஒரு வெளியீட்டு நாளல்லவா? நாம பார்க்கிறதுக்குதான் எப்படியும் ஒரு மாசமாகுமே. 

இரண்டு நாட்களுக்கு முன்னால் நண்பர் ரபீக் அழைத்து என்னிடம் சன் டைரக்ட் டிடிஎச் இருக்கு. விசுவரூபம் பார்க்கலாமா? இணையதளம் வழியாக எப்படி கட்டணம் செலுத்துவது? எப்படி இந்த சிறப்பு சேவையை செயல் படுத்துவது என உதவி கேட்டார். அவருக்கு கணிணி மற்றும் இணையம் அவ்வளவாக பரிச்சயமில்லை. 

எனக்கு உற்சாகம் தொற்றிக்கொண்டது. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பதில்தான் என்ன சுகம். மற்றொன்று டிவிடி தரமுள்ள படத்தை இந்தியாவில் யாரும் திரையரங்குகளில் பார்க்குமுன்னே நாம் பார்த்துவிடலாமென்ற ஆர்வம். அதற்கும் மேல் என்னவென்றால் இந்தியாவில் படம் வெளியாகுமுன்னே படத்தை முதல் காட்சிகளில் குவைத்திலும், துபாயிலும் பார்த்துவிட்டு அவசர விமர்சனம் எழுதி வரும் நண்பர்களையும் முந்தி படத்தைப் பார்த்துவிடுவதால் கிடைக்கப் போகும் திருப்தி. (திருட்டுக் குமரன்  டுவீட் லாங்கரில் இந்திய ஊடகங்களுக்கு முன்னதாக நீதானே என் பொன் வசந்தத்திற்கு விமர்சனம் எழுதி தயாரிப்பாளரும், இயக்குனரும் கோடம்பாக்கத்தையே காலி செய்துவிட்டு ஓடிய சம்பவம் நினைவிற்கு வருகிறதா?)

ஆக மேற்சொன்ன உற்சாக மிகுதியில் அவர் கேட்டுக்கொண்டவாறு அவரது சன் டைரக்ட் கணக்கில் ஆயிரம் ரூ செலுத்தி (அவர் பணம்தான்) வாடிக்கையாளர் சேவை மையத்தில் தொடர்புகொண்டு விசுவரூபம் பார்க்க கூடுதல் சேவையை அளிக்க ஆவன செய்து கொடுத்தேன். வாடிக்கையாளர் சேவை அலுவலர் உங்களுக்கு விசுவரூபம் சேவை செயல்படுத்தப் பட்டுவிட்டது. 10-01-2013 அன்று மாலை இந்திய நேரப்படி 9:30 மணிக்கு துவங்கி விளம்பர இடைவெளியின்றி படம் ஒளிபரப்பப்படும் தவற விட்டுவிட்டால் திரும்பப் பார்க்க இயலாது எனச் சொல்லி நமது செயற்கைக்கோள் அலைவாங்கியைச் செயல்படுத்த ஒரு எண்ணையும் கொடுத்தார். படம் ஒளிபரப்பப்படும் வேளையில் மின்சாரம் போய் விட்டால் என்ன செய்வது என கேட்டதற்கு மின்சாரம் போனால் ஒன்றும் செய்ய இயலாது ஆனால் விசுவரூபம் ஒளிபரப்பாகும் நேரம் மின்சாரம் போகாது என (என்னவோ கமல் நேரடியாக நத்தம் விசுவநாதனிடம் ஒப்பந்தம் செய்துள்ளது போல) கூறினார்.

மறுநாள் அதிகாலையில் அதே நண்பர் ரபீக்கிடமிருந்து குறுஞ்செய்தி. நாம் எப்போது அதிகாலையெல்லாம் பார்த்திருக்கிறோம். பிறகு அவரிடமிருந்து நினைவூட்டல் அழைப்பு வந்தபிறகே குறுஞ்செய்தியைப் பார்த்தேன். இவர் விசுவரூபம் பார்க்கப் போகும் சங்கதியை ஊரில் உள்ள குடும்பத்தாரிடம் உளறி வைத்து விட்டார் போல.. சும்மா விடுவார்களா? ஊரில் உள்ள இன்னொரு இணைப்பிற்கும் விசுவரூபம் பார்க்க வகை செய்யப்போய் மொத்தமாக 2000 ரூ சன் டைரக்ட் நிறுவனத்திற்கு கட்டியாயிற்று.

வழக்கமாக விழித்ததும் டுவிட்டரில் உள் நுழைந்து நாட்டு நடப்புகள் உள்ளிட்ட எந்த டுவிட்டையும் தவற விட்டுவிடாமல் முதல் நாள் இரவில் தொடங்கி அப்போது வரையுள்ளது வரை நேரக்கோட்டை ஒரு பார்வையிட்டுவிடுவது வழக்கம். இன்று கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும் தந்த சுகத்தில் டுவிட்டருக்குப் போகாமலேயே மேற்சொன்ன சன் டைரக்ட்-விசுவரூபம் வேலையை செய்து முடித்துவிட்டு டுவிட்டரில் சென்று நண்பர்களிடம் பீற்றலாமென்று போனேன். அப்போதுதான் இடிபோல டுவீட்டுகள் நேரக்கோட்டில் வந்து  விழுந்தன. 

முதல்நாள் சன் டைரக்ட் இணையதளத்தின் முகப்பில் விசுவரூபம் பதாகையும் எப்படி அந்தச் சேவையைப் பெறுவது என்ற விளக்கங்களும் இருந்தன. ஆனால் இரண்டாம் முறை மறுநாள் காலை செல்லும்போது அந்த பதாகை நீக்கப்பட்டிருந்தது. இதை நானும் கவனித்தேன். ஆனால் ஒருவேளை ஏற்கனவே உள் நுழைந்திருந்ததால் குக்கிகள் மூலமாக முகப்புப் பக்கத்தைத் தாண்டி நேராக உள்நுழையும் வசதி இருக்கக்கூடுமென்ற சமாதானம் என் ஐயத்தை துடைத்துப் போட்டது. ஒருவேளை அதிகளவிலான விண்ணப்பங்களைச் சமாளிக்க முடியாமல்  நீக்கியிருக்கலாமென்ற கூமுட்டைத்தனமான (ஙே) எண்ணமும் வந்து போனதை மறுப்பதற்கில்லை

விசுவரூபம் டிடிஎச் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டு விட்டதாம். பிறகு ஏகப்பட்ட தாவாக்களுக்குப் பிறகு இன்று (09-01-2013) காலை கமலே நேரடியாக அறிவித்துவிட்டார். விசுவரூபம் முதலில் திரையரங்குகளில்தான் வெளியிடப்படும். டிடிஎச்சிலும் அதே நேரம் வெளியிடப்படலாம் இல்லை வெளியிடப்படாமலும் போகலாம்.

எவ்வளவு பெரிய மோசடி இது. இதற்கு நானும் துணை போய்விட்டேனே என குற்ற உணர்ச்சி என்னைத் துரத்தியதே இந்த நீண்ட பதிவெழுத என்னைத் தூண்டியது.

குற்ற உணர்ச்சி மேலிட மேற்சொன்ன காரணங்களைவிட இன்னுமொரு முக்கிய காரணம் உண்டு. அது சன் டைரக்ட்.

கருணாநிதி ஆட்சியின் துணையுடன் நிகழ்த்தப்பட்ட தமிழீழ இனப்படுகொலை குறித்த செய்திகளை இருட்டடிப்பு செய்ததுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடியவர்களை தொடர்ந்து இழிவு படுத்தி வந்தன சன் உள்ளிட்ட கருணாநிதி குடும்ப தொலைக்காட்சிகள். ஆகவே இந்தியாவில் இருந்தவரையில் கருணாநிதி குடும்பத் தொலைக்காட்சிகளையும், அவர்களது குடும்ப திரைப்படங்களையும் முழு மூச்சாக புறக்கணித்து வந்தேன். எந்த பிரபல நடிகர் நடித்திருந்தாலும் அவர்கள் குடும்பத் தயாரிப்புகளைப் பார்த்ததில்லை. அதே போல தொலைக்காட்சிகளையும் புறக்கணித்து வந்தேன்.

பழைய காயங்கள் மறக்கத் துவங்கியதோ தெரியவில்லை அந்த நண்பருக்கு உதவப் போய் சன் டைரக்ட் நிறுவனத்துடன் ஒரு வரவு செலவு தொடங்கிவிட்டேன். இந்த வரவு செலவு முழுக்க முழுக்க கமலுடன் இருப்பதாகவே எனக்குத் தோன்றியது.

முதல்நாள் நண்பர் விஜயகோபாலசாமி டிடிஎச்-ல் படத்துக்கு 1000ரூ. விலை  வைத்ததன் மூலம் கமல் நம்மையெல்லாம் முட்டாளாக்கிவிட்டார் என்று டுவிட்டரில் சொன்னார். அப்போது நான் விருப்பமிருந்தால் தானே பார்க்கப்போகிறோம் இதிலே என்ன முட்டாள்தனம் இருக்கிறது என அவரை கடிந்து கொண்டேன். சொல்லி 24 மணிநேரம் கூட ஆகவில்லை  இப்போது படம் டிடிஎச்-ல் வெளிவராது என அறிவித்து முட்டாளாகவே ஆக்கிவிட்டார் கமல்.

இப்போது சன் டைரக்டோ அல்லது வேறு எந்த டிடிஎச் சேவைகளோ பிடிக்காமலிருந்தும் தனித்து விடப்பட்ட கமலுக்கு ஆதரவளிப்பதாக எண்ணிக்கொண்டு பகாசூர நிறுவனங்களிடம் பணத்தைக் கட்டியாகிவிட்டது. படம் வெளியிடவில்லையென கமல் ஒதுங்கிக் கொண்டால் மலை முழுங்கி சன் குழுமம் வாங்கிய பணத்தைத் திருப்பித் தருமென்றெல்லாம் எண்ணுமளவுக்கு அப்பாவிகள் யாருமில்லை. வேண்டுமானால் மாதாந்திரக் கட்டணத்தில் கழித்துக் கொள்கிறேன் எனச் சொல்லிவிடப் போகிறான்.

கமல் தனது மீது மக்கள் வைத்திருந்த நம்பகத்தன்மை முழுவதையும் இழந்துவிட்டார். நிச்சயம் இவர் யாரையும் ஏமாற்ற வேண்டுமென்று திட்டமிட்டு இதைச் செய்திருப்பார் என நீங்கள் சொன்னால் கூட நம்பக்கூடியவனல்ல நான். திரையரங்கு உரிமையாளர்களின் நிர்ப்பந்தம் ஒருவகையில். சன் டைரக்ட் போன்ற திருட்டு பேர்வழிகள் கூட பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையைக் குறைத்துக் கூறி அவரைப் பின்வாங்கச் செய்திருக்கலாம்.

இதில் கமல் இழந்தது அதிகம். டிடிஎச்-ல் எதிர்பார்த்திருந்த வருமானத்தை இழந்தார். பழையபடி திரையரங்குகளை நம்பியதால் திரையரங்கு லாபம் குறைந்துவிடும். படம் பொங்கல் விடுமுறை நாட்களில் வெளியாகாததால் முதல் வார வசூல் பாதிக்கப்படும். தாமதமான வெளியீட்டால் படத்தின் மீதிருந்த ஆர்வம் குறைந்துவிடும்.

இவையெல்லாவற்றுக்கும் மேலாக கமல் இழந்தது அவர்மீது மக்கள் வைத்திருந்த நம்பிக்கை.

தனித்து விடப்பட்ட ஒரு மனிதனை சீண்டி விளையாடுவது எனது நோக்கமல்ல.. சொல்லப்போனால் தனித்து விடப்படுதலின் வலியறிந்ததாலேதான் சன் டைரக்ட் என்னும் தடையிருந்தும் கமலின் விசுவரூபம் பார்க்க நண்பர் விரும்பியபோது எதையாவது சொல்லி அவரைத் தடுக்க முற்படாமல் பதிவு செய்ய உதவினேன். 

இக்கட்டுகளில் இருந்து மீண்டு வர கமலுக்கு வாழ்த்துகள்.

5 கருத்துகள்:

  1. முன்னுக்குப் பின் முரணாக வந்த பல தகவல்கள் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கும் முன்பே இது விஷயத்தில் கமலஹாசன் மீது எனக்கு நம்பிக்கையில்லை.

    ஆரம்பம் முதலே டாடா ஸ்கை விஸ்வரூபம் படம் தொடர்பில் எந்த ஒரு ஒப்பந்தமும் செய்துகொள்ளவில்லை. ஆனால் டாடா ஸ்கையையும் உள்ளடக்கி படம் குறித்த ஹைப்புகள் வரத் துவங்கியதிலிருந்து ஏதோ ஒன்று உறுத்திக் கொண்டிருந்தது. இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் டாடா ஸ்கையின் தளத்திலும் காணப்படவில்லை. இதைச் சொன்ன போது சில நண்பர்கள் உங்களை விடவும் மோசமாகக் கடிந்து கொண்டனர்.

    இன்னொரு கோரிக்கை. தளத்திற்கு டயனமிக் டெம்ப்ளேட்டுகள் வைக்க வேண்டாம். பலருடைய அலுவலகங்களில் டயனமிக் வியூ தெரிவதில்லை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. எதோ ஒரு ஆர்வத்தில பண்ணிட்டேன். இனிமேல் எவனாவது டி.டி.எச் வெளியீடுன்னா திரையரங்கக் கட்டணத்தைவிடக் குறைவா இருந்தாக்கூட யாரும் முன்பதிவு செய்ய மாட்டாங்க.

      ஒரே நேரத்தில் திரையரங்குகளிலும், டி.டி.எச்-லும் அல்லது திரையரங்குகளுக்கு பிறகு டிடிஎச்-லோ அந்தப் படத்தை வெளியிட்டால் அவ்வளவு பணம் கொடுத்துப் பார்ப்பது பொருத்தமாக இராது. கமல் எதாவது செய்வதென்றால் டி.டி.எச்-ல் ஒளிபரப்பு இல்லை எனக்கூறி பணம் வசூலித்த டி.டி.எச். நிறுவனங்களைப் பணத்தைத் திருப்பித்தரச் சொல்லலாம்.

      வடிவமைப்பு குறித்த ஆலோசனைக்கு நன்றி. வடிவமைப்பையும் மாற்றிவிட்டேன். நேரம் கிடைக்கும்போது மெருகூட்டலாம். :-)

      நீக்கு
  2. கமல் நினைத்து ஒன்று நடந்தது வேறு ஒன்று. நடந்த உண்மை என்னவென்றால் - விஸ்வரூபம் படத்தை கமல் 110 கோடிக்கு விற்க்க முயற்சித்தார். அனால் விநியோகஸ்தர் அதிக பட்சமாக 80 கோடிக்கு தான் ஒத்துபோனார்கள். கமல் வேற வழியின்றி டீ.டி.ஹச் முறைக்கு மாற வேண்டியதாயிற்று. அவர்கள் 50 கோடிக்கு
    வியாபாரம் செய்தார்கள். இது தான் நடந்தது.
    இந்த முறையில் தெளிவான திருட்டு சி.டி சுலபமாக கிடைக்கும். கணினி மூலமாக திரை பதிவு செய்து விடமுடியும். டீ.டி.ஹச் மூலமாக தயாரிப்பாளரான கமலுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

    பதிலளிநீக்கு
  3. http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Mr-Kamal-Haasan-where-is-my-money/article

    பதிலளிநீக்கு
  4. நன்றி! நண்பர் சபாதம்பி அவர்களே!!!

    நீங்கள் சுட்டிய முழுமையான இணைப்பு இதோ..

    http://timesofindia.indiatimes.com/entertainment/regional/tamil/news-interviews/Mr-Kamal-Haasan-where-is-my-money/articleshow/17965231.cms

    முழுக்க முழுக்க கட்டுரையாளரின் உணர்வுகளோடு ஒத்துப் போகிறேன்.

    சன் டைரக்ட் வாடிக்கையாளர் சேவை மையத்தில் பேசியதற்கு போட்டால் சொல்கிறோம் போடவில்லையென்றால் திருப்பித் தருவதைப் பற்றி பேசலாம். இப்போதைக்கு திருப்பித்தரும் உத்தேசமில்லை எனத் தெரிவிக்கின்றனர்.

    கமல் செய்தது அப்பட்டமான மோசடி.

    பதிலளிநீக்கு