வியாழன், 12 டிசம்பர், 2013

இ.பி.கோ. 377 ஓரினச்சேர்க்கைக்கு மட்டுமா தடை விதித்தது? மனித உரிமைகளுக்கல்லவா விடை கொடுத்தது!

நேற்று 11-12-13 அன்று இந்திய உச்ச நீதி மன்றம் ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியிருக்கிறது. ஆம். இந்தத் தீர்ப்பு வரலாற்றின் கருப்புப் பக்கங்களில் பதிந்து வைக்கப்படும்.

படம் உதவி:  Manjul Toons

இந்தியா மதச்சார்பற்ற நாடு அல்ல என்பது பல்வேறு தருணங்களில் மெய்ப்பிக்கப்பட்டு வந்தாலும் மீண்டும் ஒருமுறை அதே உண்மையை நம் கண் முன்னே கெக்கலி கொட்டிக் காண்பிக்கப் பட்ட நாள்தான் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்ட நாள். இனிமேலும் இந்தியா ஓர் மதச்சார்பற்ற நாடு என்று யாரேனும் சொல்ல முடியுமா?

பிரச்சினை இதுதான். இந்திய உச்சநீதிமன்றம் ஓரினச் சேர்க்கையை தண்டனைக்குரிய குற்றமாக அறிவித்திருக்கிறது.

எந்த அடிப்படையில்?

1. எயிட்ஸ் பரவும் வாய்ப்பு.

ஆண் - பெண் விபச்சார உடலுறவால் 4.94% 
ஆண் - ஆண் உடலுறவால் 7.23%
ஊசி மருந்து பயன்படுத்துபவர்களிடையே 10.30%
என அவர்களது தீர்ப்பிலே ஒரு புள்ளிவிபரம் கொடுக்கப்பட்டுள்ளது.

கொடுக்கப்பட்டுள்ள இந்தப் புள்ளிவிபரங்கள் சரியாக இருந்தால் கூட அதற்கு அவர்கள் கொடுத்திருக்கும் விளக்கம் உள்ளடிக் கருத்துடையது. 

ஆண் பெண் உடலுறவில் விபச்சாரத்தின் மூலமாக மட்டுமே அதாவது ஒரு ஆண் பல பெண்களுடனோ அல்லது ஒரு பெண் பல ஆண்களுடனோ உடலுறவு வைத்துக் கொண்டால் மட்டுமே அதுவும் “பாதுகாப்பற்ற” உறவு வைத்துக் கொண்டால் மட்டுமே எயிட்ஸ் பரவும் வாய்ப்பிருக்கிறது. ஒருவனுக்கு ஒருத்தி என்கிற உறவில் எயிட்ஸ் வருவதற்கோ, பரவுவதற்கோ வாய்ப்பில்லை.

ஆண் - ஆண் உறவும் அத்தகையதே என்பதை எளிதாக மறந்து விட்டு ஒட்டு மொத்தமாக எல்லா ஆண்-ஆண் உறவிலும் எயிட்ஸ் பரவும் என்பதுபோலச் சித்தரிக்கப்பட்டுள்ளது. உண்மை என்ன? ஆண்-ஆண் உறவிலும் ஒருவனுக்கு ஒருவன் என்கிற உறவில் எயிட்ஸ் பரவ வாய்ப்பில்லை. ஒரு ஆண் பல ஆண்களுடன் உறவு வைத்துக் கொண்டாலும்கூட பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப் படுமாயின் அங்கே எயிட்ஸ் என்கிறபேச்சுக்கே இடமில்லை. ஆண்-ஆண் உறவு என்பதே விபச்சாரம் என்பது போலச் சித்தரிப்பது முட்டாள்த்தனமானது. ஆண்-ஆண் உறவிலும் பெருமளவு ஒருவனுக்கு ஒருவன் என்பதும் ஆண்-பெண் உறவை விட அதிக அளவு “பொசசிவ்” ஆன உறவுகள் என்பதும்தான் உண்மை. ஆண் ஆண் உறவில் துரோகமிழைக்கப்படுமாயின் கொலை வரை நீண்ட சம்பவங்கள் பலவற்றை நாம் கேட்டிருக்கிறோம். ஆக எயிட்ஸ் என்கிற வாதம் எளிதில் அடிபட்டுப் போய்விடுகிறது.

ஆண் -பெண் ஒருவருக்கொருவர் சம்மதத்தோடு உறவு கொள்வதில் தவறில்லை. உறவின்போது பாதுகாப்பைக் கடைப்பிடியுங்கள் உறையைப் பயன்படுத்துங்கள் என அறிவுறுத்துவது போலவே ஆண் -ஆண் நண்பர்களுக்கும் அறிவுறுத்திட வேண்டும்.

2. இயற்கைக்கு மாறான உடலுறவு

ஆண்-ஆண் உறவு இயற்கைக்கு மாறானதுதான். அதே நேரத்தில் இயற்கைக்கு மாறான எதை மனிதன் செய்யவில்லை அதில் எதை இந்தியச் சட்டம் அனுமதிக்கவில்லை என்கிற கேள்வியைக் கேட்டுப்பாருங்கள்.

அடிப்படையில் உடையணிவதே இயற்கைக்கு மாறானதுதான். அம்மணமாகத் திரிவதுதான் இயற்கை.

பிற விடயங்களை விட்டுவிடுவோம் பாலுறவு குறித்த வகைகளிலேயே ஆண், பெண் சுய இன்பம் மற்றும் பெண்-பெண் உறவு போன்றவைகூட இயற்கைக்கு மாறானவை தானே? சுய இன்பத்தையோ, பெண்-பெண் கூடுவதையோ தடை செய்யவோ ஈடுபடுவோருக்குத் தண்டனை வழங்கவோ நீதி மன்றங்கள் முன்வருமா? :-) 

பெண்-பெண் கூடுவதிலோ, சுய இன்பத்திலோ உறுப்புகளுக்கிடையே “பெனிட்ரேசன்” இல்லை எயிட்ஸ் வர அல்லது பரவ வாய்ப்பில்லை எனக் கருதுவோர் மீண்டும் மேலே உள்ள பத்தியைப் படிக்கவும். பாதுகாப்பான உறவிலோ, ஒருவனுக்கு ஒருவன் என்கிற உறவிலோ எயிட்ஸ் என்னும் பேச்சுக்கே இடமில்லை.

ஒரு ஆணுக்கு ஆணோ.. பெண்ணோ.. யார் நண்பராக இருப்பதென்பதையும் அவர்களுக்கிடையேயான நட்பு எந்த அளவுக்கு இருக்கவேண்டுமென்பதிலோ நீதிமன்றம் எவ்வாறு தலையிடமுடியும்?

ஆக.. எந்த முகாந்திரமுமில்லாமல் ஏன் இந்தத் தீர்ப்பு? இங்கேதான் மத அடிப்படைவாதிகள் வருகிறார்கள். வழக்கமாக நீதிமன்றங்களிலும் மக்கள் மன்றங்களிலும் ஒருவருக்கொருவர் முட்டி மோதிக் கொள்ளும் எல்லா மதவாதிகளும் இவ்விடயத்தில் ஒன்றாகக் கைகோர்த்துள்ளனர். எல்லா மதப் புத்தகங்களிலும் ஆண்-ஆண் உறவு தவறானது என அறிவிக்கப்படுள்ளதாம். மனித உரிமைகளைவிட மத உரிமைகளுக்கு முன்னுரிமை கொடுக்கும் ஒரு நாடு எவ்வாறு மதச் சார்பற்ற நாடாக இருக்க முடியும்.

நீதி மன்றங்களிலே வாதிகள் இருவர் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருப்பின் அரசு வாக்குகளைக் குறிவைத்து மதச்சார்பற்ற நிலை எடுத்து நூறாண்டுகளுக்கு வழக்கை இழுத்தடிக்கும் அரசும், நீதிமன்றமும் மதவாதிகள் ஒன்று சேர்ந்து வரவும் மனித உரிமைகளின் மென்னியை முறிக்கிற வேலையில் இறங்கிவிடுகின்றன. இனி எவராவது இந்தியாவை மதச் சார்பற்ற நாடு என்று சொல்ல இயலுமா? மத அடிப்படைவாதிகளை மகிழ்விக்க உச்சநீதிமன்றம் இப்படியொரு பிற்போக்கான தீர்ப்பை வழங்கியதன் உலக அரங்கிலே மிகப்பெரும் தலைகுனிவைச் சந்தித்துள்ளது இந்தியா.

எத்தனையோ மிகமிக முக்கியத்துவம் வாய்ந்த வேலைகள் மூலையில் கிடக்க இனி பாராளுமன்றத்திலே அனைத்து உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டத் திருத்தம் கொண்டுவந்தால் மட்டுமே மனித உரிமை காக்கப்படும் துர்பாக்கிய நிலையில் கொண்டுவந்து விட்டுள்ளது இந்திய உச்சநீதி மன்றம்.

இந்திய சமூகத்தில் ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதென்பதே இன்னும் ஏட்டளவிலேதான் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கையிலே காதலென்றாலே குடும்ப கவுரவம், சாதி, மதம் லொட்டு லொசுக்கு எனச் சொல்லி கிட்டத்தட்ட அத்தனை காதலும் நசுக்கப்படுகிறன. அனைத்துக் காதலும் கள்ளத்தனமாகச் செய்ய வேண்டிய இழிவான நிலையிலேதான் வைத்திருக்கிறது இந்திய சமூகம். இதிலே நீதி மன்றங்கள் வந்து பாலியல் வறட்சியில் தவிக்கும் ஆணுக்கு வேற்று பாலின இணையை அதாவது பெண்களைப் பிடித்துத்தரும் வேலையைச் செய்து தருமா? மூன்றாம் பாலின நண்பர்கள் இருவரோ அல்லது வேறு ஆணுடனோ சேர்ந்து வாழ்வது குற்றம் என்று சொல்ல முடியுமா?

அப்படியென்றால் நீங்கள் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறீர்களா என்று என்னைக் கேட்டீர்களானால் எனது பதில்... அதிலே ஆதரிக்கவோ.. எதிர்க்கவோ ஒன்றுமில்லை என்பதுதான்.

4 கருத்துகள்:

  1. நல்ல முற்ப்போக்கு வாதி, இத அப்படியே தஞ்சாவூர் கல்வெட்டுல எழுதிவச்சுட்டு அங்கேயே உக்காந்துகுங்க பின்னாடி வர சந்ததி எல்லாம் படிச்சி தெரிஞ்சிக்குவாங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. :-) கல்வெட்டுலாம் பழங்காலம்ணே... இப்பலாம் வலைப்பதிவுதான். அதான் எழுதி வச்சுட்டேன் ;-)

      நீக்கு

  2. அப்படியென்றால் நீங்கள் ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கிறீர்களா என்று என்னைக் கேட்டீர்களானால் எனது பதில்... அதிலே ஆதரிக்கவோ.. எதிர்க்கவோ ஒன்றுமில்லை என்பதுதான்.//

    பதிவில் தங்கள் வாதம் எல்லாம்
    சிறப்பாக இருக்க முடிவில் மட்டுமேன் இப்படி ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆமாண்ணே... ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கவோ, எதிர்க்கவோ ஒன்றுமில்லை. ஆனால் ஓரினச் சேர்க்கை தண்டனைக்குரிய குற்றம் என்ற இபிகோ 377ம் அதை சரிதான் அறிவித்த நீதிமன்றத் தீர்ப்பும் மனித உரிமைகளுக்கு எதிராக இருப்பதால் எதிர்க்க வேண்டியதாகிறது. :-)

      நீக்கு